‘காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”
அப்டீன்னு சொன்னாரில்ல பாரதியார்………….?”
“ ஆமாமா…., கரெக்டு…. சொன்னாரு….. புத்தகத்துல படிச்சது நினைவுக்கு வருது…….ஆமா, என்ன திடீர்னு… இப்ப இந்த ஞானம்….? என்று கேட்பது எனக்குப் புரிகிறது. அதற்கான காரணம் இருக்கிறது.
ஒரு நீண்ட நாளின் முடிவில், மங்கிய மாலை நேரத்தில் , வீட்டு பால்கனியிலிருந்து வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். கீழ் தளத்தின் சன் ஷேடில்….ஒய்யாரமாக நடை போட்டுக்கொண்டிருந்தன இரண்டு மைனாக்கள். பழுப்பு மேனியில், மஞ்சள் நிறத்தில் மை தீட்டியது போல அழகான கண்கள். இப்படியும் அப்படியுமாக, தலையை ஆட்டியபடி, நடந்துக்கொண்டிருந்தன…… , எந்தவித அச்சமும் இல்லாமல்.
சென்னை மாநகரத்தின் முக்கியமான பல இடங்களிலும் நெடிதுயர்ந்த அடுக்குமாடிக்குடியிருப்புகளே அதிகம். தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போல சிறியதும், பெரியதுமான வீடுகள்….. மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகள்….., பரபரப்பான வாழ்க்கை.
இதில், சில பகுதிகளில் அமைந்துள்ள……., உயர்ந்து நிற்கும் பல அடுக்குமாடிக்குடியிருப்புகளில், புறாக்கள் வாசம் செய்வதுண்டு…..அவற்றின் எச்சம் விழுந்த இடங்கள் ….கீழே, தரைத்தளத்தில் தெளிவாகத் தெரியும்…..புகைபோக்கிக்கான பொந்துகளையும்….உபயோகப்படுத்தாமல் பொருட்களை போட்டு வைத்திருக்கும் பால்கனிகளையும்…..தங்களுடைய தங்குமிடமாக மாற்ற அவை முயற்சிக்கும்…..பெரும்பாலும், சாம்பல் நிறப் புறாக்களே அதிகம் …..அவற்றின் பளபளக்கும் பச்சை நிறக் கழுத்தும்….., இங்குமங்கும் படபடவென இறக்கைகளை அடித்துக்கொண்டு..தளத்துக்கு தளம் பால்கனியை ஒட்டிப் பறப்பதையும் பார்க்க மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்….இதை விட்டால்…, சில காக்கைகளைப் பார்க்கலாம். மைனா, காக்கை, புறா, குருவி, குயில் , கிளி, என பார்க்கக்கூடிய பறவைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். சென்னையின் மையப் பகுதியில் பிற பறவைகளை அதிகம் பார்க்கமுடியாது.
இதற்கு விதிவிலக்கு…….பள்ளிக்கரணை போன்ற சதுப்புநிலப்பகுதிகளில் பார்க்கக்கூடிய நீர்ப்பறவைகள். அதனால், “பெரும்பாலும் நாம் பார்க்கும் இடங்களில்….” என்ற வார்த்தைக்குள் அவை வராது.
அழகான குட்டி அணிலின் விளையாட்டை சிறு வயதில் பார்த்து ரசித்த நம்மில் பலர்…இப்போது அவற்றையெல்லாம்…யூ டியூபில் குழந்தைகளுக்குக் காட்டுகிறோம். இதற்கு விதிவிலக்காக…,
நகரின் முக்கியப் பகுதிகளிலேயே…., குறிப்பிட்ட சில இடங்களில் மரங்கள் அடர்ந்திருக்கும். இது போன்ற இடங்களில்…., .இந்த நிலை சற்றே மாறுபடலாம். ஆனால், பெரும்பாலான இடங்களின் நிலை இதுதான்.
சரி, ஏதோ ஒரு பிரச்சினைக்காக நாம் டாக்டரிடம் போகும்போது….அவர் நீளமான மாத்திரை லிஸ்ட் கொடுத்தால்…..அடுத்த நிமிடம் நம்மில் பலர் கேட்கும் கேள்வி, “டாக்டர்…..இவ்ளோ மாத்திரையா….? இதுக்கு பக்க விளைவுகள் இருக்குமா………?” என்பது. சில டாக்டர்கள் சிரித்துக்கொண்டே பதில் சொல்வார்கள்…சிலர் கோபப்படுவதும் உண்டு. அது போல, ஊரடங்கு கொரோனாவுக்காகப் போடப்பட்டதாக இருந்தாலும், அதன் பக்க விளைவுகள் வாழ்க்கையை நமக்கு வேறு கோணத்தில் காட்டி…. சில நேரங்களில் சிறப்பாகவே
உள்ளது. அவற்றில் ஒன்றுதான்….பறவைகள், விலங்குகள் ஆகியவை ….தங்களின் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது.
