
எப்படி உரையாடலை நகர்த்திச் செல்வது… ஆண் பெண் உரையாடலில் புதிதில் ஒன்றும் தெரியாது. என்ன சாப்பிட்ட ? இட்லியா? இட்லிக்கு பொடியா சட்னியா கூட ஆர்வமாக இருக்கும் சிலருக்கு (எல்லோருக்கும் இல்லை ).. பிறகு உரையாடல் தொடர உங்களிடம் செய்தி இருக்க வேண்டும். செய்தி இருப்பினும் அதனைக் கேட்பதற்கு எதிர் முனை ஆர்வம் காட்ட வேண்டும். அல்லது ஆர்வமூட்ட உங்களுக்குத் தெரிய வேண்டும்.
புதிதாகக் கற்றுக் கொண்டே இருங்கள். பகிருங்கள். எல்லோரும் நமக்கு கற்றுக் கொடுக்க குறைந்த பட்சம் ஒரு செய்தியையாவது மனதிலேற்றிக் கொண்டே சுற்றுகிறார்கள்.

புதிதில் ஒன்றும் தெரியாது ஏதேதோ உளறிக் கொட்டி ஒப்பேற்றுதல் நடக்கும். அதன் பிறகு, பேசவே மாட்டேன்கிற , அப்புறம் என்று நொதித்து இற்றுப் போன சொற்களையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு உற்சாகமாக ஆரம்பியுங்கள். அல்லது அப்படி ஆரம்பித்தாலும் உடனடியாக அடுத்து சுவாரசியப் பேச்சிற்கு பயணியுங்கள் ஜெட் வேகத்தில்… இல்லையென்றால் எதிரில் இருப்பவர் , ஒரு வேலை இருக்கிறது அப்புறம் பேசலாம் என்று ஓடி விடும் வாய்ப்புகள் அதிகம். ஒருவர் பேசவில்லை என்பதற்காக இரந்து நிற்காதீர்கள் இன்னும் சொல்வதானால் தொங்கிக் கொண்டு இருக்காதீர்கள். உங்களுக்கு நீங்கள் முக்கியம் உங்கள் மதிப்பு முக்கியம். அவர் பேசாததினால் உண்டான வேதனை வருத்தம் வலி இவற்றைப் புரியும் படி தெளிவுறுத்துங்கள் அவ்வளவு தான்.

பேசியதையே பேசாதீர்கள் இது அவர்களின் புரிதல் பெறுவதற்கு பதிலாக சலிப்பைதான் பெற்றுத் தரும். தொடர்ந்து பேசிக் கொண்டே இராமல் இடைவெளி விட்டு எதிரில் இருப்பவர் ஏதேனும் கூற விரும்புகிறாரா இதனை எப்படி எடுத்துக் கொள்கிறார் என்றெல்லாம் கவனத்தில் கொண்டு ஸ்டீரியோ டைப் உரையாடல் தவிர்த்து இனிமையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
என்னதான் உயிர் உடல் செம்புலப்பெயர் நீர் என்றெல்லாம் வசனம் பேசினாலும் ஒவ்வொருவரும் ஒரு தனி தீவு. எப்பொழுதும் தொணதொணத்துக் கொண்டிராமல் இடைவெளி விடுங்கள். அவருக்காக நாம் சிந்திக்க கூடாது. சிந்தனையையும் முடக்கக் கூடாது. உங்களையே சிந்திப்பதற்கு கூட அவருக்கு நீங்கள் இல்லாத ஒரு தனிமை வேண்டும் தெரியுமா…. அது ஒரு நிலை. சிந்தித்தால் புரியும். அவசரமாகச் சொல்ல வேண்டியதோ , ஆசையாக சொல்ல ஆசைப் படுவதோ மட்டும் சொல்லுங்கள். திரும்ப இருவரின் நேர கால சூழல் பொறுத்து தொடர்ந்த பேச்சிற்கு வழி வகுத்துக் கொள்ளுங்கள்.

பேசுவதற்கு ஆசை என்பதற்காக இழுத்து இழுத்துப் பேசாதீர்கள். எரிச்சலுடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நான் யார் தெரியுமா, நானெல்லாம் எப்படி பேசுவேன் தெரியுமா போன்ற எண்ணங்களை மூலிகை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டுப் பேசுங்கள். அதே போல என்கிட்டலாம் யார் பேசுவா போன்ற எண்ணங்களை ஸ்பீட் பெட்ரோல் ஊற்றியே எரிக்கலாம்.
எதிரில் இருப்பவர் சொல்ல வருவதையும் சொல்வதையும் கவனித்து எதிர் வினையாற்றுங்கள். பேச விட்டு பேசுங்கள். குறுக்கே பாயாதீர்கள். உங்கள் கருத்து எல்லாவற்றோடும் உடன்பட்டுதான் போக வேண்டும் என்று நினையாதீர்கள். முரண்படின் எந்த விதத்தில் ஏன் என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள். முரண் அழகு.
ஒரு தலைப்பு பேச எடுத்து அதனை உங்களால் இயன்ற இறுதி வரை முடிக்க விருப்பம் கொள்வீர்களானால் அதற்கு தகுந்த நபர் எதிரில் வேண்டும். தவறினால் மன்னிப்பு கேட்கவும், திருத்திக் கொள்ளவும் மனம் வேண்டும் .கொஞ்சமேனும் அறிவும் வேண்டும். இல்லாத பட்சத்தில் சப்ஜெக்டை ஸ்கிப் செய்து விடுங்கள் உறவு நீடிக்கும்.

உரையாடல் நீட்டிக்க ஆசை எனில் ஒரே தலைப்பில் நிற்காதீர்கள். இந்த பேச்சு நமது வல்லரசு நல்லரசு கனவுகள் நிறைவேற்றவோ எதியோப்பிய பொருளாதர மாற்றமோ செய்யப் போவதில்லை. நமது ஆசைக்காகதான் எனில் , ஒரு தலைப்புத் தொட்டு மற்றொன்றைத் தொடர்வதாக இருக்கட்டும் உரையாடல். எதிரில் இருப்பவர் அமைதியாக இருந்தால் ஆயிரம் காரணம் இருக்கும் அதில் ஒன்று அழுகையாகவும் இருக்கலாம். என்ன ஏனென்று கவனித்து பேச்சைத் தொடருங்கள்.
உரையாடல் உண்மையாக இருக்கட்டும்.
மிக முக்கியமான குறிப்பு : மெசேஜ் உரையாடல் எனில் ஃபார்வர்ட் மெசேஜ் செய்பவர்களை மாநில மக்கள் இணைந்து நாடு கடத்தச் செய்யுங்கள் ஜனாதிபதியிடம் மனு கொடுத்தேனும் .

அகராதி