வாரக்கடைசியில் மதிய வேளையில் புது வித உணவு சமைக்கலாம் என்று ஆரம்பித்து, அதை உண்ட மயக்கத்தில் அனைவருமிருக்க…..,
“மாலா சிஸ்….உங்க வீட்டு ஆளுங்க வயிறு முட்ட சாப்பிட்டதால வந்த மயக்கமா? இல்ல….நீங்க செஞ்ச புது உணவின் விளைவா…..? “அப்டீன்ற உங்களோட மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடுச்சு….. நிச்சயமா அது நல்லா மூக்கப் பிடிக்க சாப்பிட்டதன் விளைவா வந்த மயக்கம்தான்…” உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு” இல்லையா…?
அந்த நேரத்தில், நான் மட்டும் அவசரமாக ஓடிப்போய்… எல்லா பால்கனி கதவுகளையும் நோட்டம் விட்டேன். சரியாக ஸ்டாப்பர் போடாத கதவுகள் எதிர்பாராத நேரத்தில் காற்றடிக்கும்போது, படாரென அடிக்கும். அப்போது ஏற்படும் மன அதிர்ச்சியை வார்தைகளில் சொல்லமுடியாது. அனுபவம்தான் சொல்லும். சில பேருக்கு அந்த அனுபவம் இருக்கலாம். அதுவும் அவரவர் வாழும் அடுக்கு மாடித் தளத்தின் உயரம் கூடும்போது கேட்கவே வேண்டாம். எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு, அவசர அவசரமாகத் தலை சீவி, முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு, முகக்கவசம் போடாமல் தயாரானேன்.
“என்ன கொழுப்பு இருக்கணும் உங்களுக்கு……? முகக்கவசம் போடாதவங்கள ஏலியன்னு திட்டிட்டு …இப்ப, முகக்கவசம் போடாம மேக்கப்போட எங்க கிளம்பிட்டீங்க….? ன்னுதானே கேக்கறீங்க…..
தோழிகள் எல்லாம் சேர்ந்து அரட்டை அடிக்கிறதுக்காகத்தான் இந்த புறப்பாடு. போன வாரம் ஒரு நாள், என் பள்ளித்தோழி போனில் அழைத்தாள். பேசும்போது….அவளுக்கும் எனக்கும் தெரிந்த சில சுவாரஸ்ய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது….,
“ஏய்….உங்கிட்ட சில பேர் விவரம் இருக்கு….எங்கிட்ட சில பேர் விவரம் இருக்கு….லெட்ஸ் ஹாவ் அ கூகிள் மீட்…..” என்று முடிவு செய்து காய் நகர்த்தினோம். என்னுடன் தொடர்பில் இருக்கும் தோழிகளுக்கு ஒரு காஃபெரன்ஸ் கால் போட….
“ஏய்…சன்டே மதியம் 2.30 மணிக்கு ஃப்ரீ பண்ணிக்கோ…..நம்ம பத்து பேரும் ஒரு மீட்டிங்க போடறோம்….ஓகேவா….?” என்று நான் சொன்னபோது,
“ஏய் ஜாலி …..” என்று சொன்னாலும், அடுத்த கணமே,
“ஸாரிடி…. ரெண்டுலேந்து மூணு என் பொண்ணுக்கு ஆன்லைன்ல பாட்டு க்ளாஸ்….அதனால அந்த டைம் கஷ்டம்…..என்று ஒருத்தி சொல்ல….”
“எனக்கும் அதேதான்……வீக் எண்ட் கூட விடாம, ஒரு சின்ன லெவெல் மீட்டிங் இருக்குடி….ஆபீஸ்ல ஒரு அஞ்சு பேர் மட்டும்….அதுவும் ரெண்டுலேந்து மூணு….” என்று இன்னொருத்தி புலம்ப,
“இருடி…..இவ எதையோ தீவிரமா யோசிக்கிறா….என்னடி….? “ என்று கேட்டதும்,
“எனக்கு அந்த மாதிரி பிரச்சினையெல்லாம் இல்ல….ஆனா….” என்று இழுத்தாள்.
“பின்ன என்னடி….?”
“ம்…. ஆசை தோசை அப்பளம் வடை….சாப்டு முடிச்சு பாத்திரத்த யாரு தேய்க்கிறது….? செல்லாது செல்லாது…. 3 மணிக்கு மேலன்னா யோசிக்கலாம்.”
“நிஜமா சொல்லு…..உன் வீட்டுல நீயா பாத்திரம் தேய்க்கிற….? அண்ணந்தானே தேய்க்கிறாரு….?”
