பரவசமாய் பூத்தே விடுகின்றன
பற்றியெரிந்த காடுகளும்..
உடைந்த மரத்தின்
குச்சிகள் பொறுக்கி
வேறோர் மர உச்சியில்
கட்டியே விடுகின்றன பறவைகள்
இன்னுமொரு கூட்டை..
நீரழித்த தடங்கள் மறந்து
பாதங்கள் பதிக்க
ஓடத்தான் செய்கிறார்கள்
ஒன்றுமறியாக் குழந்தைகள்..
அடுத்தவேளைப் பசி
ஆறிவிடும் என்று
சமாதானம் சொல்லிக்கொண்டே
அங்குமிங்குமாய்
அலையத்தான் செய்கிறார்கள்
ஏறெடுக்கா முகங்களினூடே
எப்போதும் யாசகர்கள்..
புகைதலோ புணர்தலோ
நிகழ்த்தியே வாழ்கிறார்கள்
மழலை மரித்த வீட்டிலும் மனிதர்கள்..
இரவும் பகலுமென
நீளும் சுழற்சியில்..
விழிகளோ விரல்களோ
பற்றிக் கொள்ளும் தருணம்
இன்றோ நாளையோ
வாய்த்து விடவே கூடும்..
இடம்மாறிய இதயங்களோடு
எங்கெங்கோ வாழ்ந்திருக்கும்
நமக்கும்..
கிருத்திகா கணேஷ் கவிதைகள்