ஒரு குட்டி கதை சொல்லட்டா?
அது ஒரு சர்வதேச குளிர்பான நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் மகள் அவரது தனி செயளாளருக்கு போன் செய்து, தன் தாயிடம் பேச வேண்டும் என்று கூறுகிறாள். என்ன காரணம் என்று உரிமையாய் செயளாளர் கேட்க, ‘வீடியோ கேம் விளையாட அனுமதி வேண்டி பேச வேண்டும்’ என்று பதில் அளிக்கிறார். உடனேஅவர், ‘வீட்டுபாடம் செய்தாகிவிட்டதா? சிற்றுண்டி சாப்பிட்டாகிவிட்டதா? சரி, நீங்கள் விளையாடலாம்’ என்று தன் வீட்டு பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிவிட்டு, தலைமை நிர்வாக அதிகாரியான அம்மாவிற்கும், குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தன் வேலையை பார்க்களானார்.
இது நடந்தது உலகின் 4-வது பெரிய குளிர்பான நிறுவனமான PEPSI CO-வில். ஆம், அவரே தான். இந்திரா நூயி.
PEPSI என்று சொன்னவுடன் குளிர்பானத்தை விட நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இந்திரா நூயி.
தமிழ் நாட்டுப் பெண், அமெரிக்க கம்பனியில் தலைமை செயல் அதிகாரி என்பதைத் தவிர நம்மில் பலருக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. தெரிந்து கொள்வோம் இந்தக் கட்டுரையில்.
1955, அக்டோபர் 28 அன்று சென்னையில் பிறந்தார், இந்திரா கிருஷணமூர்த்தி. அவரது தந்தை வங்கி ஊழியர். தனது பள்ளிப்படிப்பையும், இளங்கலைகல்லூரிப்படிப்பையும் சென்னையில் முடித்தார்.
பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற கனவை விதைத்ததில் இந்திராவின் அம்மாவிற்கு பெறும் பங்குண்டு. அவர்தான் தினமும் இரவு உணவு அருந்திய பின், தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இந்திராவைவும், அவரது சகோதரியும் பேச சொல்லி போட்டி வைப்பாராம், அதில் சிறந்ததை தேர்வு செய்து ஊக்கமளித்துகொண்டே வந்ததாக நிறைய நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார்.
இளங்கலை படிப்பை சென்னையில் முடித்தவுடன், IIM கல்கத்தா-வில் முதுகலையை முடித்து விட்டு, ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் பணி செய்த போது, பெண்களுக்கான சானிடரி நாப்கின் தயாரித்து சந்தைபடுத்தியதில் முக்கிய பங்கு இந்திராவுடையது. சிறப்பாகவே போய்க்கொண்டிருந்த அவரது பணிவாழ்க்கையில் இன்னும் பெரிய உயரங்களை எட்ட விரும்பினார். உலகின் மிக மதிப்புவாய்ந்த ‘யேல்’ (Yale) பல்கலைகழகத்தில் மேலாண்மை படிக்க அமெரிக்கா சென்றார்.
சென்னை-யில் பிறந்த நடுத்தர குடும்பத்து பெண், நிறைய கனவுகளுடன், கொஞ்சம் பணத்துடனும்
அமெரிக்காவில் படித்த போது, நேர்முகத்தேர்வுக்கு செல்லும் தன் நண்பர்கள் கோட்- சூட் அணிந்து செல்வதைப் பார்த்து, தனக்கும் கோட் வாங்க நினைத்தார்.
ஆனால், அதற்கான 50 டாலர் பணம் தன்னிடம் இல்லாததால், பகுதி நேரமாக ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து ஒரு கோட்-சூட் வாங்கி நேர்காணலுக்கு சென்றார். ஆனால், அது அவருக்கு அதை அணிவதற்கு வசதியாக இல்லை. அதனாலேயே அவரால் நேர்முகத்தேர்வை சரியாக செய்யாமல்,
அந்த வேலை கிடைக்கவில்லை.இதை அவரது விரிவுரையாளரிடம் சொல்லிய போது, ‘Be Yourself’ (நீ, நீயாக இரு) என்று கூறினார்.
அதிலிருந்து தனக்கு எது சரியாக, வசதியாக எது இருக்கிறதோ அதையே தான் செய்வார். PEPSICO வின் CEO-வாக இருந்த போது கூட அடிக்கடி தனக்குப் பிடித்த சேலையிலேயே அடிக்கடி அலுவலகம் செல்வார், அதனாலேயே அவருக்கு ‘CEO of Saree’ என்ற ஒரு செல்லப் பேரும் உண்டு. அமெரிக்காவில் படித்து முடித்து நல்ல வேலையும் கிடைத்தாகிவிட்டது,
ஆனாலும், அந்த வேலையில் முத்திரை பறிக்க இரண்டு விசயங்கள் முட்டுக்கட்டையாக இருந்தன.
