மஹாபாரதத்தில் அலைக்கழிக்கப்பட்ட பெண்

அம்பை - மகாபாரதம்; Ambai in Mahabharatham. drawn by ...

மஹாபாரதம் என்னும் மகா காவியம் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். எண்ணற்ற கதாபாத்திரங்கள் இருந்தாலும் சில கதாபத்திரங்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திடும்.குறிப்பாக மஹாபாரதத்தில் பெண்களின் பங்களிப்பு மிக மிக அதிகமே. புவியைச் சுற்றியுள்ள பிரபஞ்சமாய் அவர்கள் அதில் நிறைந்து இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நாம் அறிந்ததும்.. அறியாததுமாய் பல நிகழ்வுகள் பரவிக் கிடக்கின்றது.  அந்த வகையில்.. இந்த வாரம் மகாபாரதத்தின் அற்புத சகாப்தமான பீஷ்மரை அழிக்க வல்ல சக்தியாக விளங்கிய  மிக மிக முக்கிய கதாபாத்திரமான அம்பையை பற்றிக் காண்போம்.

    காசிராஜனின் தலை மகள்.. அழகில் அலை மகள்., கவின்மிகு கலை மகள்., மனங்கவர் மலை மகள்.. அவளே அழகிய அம்பை.. அவள் தன்னிகரற்றவள். காதலினால் துயருற்றவள்.

   சுயம்வரத்தில் தன் மனம்நிறை காதலன்.. சால்வனை மணம் புரிய காதல் கனவுகளை கண்களில் நெய்தவள். இரு விழிகள் கலந்து இதயம் நுழைந்த காதலை தன்னுள் வியாபித்துக் கொண்டவள். ஆசை மலர்களால் மாலை தொடுத்து சால்வனுக்கு சூட்டி.. அவன் கரம் பற்றும் வரம் வேண்டி நின்றாள். கண்களில் தாபமும், மோகமும் நிறைந்திருக்க தனக்குரியவனை சேர்வதற்கு காத்து நின்றாள். அவள் உயிர் கலந்த அவனும் அவளை தன்னுரிமையாக்கிக் கொள்ள எதிர்பார்த்து நின்றான். ஆனால்.. விதி வலியது அல்லவா! அவரவர் ஊழ்வினைப்படிதான் நிகழ்வுகள் நடைபெறும். விதியை மதியால் வெல்லக் கூடுமோ..யார் அறியக் கூடும். அம்பையின் விதியோ பீஷ்மரின் வடிவில் வந்தது. இதில் தான் காலத்தின் சூட்சுமம் உள்ளது. மாயங்கள் நிறைந்த அதில் மனம் உழன்று கொண்டேதான்  இருக்கும். அவளின் விதியாய் பீஷ்மர் வந்ததாலோ என்னவோ அவரின் வாழ்வை முடிக்கும் விதியாய் அவளும் மாறிப்போனாள்.

   சுயம்வரத்தில் கலந்து கொள்வதற்காக வரவில்லை பீஷ்மர்., அன்னையின் ஆணையை ஏற்ற அவர் தன் தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் புதல்விகளை கவர்ந்து செல்வதற்காகவே வந்தார். எனவே அம்பையின் ஆசையை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். அவரறியாமல் அவர் அவளுக்கிழைத்த தீங்கு அதுவேதான். விதியென்னும் பெருவெள்ளமானது தன் அலைகளால் இழுத்துச் செல்லும்போது எவராலும் தடுக்கவோ.. தவிர்க்கவோ முடியாது அல்லவா.