“ஹலோ, தேய்க்கிறது வேணா அவரா இருக்கலாம்மா…., ஆனா, தேய்க்க நினைவு படுத்தறது நான்….இல்லன்னு வச்சிக்க…, ஒண்ணு அந்த மனுஷன் கொறட்ட விட்டுடுவாரு…இல்லன்னா……ரிமோட்டோட செட்டில் ஆயிடுவாரு….அதனால டைமை கொஞ்சம் நெகோஷியேட் பண்ணலாமே” என்று அவள் நேரத்தை பேரம் பேச, சங்க உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு மனதாக, அரட்டை அடிக்க மூன்று மணியைத் தேர்ந்தெடுத்தோம்.
அந்த அரட்டை அரங்கத்துக்காகத்தான் என்னுடைய முகக்கவசம் இல்லாத இந்தப் புறப்பாடு. மற்றபடி, மாஸ்க் இல்லாத எங்கள் முகத்தை யாருமே வெளியில் பார்க்கமுடியாது என்பதை நாங்கள் மட்டுமல்ல….எங்கள் அடுக்கு மாடியிருப்பு குடியிருப்புவாசிகள் அனைவருமே மார்தட்டி சொல்லுவோம்.
எங்கெங்கோ இருக்கும் தோழிகள் எல்லாம் ஒன்று கூடி, சரியாக 3 மணிக்கு தொழிநுட்ப தேவதையைத் துதிக்க ஆரம்பித்தோம்.
“நாங்களெல்லாம் பேசி முடிக்கும் வரை கருணையோடு, தடைபடாத மின்சாரத்தையும், நெட்வொர்க் பிரச்சினையையும் கொடுக்காமல், நல்லபடியாக அரட்டையடிக்க துணை செய்வாய் அம்மா… தொழில்நுட்ப தேவதையே….” என்று மனம் உருகி பிரார்த்தித்தோம்.
இது போன்ற நிகழ்வுகள் ….கொரோனாவின் நல்ல பக்கவிளைவுகளில் ஒன்று. இதற்கு முன்பு “காக்கை குருவி எங்கள் ஜாதி “ யிலும் கொரோனாவின் ஒரு நல்ல பக்கவிளைவைத்தான் பேசியிருந்தோம்.
ஆயிரம் எதிர்மறை விஷயங்கள் இருந்தாலும், தேடிப் பார்த்தால், நிச்சயம் சில நல்ல விஷயங்கள் கண்டிப்பாகக் கிடைக்கும். “நீர் கலந்த பாலாக இருந்தாலும், நீரை ஒதுக்கிப் பாலை மட்டும் பிரித்து உண்ணும் அன்னப்பறவை” என்று சிறு வயதிலிருந்தே சொல்லிக் கேட்டு வளர்ந்தவர்கள்தானே நாமெல்லாம்……….. அதனால், கொரோனாவின் கோர தாண்டவத்தால், ஆயிரமாயிரம் கெடுதிகள் இருந்தாலும், சில நல்ல விஷயங்களும் கிடைத்துள்ளன.
பல பெண்கள் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பின் , தங்களுடைய பழைய தோழிகளின் தொடர்புகளை இழந்துவிடுவது என்பது பெரும்பாலும் நடக்கும் ஒன்று. இப்போது இருக்கும் தலைமுறை பெண்களுக்கு இருக்கும் வசதிகள் முன் காலத்தில் இல்லை.
பாட்டி மற்றும் பாட்டி காலத்துக்கு முன்பு, ஒரே ஊரில் திருமணம் செய்த பெண்களும், தெரிந்தவர்களைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களும்…மற்றும் சொந்தத்திலேயே திருமணம் செய்துகொள்ளும் பெண்களும் ஓரளவுக்கு அவர்கள் சிறு வயதுத் தோழிகளை சந்திப்பதற்கும், பேசுவதற்கும் வாய்ப்புகள் இருந்தன.
அம்மா காலத்தில், போன் எல்லோர் வீடுகளிலும் இருக்காது. அதனால், தோழிகளுக்குள் கடிதம் மூலமாகத் தொடர்பில் இருப்பது வழக்கம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல்….எல்லோரின் முகவரியும் இருக்காது. எழுதும் கடித்ததை போஸ்ட் செய்வதற்கு போகக்கூட பலருக்கு நேரமிருக்காது. இல்லையென்றால், யாரிடமாவது கொடுத்து தபால் பெட்டியில் போடச் சொல்ல வேண்டும்.