1 – அவர் அமெரிக்கர் அல்ல,
2 – அவர் ஒரு பெண்.
இதையெல்லாம் தாண்டி அவரது திறமையை நிரூபிக்க பல மடங்கு வேலை செய்யவேண்டியிருந்தது.
“தினமும் காலை எழும்போது, ஒரு ஆரொக்கியமான பயம் என் மனதில் இருக்கும், இந்த உலகம்
வேகமாக சுழல்கிறது, நாம் இன்னும் வேகமாக ஓட வேண்டும்” என்று தனக்குள்ளாகவே கூறிக்கொள்வாறாம் இந்திரா.
1994-இல், தன்னுடைய 44-ம் வயதில், PEPSI CO -வில் சேர்ந்தார். அன்றிலிருந்து பெப்சி-யின் முக்கியமான நகர்வுகளில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். அடிக்கடி, விற்பனை அங்காடிகளுக்கு சென்று, தன் நிறுவன பொருட்கள் எவ்வாறு, காட்சி படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து அதிலுள்ள குறை/நிறைகளை ஊழியர்களிடம் சொல்வார். நாம் ஒரு விற்பனையாளர் என்பதை விட, ‘நுகர்வோர்’ என்று தன் ஊழியர்களிடம் அடிக்கடி கூறுவார்.
PEPSI என்றாலே, உடல் நலத்திற்கு ஏற்றதில்லை, என்பதை மாற்றியதில் இவருக்கு பெரும்பங்குண்டு. ‘
Tropicana’ & ‘Quaker’ நிறுவனங்களை வாங்கியதன் மூலம்,ஆரொக்கியமான பழ ரசங்கள், உணவு தானியங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தியது.
இதற்கெல்லாம் மூலக்காரணம் இந்திராவே தான். இவருடைய மற்றொரு வெற்றி மந்திரம், தன் ஊழியர்களையும் தன் மற்றொரு குடும்பமாக பார்ப்பது. வேலை-வாழ்வு சமன்நிலை-யை கண்டிப்பாக கடைபிடிக்க வைப்பார். ஒரு நிறுவனம் அதி வேகத்தில் செல்ல சிறந்த ஊழியர்கள் இருந்தால் மட்டுமே முடியும் என்பார்.
ஒரு நேர்காணலில், தான் சிறந்த அம்மாவாக என்றுமே இருந்ததில்லை என்று கூறியிருக்கிறார். தன் மகள்களின் பள்ளி பெற்றொர் சந்திப்பிற்கு பல நாட்கள் சென்றதில்லை என்றும் வருத்தப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு வெற்றியாளர்களுக்கு பின்னாலும் (ஆணென்ன? பெண்ணென்ன?) நிச்சயம், அவரது குடும்பம் / குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்திராவின் இந்த வெற்றிக்கு அவரது கணவரின் பங்கு மிக முக்கியமானது, மனைவியின் பணிக்கு முழு சுதந்திரம் குடுத்து, அவர்களது வெற்றியை, வளர்ச்சியை ரசிக்கும் கணவன்மார்கள் இங்கு மிகக்குறைவு.
இந்திரா PEPSI CO-வின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று, அதன் வருவாயை 2.5 மடங்கு பெருக்கியிருக்கிறார்.
பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் அலுவலகத்தில் இருக்கும் போது பிரசர் குக்கராக இருப்பவர், வீட்டிற்கு வந்ததும் ஒரு தாயாக, மனைவியாக, மகளாக மாறிவிடுவதாக கூறியிருக்கிறார்.
ஒரு நாளில் 18 மணி நேரம் அவர் வீட்டில் கர்னாடக இசை ஒலித்துக்கோண்டே இருக்கும், இசையும் பக்தியும் இந்திராவிற்கு பிடித்த விஷயங்கள்.
7 ஆண்டுகள் PEPSI CO -வின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இவர், மொத்தம் 12 வருடங்கள் PEPSI CO-வில் பணி புரிந்துள்ளார். 2019, மார்ச் மாதம் முதல் அமேசான் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பணிபுரிந்து வருகிறார்.
மேலாணமை மட்டுமல்ல இவர் சிறந்த கிரிகெட் ஆட்டக்காரர், சர்வதேச கிரிகெட் குழுவின் இயக்குனர்களுள் ஒருவராகவும் இருக்கிறார்.
பெரிய பெரிய கனவுகள், அதை விட பெரிய லட்சியங்கள், இவற்றுடன் கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்!
-சந்திப்போம் சிவரஞ்சனி