      பீஷ்மரின் பராக்கிரமத்தை அறிந்த மற்ற அரசர்கள் பயந்தும், மரியாதையின் நிமித்தமும் விலகி விட்டனர்.  சிலரோ பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் சுயம்வரத்திற்கு வருவதேனோ என்று கேலி பேசினர். இன்னும் சிலரோ தம்மீது கொண்ட நம்பிக்கையினால் அவருடன் போரிட முயன்றனர். முயன்றார்களே தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. புயலை எதிர்த்துப் போரிட முடியாது அல்லவா. ஆனால் சால்வன் மட்டுமே தனக்கென பூத்திட்ட புது மலரை புயல் காற்றில் வீழ்ந்திடாமல் போராடினான். பிதாமகரோ மூன்று பெண்களையும் தனது தேரில் கவர்ந்து  சென்றார். சற்று தொலைவு வரை சால்வனும் தொடர்ந்து வந்து போராடினான். ஆயினும் காக்க முடியவில்லை. வெற்றிமலரை அவரிடமே சமர்ப்பித்து விட்டு தோல்வியுடன் திரும்பினான். இந்நிகழ்வு முந்தைய தலைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. பொதுவாக தன்னை மணம் புரிய பெண்தான் நிபந்தனை விதிப்பாள்.. பீஷ்மரின் தாய் கங்காதேவியும்.. இரண்டாவது தாய் சத்தியவதியும் பெரும் நிபந்தனை இட்டே பீஷ்மரின் தந்தை சந்தனு மகாராஜாவை திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போதோ பெண் அபகரித்துச் செல்லப் படுவது முதல் முறை.

                 அழகிய அம்பையோ எவரும் எதிர் கொள்ளத் தயங்கும் பேராற்றல் மிக்கவரான பிதாமகரை சால்வன் எதிர்ப்பது கண்டு பெரும் உவகை கொண்டாள். எப்படியாகிலும் தன்னையும் அவனோடு அழைத்துச் சென்று விடுவான் என்று மிகவும் நம்பினாள். ஆனால் காதல் கனவுகள் கண் முன்னே சிதறுவது கண்டு நொறுங்கிப் போனாள்.

              பின் உண்மை அறிந்ததும் பிதாமகர் சகல மரியாதையுடன் அவளை சால்வனிடம் அனுப்பி வைத்தார். ஆனால் அவனோ மற்றவரால் கவரப்பட்ட பெண்ணை நான் ஏற்க மாட்டேன்  இனி உன்னை  ஏற்க முடியாது என்று உறுதியாய் மறுத்து விட்டான். பீஷ்மர் யாருக்காக அவளை கவர்ந்து வந்தாரோ அந்த விசித்திர வீரியனும் அவளை ஏற்கவில்லை.

 இறுதியில் அவள் எனை வென்ற நீரே எமை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பீஷ்மரிடம் வேண்டினாள். ஆனால் அவரோ தன்னால் பிரம்மச்சரிய விரதம் விடலாகாது என்று உறுதியாகவும்., இறுதியாகவும் மறுத்து விட்டார்.. ஒருவேளை பிதாமகர் அவளை  ஏற்றுக் கொண்டிருந்தால் எல்லாமே மாறியிருந்திருக்கும்.. அவரது விந்தணுவிலிருந்து புறப்படும் வீரர்கள் ஒவ்வொருவரும் தியாகசீலராய் இருந்திருப்பர். பின்னாளில் குருஷேத்திரப்போரே ஏற்பட்டிருக்காது.ஆனால் காலத்தின் கணக்கு அதுவல்லவே.

 அம்பையும் தனை ஏற்றுக்கொள்ளுமாறு சால்வனிடமும், பீஷ்மரிடமும் தொடர்ந்து ஆறு வருடங்கள் மாற்றி மாற்றிப் போராடிக் களைத்து வாழ்க்கையே வெறுத்துப் போனாள். ஒரு நாட்டின் அரசியாய் சகல வசதிகளுடனும். கணவன்.. பிள்ளைகள் என்று வாழ வேண்டியவளை இந்நிலை பெரிதும் வாட்டியது. தனிமையும், கழிவிரக்கமும் அவளுள் பெரும் கனலை மூட்டியது. இறுதியில் இந்நிலைக்கு தன்னை ஆளாக்கிய பீஷ்மரை அழிப்பதே தன் இலட்சியம் என்று துணிந்தாள்.

