மௌனத்தில் புதையும் கதைகள்

கரைதலறியாது கூவிய கணத்தில்
கூடிழந்த குயிலொன்றின்
கதையினைப் போலவே
பேசாப் பெருங்கதைகள்
என்னிடத்திலுமுண்டு..
கனவுகளின் வாசம் தொலைத்து
கண்ணீரின் வாசம் சுமந்து
உயிரொன்று தொலைந்த
அவ்வீட்டு மலர்களின்
மௌனக் கதைகள் போலவே
பேசாப் பெருங்கதைகள்
என்னிடத்திலுமுண்டு..
வற்றிப் போய்விட்ட
தன் மார்பைப் பற்றும்
பிஞ்சு விரல்களின்
நம்பிக்கை வெல்லுமென்று
ஏங்கி ஏங்கி
மரத்துப் போன
மனதின் கதைகள் போலவே
பேசாப் பெருங்கதைகள்
என்னிடத்திலுமுண்டு..
எனைக் குறித்ததான
உங்கள் புனைவுகள்
போலல்லாது
மொழி தொலைந்த
பெருமூச்சின் ஆழத்தில்
புதைந்திருக்கும்
அவை போன்ற கதைகள்
உங்கள் மௌனத்தின்
கதவுகள் திறக்கையில்
உள்ளிருந்தபடி ஒலிக்கும்…

கிருத்திகா கணேஷ் கவிதைகள்

Back To Top