‘HCL-ன் தலைமை பொறுப்பை ஏற்கிறார், ரோஷினி நாடார் மல்ஹோத்ரா’ என்ற செய்திக்கு வந்த பெரும்பாலான பின்னூட்டங்கள் அவரின் பெயருக்கு பின்னால் உள்ள இரு வேறு குடும்பப்பெயர்களை சுட்டிக்காட்டியே வருகின்றன. வருடத்திற்கு சுமார் 71 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் 43 ஆண்டு கால வரலாற்றின் முதன் பெண் தலைமை, இந்திய தகவல் தொழில்நுட்ப உலகின் 3-ம் பெண் தலைமை என்பதைத் தாண்டி, இந்த (இணைய) உலகிற்கு அவரது குடும்ப பெயரே முன் நிற்பது அபத்தமா? அறிவின்மையா? என்பது புரியாத புதிர்.
1976-ல் ஷிவ் நாடாரால் 6 பொறியாளர்களால் தொடங்கப்பட்டது HCL சாம்ராஜியம், இன்று 1.5 லட்சம் பணியாளர்களுடன் 44 நாடுகளில், தகவல் தொழில் நுட்பம் மட்டுமல்லாது வானூர்தியியல், இராணுவம், மென்பொருள் உருவாக்கம், கொள்கலன் தயாரிப்பு, தொலைத் தொடர்பு சேவைகள், நுகர்வோர்க்கான மின்பொருட்கள், மருத்துவ சேவைகள் என பல துறைகளில் தனி முத்திரை பதித்து வருகிறது. ஷிவ் நாடாரின் ஒரே மகளாயினும் ஒரு மிகப் பெரிய சாம்ராஜியத்தின் தலைமை நாற்காலியில் அமர்வது எளிதான காரியமில்லை.
ஷிவ் நாடரின் பூர்வீகம் திருசெந்தூராக இருப்பினும், ரோஷினி வளர்ந்ததென்னவோ டெல்லியில் தான். ஊடகத்துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் சம்பந்தமாக இளங்கலைப் பட்டம் பெற்றார். கெல்லாக்ஸ் வணிகவியல் கல்லூரியில் (Kellogg School of Management) நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். படிப்பு முடிந்தவுடன் இங்கிலாந்தில் உள்ள ஸ்கை நியூஸ் மற்றும் உலகப்புகழ் பெற்ற அமெரிக்கா-வின் CNN தொலைகாட்சியிலும் செய்தி தயாரிப்பாளராக பணி புரிந்தார்.
தனது 27-ம் வயதில் HCL நிறுவனத்தில் இணைந்தார். தலைமை நிர்வாகியாக திறம்பட நிர்வகித்தார்.ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் செயல்பட்டு வருகிறார். சிறந்த கல்வி முறை மூலம் தலை சிறந்த தலைவர்களை உருவாக்குவதே இந்த அறக்கட்டளையின் லட்சியம். இந்த அறக்கட்டளையின் முக்கிய அங்கமான ‘வித்யா கியான்’ (VidyaGyan) அமைப்பு நிறுவியதிலும் மிகச் சிறப்பாக செயல்படுத்திக்கொண்டிருப்பதிலும் முதன்மைப் பங்கு ரோஷினியுடையது. உத்திரபிரதேசத்தின் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி, விளையாட்டு, அறிவியல் போன்ற அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான பயிற்சி அளித்து நம் நாட்டின் திறமையான எதிர்காலத்தை உருவாக்கி வருகிறார். VidyaGyan மூலம் இவர் நடத்தி வரும் உண்டு, உறைவிடப்பள்ளியில் ஏறத்தாழ 2000-கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு கல்வி மட்டுமல்லாது, கணினி பயிற்சி, கலை அரங்கம், அறிவியல் ஆய்வகம், கணித பயிற்சிகூடம், சர்வதேச தரத்திலான உள்/வெளி விளையாட்டு அரங்கங்கள் என்று வியக்க வைக்கும் கட்டமைப்பு வசதிகளுடன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிவ்நாடார் அறக்கட்டளையின் மூலம் சென்னையில் சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியை இலாப நோக்கம் இல்லாமல் நடத்திவருகிறார்.