        இமயமலைச் சாரலில் பாகூத நதிக்கரையில் தன் கால் கட்டை விரலை மட்டும் ஊன்றி.. ஒன்றல்ல.. இரண்டல்ல…மொத்தம் பனிரெண்டு வருடங்கள் முருகப் பெருமானை வேண்டி கடும் தவம் புரிந்தாள். அவளின் கடுந்தவத்தின் பலனாய்..அவள் முன் முருகப்பெருமான் காட்சி தந்து அவளிடம் தாமரை மாலையை கொடுத்து “இனி உன் துன்பம் தொலையும்.. அழகிய இந்த தாமரை மாலையை அணிபவனால் பீஷ்மர் மரணமடைவார்” என்று கூறி மறைந்தார். பின் அம்பை அம்மாலையைக் கொண்டு பல அரசர்களைச் சந்தித்து இந்த மாலையை அணிபவர் பீஷ்மரைக் கொல்லும் வல்லமை பெறுவர்.. அப்படி யாரவது பீஷ்மரைக் கொன்றுவிட்டால்.. அந்த வல்லமை படைத்தவரையே நான் மணந்து கொள்கிறேன் என்றாள். ஆனால் பிதாமகரிடம் கொண்டுள்ள பயத்தால் ஒருவரும் அவளின் வார்த்தையை ஏற்கவில்லை. கடைசியில் துருபத மன்னனிடம் சென்று வேண்டினாள் அவனும் மறுக்கவே அம்மாலையை அவனின் அரண்மனையிலேயே வீசிவிட்டு சென்றுவிட்டாள்.  கோபத்திலும்.. வருத்தத்திலும் காலங்கள் கடந்து கொண்டே இருந்தது.

       பின் அவளின் பெரு முயற்சியால் பீஷ்மரின் குரு பரசுராமரும் அவளுக்காக போராடினார் எதுவும் நடக்க வில்லை.

           அழகும், இளமையும் சிதைவுற.. உள்ளத்தின் கனல் உடலெல்லாம்  தகிக்க.. தன்னிலைக் குறித்து சிவபெருமானை வேண்டி கடும்தவம் புரிந்தாள். அவளின் தவத்தின் பலனாய் அவள் முன் தோன்றிய சிவபெருமான் அவளால் இந்த பிறவியில் பீஷ்மரை அழிக்க முடியாது, அடுத்த பிறவியில்.. அதுவும் பீஷ்மரின் அனுமதியோடு அவரை அழிக்கலாம் என்றதும்.. தன் எண்ணத்தை நிறைவேற்ற.. தாமதியாமல்  சட்டென்று நெருப்பை வளர்த்து அதில் தன்னை மாய்த்துக் கொண்டாள்.

            வாழ்க்கை மிகவும் விசித்திரமானது.. விரும்புவதை தராமல்.. அலைக்கழித்து.. அழ வைத்து வேடிக்கை பார்க்கும். மன்னன் மகளாகப் பிறந்து, சிறப்புற வளர்ந்து, மணமேடை வரை வந்து வாழ்வின் திசை மாறிப்போனவள் அம்பை..

தந்தையிடமும் போக முடியாமல், காதலனால் நிராகரிக்கப்பட்டு, கவர்ந்து சென்றவராலும் மறுக்கப்பட்டு.. வாழ்வை தொலைத்து.. இளமையும், அழகும் தனை வதைக்க.. தவித்து நின்றவள்.

       ஏக்கமும்.. இயலாமையும் அவளை வாட்டி வதைத்து.. வஞ்சத்தை அவள் நெஞ்சத்தில் விதைத்தது. பின்னாளில் சிகண்டியாய் பிறந்து பீஷ்மரின் இறப்புக்கு காரணாமாய் மாறி தன் பழியை தீர்த்துக் கொண்டாள் அம்பை.

  -ப்ரியா பிரபு

Back To Top