இப்போது என்னுடைய காலத்தில், போன் பரவலாக இருக்கிறது. செல்போனும் வந்துவிட்டது. பல சமூக தகவல் தொடர்புகள் உள்ளன. ஆனாலும் கூட , எல்லோர் போன் நம்பர்களும் இருக்காது, இன்னும் சொந்த ஊரிலிருக்கும் சில தோழிகளுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தெரியாது. . ஆனால், அடுத்த தலைமுறைப் பெண்குழந்தைகளுக்கு இந்த சிக்கலே இல்லை. பிறக்கும்போதே செல்போன் மூலம் பாடமே நடக்கிறது.
வீடியோ காலில் இருவர் பேச, கான்ஃபெரன்ஸ் காலில் இருவருக்கும் மேற்பட்டவர் பேச…..இப்போது, பல பேர் ஒரே நேரத்தில் பேசுவதற்கான செயலிகள் வந்துவிட்டதால், இணையத்தின் மூலம் பள்ளி, கல்லூரி, வகுப்புகளும், கவியரங்கம், கருத்தரங்கம், கதை சொல்லுதல், கலைகள் கற்பித்தல், அலுவலக சந்திப்புகள், என்று எண்ணற்ற வகையில் பயன்கள் பெருகியுள்ளன.
இத்தனை நாளும் தொழில்நுட்பம் இல்லாமல் இல்லை. ஆனால், இப்படியெல்லாம் அதைப் பயன்படுத்தத் தோன்றவில்லை. இப்போது ஊரடங்குக் கட்டுப்பாடுகள் வந்ததும்….நம்முடைய சிந்தனைக் குதிரைகளெல்லாம்…தறிகெட்டு ஓடி, பல விஷயங்களை நிகழ்த்துகின்றன. என்னவோ இதற்கு முன்பு , வாராவாரம் எல்லோரும் சந்தித்து பேசி சிரித்து சந்தோஷமாக இருந்தது போலவும்….இப்போது எதுவுமே இல்லாதது போலவும் இருக்கும் ஒரு மாயத்தோற்றத்தின் பயனுள்ள பக்க விளைவுதான் இத்தகைய மீட்டிங்…. ஆனால், , தொழில்நுட்பத்தை அரட்டையடிக்கவும் பயன்படுத்தலாம் என்ற அரிய கண்டுபிடிப்புடன், தோழிகள் அனைவரும் கூடினோம்.
ஒவ்வொருவராக இணைப்பில் இணைய….. நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துப் பேசும்போது ஏற்பட்ட ஆனந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
“ஏய்….நீ என்ன இவ்ளோ வெயிட் போட்டுட்டே….?”
“இவளப் பார்டி…..அப்டியே இருக்கா….”
“ஏண்டி….உன்னை என்ன பொண்ணு பாக்கவா வராங்க….இப்டி லிப்ஸ்டிக்லாம் போட்டு புது புடவைலாம் கட்டிட்டு எங்கள பாக்க வந்திருக்க…?”
“உன் பையன் எந்த காலேஜ்…?”
“மாமியார் உடம்பு பரவால்லயா….?”
“சாரி, அன்னைக்கு உன்னோட ப்ரோக்ரம்முக்கு வரமுடில…”
“நீ புது வீட்டுக்குப் போயிட்டியா…?”
“இவளப் பாருடி….பேரன் பொறந்துருகான்….நமக்கு சொல்லவேயில்ல….?”
என்று கலந்துகட்டி…. பரஸ்பரம் கலாய்ப்புகளும்….நலம் விசாரிப்புகளும்…நடந்தன. எத்தனை காலம் கழித்துப் பார்த்தாலும், பேசினாலும் தோழிகளின் நெருக்கம் குறைவதேயில்லை.
பேசினோம்….பயனுள்ள பல விஷயங்களை…..என்ன பேசினோம் என்பது வரும் வாரத்தில்……
இனி, அடிக்கடி இது போல சந்திக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தபோதே…..அங்கே ஒலித்த பேச்சுக்குரல்களும்…சிரிப்பு சத்தமும்….என் வீட்டின் ஹால் முழுவதும் எதிரொலித்தது.
“உலகை இயக்கும் மூன்றெழுத்து” அது என்ன…? என்ற விடுகதையுடன் ஆரம்பிக்கலாம் என்று உற்சாகமாக அரட்டையை ஆரம்பித்தோம்.
அந்த மூன்றெழுத்து பற்றி அடுத்த வாரம்….
இனிய பகிர்தலுடன்,
உங்கள் மாலா ரமேஷ், சென்னை.