சமூக அக்கறையில் இதோடு, நின்று விடவில்லை ரோஷினி. எவரும் யோசிக்காத ஒரு விஷயத்தை செய்து கொண்டு இருக்கிறார். இயற்கையின் மீதும், மற்ற உயிரினங்கள் மீதும் இயல்பிலேயே அன்பும் அக்கறையும் கொண்டவர். அவரது இந்த குணம் தான், ‘The Habitats Trust’ அமைப்பை 2018-ல் தொடங்க வைத்தது. இந்த அமைப்பு இந்தியாவின் இயற்கை வாழ்விடங்களையும் அதன் பூர்வீக உயிரினங்களையும் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
ரோஷினி-யின் தொழில் மற்றும் சமூக செயல்பாட்டிற்கு பல விருதுகளும் கௌரவங்களும் அவருக்கு கிடைத்துள்ளது. உலகப் புகழ் பெற்ற ‘போர்ப்ஸ்’ (FORBES) பத்திரிக்கையின் உலகின் ஆளுமை மிக்க 100 பெண்மணிகள் வரிசையில் தொடர்ந்து 3 வருடங்களாக இடம் பிடித்து வருகிறார். 2014ம் ஆண்டுக்கான இளம் வள்ளல் பட்டத்தை என்டிடிவி வழங்கியுள்ளது.
மிகச்சிறந்த இசை திறமையும் மற்றும் யோகாவில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். HCL Healthcare-ன் துணை தலைவர், ஷிகர் மல்ஹோத்திரா தான் இவரது கணவர், ஆர்மன், ஜஹான் என்று இரு மகன்ளுடன் அழகான குடும்பம்.
சமூக வலைதளங்களில்அதிகம் ஆர்வம் இல்லாமல் இருந்தவர், HCL தலைவராக பொறுப்பேற்ற பின் தான், Instagram-ல் இணைந்தார். பணியிடத்தில் நிறைய பெண் தலைமைகளை பார்க்க விரும்புவதாகவும், அதற்கான முன்னெடுப்புகளை செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார். ஏறத்தாழ 37000 கோடி சொத்துக்களுடன், இந்தியாவின் முதல் பணக்கார பெண்மணியாக இருக்கிறார். தலைசிறந்த ஆளுமையும் சமூக அக்கறையும் கொண்ட ரோஷினியின் தலைமையில் HCL மேலும் பல சாதனைகள் புரியும் என்பதில் ஐய்யமில்லை!
— தொடரும்.
(அடுத்த வாரம்: கணித மேதை சகுந்தலா தேவியை கண் முன் நிறுத்திய வித்யா பாலன்)
சிவரஞ்சனி ராஜெஷ் மென்பொருள் பொறியாளர். எழுதுவது பிடிக்கும் - புத்தகம் எழுதியதில்லை. பெரிய பெரிய பத்திரிக்கைகளில் கட்டுரைகள எழுதியதில்லை. ஒரெ ஒரு சின்ன வலைப்பூ, இணைய இதழ்களில், சில சிற்றிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். படிப்பது பிடிக்கும் - இலக்கியங்கள் அவ்வளவும் படித்ததில்லை. தமிழ் ஜாம்பவாங்களின் புத்தகங்கள் கரைத்துக் குடித்ததில்லை. ப(பி)டித்த புத்தகங்கள் பல உண்டு. எதார்த்த வாழ்க்கைகயை புத்தகங்
களில் வேறு பரிணாமத்தில் படிக்கப் பிடிக்கும். சமைக்க பிடிக்கும் - அதைவிட வகையாக சாப்பிடுவது பிடிக்கும். (கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்)
இவையெல்லாம் விட, சின்ன சின்ன சந்தொஷங்கள் மிகப் பிடிக்கும்.