தைக்க இயலா அம்புகள்

கனவிலும் என்னைத்
துரத்திக் கொண்டேயிருக்கிற
அந்த அம்புகளை
உற்று நோக்கியபடியே
ஓடிக் கொண்டிருக்கிறேன்..
பல அம்புகள்
எனக்குப் பரிச்சயமில்லாதவை..
எனை நோக்கி
எறியப்பட்டவையா? – அல்லது
அவற்றின் பாதையில்
தவறி நான் ஓடுகிறேனா?
எதுவாயினும்..
உங்கள் அம்பராத்தூளிகளை
பரிசோதித்துக் கொள்ளுங்கள்..
எனக்கான அம்புகளை
எறிந்து விட்டீர்களா – இல்லை
இன்னும் ஏதேனும்
மிச்சமிருக்கிறதாவென..
வேறு யாருக்கோவென
வைத்திருந்த அம்புகளையும்
எனை நோக்கியே
எறிந்து விட்டீர்களாவென்றும் கூட..
நான் ஓடியபடியே இருக்கிறேன்..
என் முதுகில் எறிவது தான்
வழக்கமெனினும்..
உங்கள் இலக்கிற்கு அப்பால்
நான் சென்றுவிடு முன்
எய்து விடுங்கள்..
எந்த அம்பின் தாக்குதலும்
எனைக் காயப்படுத்தி விட
முடியாதென்பதையும்
நினைவு கூர்ந்தபடியே…

கிருத்திகா கணேஷ் கவிதைகள்

Back To Top