
ரயில் நிலையத்தில் அன்று அந்தக் குழந்தைகள் சொல்லித் தந்த பாடத்தை வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது.. எத்தனையோ பேர் எத்தனையோ விதமாய்ச் சொல்லியிருந்தாலும் குழந்தைகளிடம் கற்றுக் கொள்வது கூடுதல் மதிப்புத்தான்..
“ஐயோ! 9:40 ட்ரெயின்.. 10:10 ஆகுது இன்னும் வர்ல.. எப்போ வருமோ” என்று எரிச்சல்பட்ட அம்மாவிடம், “என்னை ட்ரெயின் ஏத்தி விடத்தானே வந்த? ஏன் டென்ஷன் ஆகுறம்மா? இப்போ வந்துரும்மா” என்று தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டது ஒரு குழந்தை.. “கொண்டு வந்த தண்ணி பாட்டில் முக்காவாசி இங்கியே காலி. காலைல வரைக்கும் என்ன பண்ணுவியோ”, என்று புலம்பிய பெண்ணிடம், “கவலைப்படாதீங்க ஆன்ட்டி! நைட் தானே.. ட்ரெயின்ல ஏறினோன்ன கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கிருவோம். அப்டியே வேணும்னாலும் எங்க எல்லார்கிட்டயும் சேர்த்து எவ்ளோ தண்ணி இருக்கும்.. அவளுக்கு வேணும்னா நாங்க குடுப்போம்”, என்று தோழியின் தாயை ஆறுதல் படுத்திய இன்னொரு குழந்தை..
பள்ளியில் இருந்து கோடை விடுமுறை முகாமிற்குச் செல்ல இரயில் நிலையம் வந்திருந்த குழந்தைகள்.. அவர்களின் பெற்றோர்கள்.. ஆனால் அணுகுமுறையில் எவ்வளவு வித்தியாசம்..
பெற்றோர்கள் படபடப்பாயிருந்தார்கள்.. அந்த வேலையை முடிச்சிட்டு வந்திருக்கலாம் என்றார்கள்.. இன்னும் எவ்ளோ நேரம் ஆகுமோ.. போய் இந்த வேலை இருக்கே என்றார்கள்.. கடந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்குமாய் ஊசலாடியபடி இருந்தார்கள்..
குழந்தைகள்.. படபடக்கவில்லை.. பதற்றமில்லை.. தாமதமாகும் புகைவண்டி குறித்து எந்தக் குற்றச்சாட்டும் அவர்களிடம் இல்லை.. பயணம் குறித்த குழப்பம் இல்லை.. 3 நாட்கள் வீட்டைப் பிரிகிற தயக்கமோ.. மறுநாள் தொடங்கப் போகிற முகாம் குறித்த கவலையோ.. எதுவும் அவர்களிடம் இல்லை..
அவர்கள் அந்த நொடியில் வாழ்ந்தார்கள்.. சிரித்தார்கள்.. ஓடினார்கள்.. ஆடினார்கள்.. பாடினார்கள்.. சின்னச் சின்னதாய் வாக்குவாதம் செய்து கொண்டார்கள்.. சிபாரிசுக்குப் பெற்றோரைத் தேடினார்கள்.. சுற்றியிருந்த எது குறித்தும் யார் குறித்தும் அச்சமோ கூச்சமோ தயக்கமோ அவர்களிடம் இல்லவே இல்லை..
இதுதான்.. நாம் நாமாகவே எப்போதும் இருக்க இயலாததின் ஏக்கம் தான் குழந்தைப் பருவத்தை நம் பிரியத்திற்குரியதாய் ஆக்கி விடுகிறது.. நாம் நாமாக வாழ்வதன் நிறைவை நினைத்து பெருமூச்சு விட வைத்து விடுகிறது.. மீண்டும் குழந்தையாக முடியாதாவென ஏங்க வைத்து விடுகிறது..
மனதால் குழந்தைகளாவோம்.. இது வேண்டும் என்று பிடிவாதமாய் அடம் செய்து நிற்கிற குழந்தையின் உறுதியோடு லட்சியம் நோக்கி பயணிக்க முதல் அடி எடுத்து வைக்கையில் உடைந்து நொறுங்கும் தோல்வியின் முதல்படி…
– கிருத்திகா கணேஷ்