வாட்சப்பில் நம்மில் பலருக்கு ஒரு வைரல் வீடியோ வந்திருக்கும். பரபரப்பான தியாகராயநகரின் பாண்டி பஜாரில் …..வெறிச்சோடிய சாலையும்….ஒரு பழைய…மரத்தின் பொந்தில்…..கொஞ்சும் கிளிகளும்…அவற்றின் ‘கீ..கீ’ என்ற சப்தமும்…..அப்பப்பா….பார்க்கும்போதே மனதில் உற்சாகம் பற்றிக்கொள்ளும்.
இத்தனை காலங்களும் அவை வெளிநாட்டிலா இருந்தன…..? இல்லை, இங்கேதான் இருந்தன. நாம் வாழும் பூமி சகல ஜீவராசிகளுக்கும் சொந்தமானதுதான். இப்போது நாம் கொஞ்சம் அடங்கியிருப்பதால், அவை வெளியே வருகின்றன.
ஒலி மாசு (Noise pollution ) நிறைந்த சாலைகள்…. , அழகை ரசிக்கும் மனநிலையில் இருக்கமுடியாத சூழ்நிலைகள்…., போக்குவரத்து நெரிசலால் பல நிமிடங்கள் சாலைகளில் நின்றபோது கூட கண்ணில் படாத இதே பறவைகள்….இப்போது எங்கிருந்து வந்தன…?
இப்படியெல்லாம் சொல்வதால், கட்டடங்களெல்லாம் காடுகளாக வேண்டியதில்லை. எழுத்தாளருக்கோ, பாடகருக்கோ, நடனமணிகளுக்கோ… அல்லது பிற கலைஞர்களுக்கோ….ஊக்குவிப்பும்… பாராட்டும்… அவர்களை உரம் போட்டு வளர்க்கும். அப்படித்தான் இந்தப் பறவைகளும்…….அவற்றின் அழகை…. குரலை… நடையை….பறப்பதை….நாம் ரசிக்கும்போது…அவைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வும் மேம்படும்…..
“இருக்கிற வேலைல இதெல்லாம் ஒரு வேலையா………..? “ என்ற கேள்வி எழலாம். வேலைகள் எப்போதுமே இருக்கும்…..வாழும் காலம் முழுவதும்…. வேலைகளின் பின்னே ஓடிக்கழித்துவிட்டு…..கடந்து போன காலங்களைத் திரும்பப் பெற முடியுமா….?
குழந்தைகளுக்கு ரசனையைக் கற்றுக் கொடுப்போம்….கைபேசி விளையாட்டிலிருந்தும் மடிக்கணினி தாலாட்டிலிருந்தும் மாற்றி….வான் வெளியில் சந்தோஷமாகப் பறந்து போகும் பறவைகளைப் பார்க்கச் சொல்லலாம்..அவைகளின் குரலைக் கேட்கச் சொல்லலாம்.
பறவைக்கான உணவூட்டும் தட்டு, தண்ணீர் தரும் அமைப்பு என்று ஏகப்பட்ட விஷயங்கள் வலைத்தளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. தானாகவே கற்றுக்கொள்ளும் வகையில்….எளிமையான வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம். அது போன்ற ப்ராஜெக்டைக் கொடுத்து செய்யச் சொல்லும்போது….ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பினாலும்…..பறவைகளை ரசிப்பதும், உணவு கொடுப்பதும் ஊரடங்கின் ஒரு நல்ல பக்கவிளைவாக இருக்குமில்லையா………?
ம்….இதோ, மைனாக்கள் ஒய்யாரமாக நடந்து அதன் கேட் வாக்கை முடித்துக்கொண்டு சந்தோஷமாகப் பறக்கின்றன. வானொலியில் கருத்தம்மா படத்திலிருந்து யாரோ ஒரு நேயர் பாடலைக் கேட்க, அந்தப் பாடல் என் காதில் விழுந்தது. இதோ, அது உங்களுக்காக…..
“பச்சக்கிளி பாடும் ஊரு…பஞ்சுமெத்தப் புல்லப் பாரு…..”
ஆசையாக இருக்கிறது இல்லையா…..? முயற்சியை ஆரம்பிக்கலாம்.
இனிய பகிர்தலுடன், மாலா ரமேஷ்