வெற்று காகிதமும்
பென்சிலும் காத்திருக்க
என்னால் எழுத முடியவில்லை..
சில வரிகளுக்குப் பின்
எழுதவதற்கு எதுவுமில்லாத
வெற்றிடமாக வியப்பித்திருக்கிறது..
என் சிந்தனைகளோ எங்கெங்கோ ஒடி மறைய..
சிதறிய எண்ணங்களைக்
கோர்வையாக்க முயல்கிறேன்.. ..
பற்றயற்ற வெளியே உற்று நோக்கினேன்…
பகலவனின் வெப்பக் காற்றை
சுடும் வரிகளாக்க முயன்றேன்..
அந்தியின் இளந்தென்றலில்
மந்தாரைப் பூக்களின் வாசத்தை
வசம் செய்தேன்…
நிலவை பந்தாக்கி வீதிவழி உருட்டினேன்..
நட்சத்திர புள்ளிகளை கோலமாக வாசலில் வரைந்தேன்…
மனிதனின் கறுப்பு பக்கங்களை கடைந்தெடுத்தது சொற்களாக்கினேன்..
பசியின் வலியை
ஏக்கத்தின் நிலையும்
வறுமையின் கொடுமையையும்
ஏமாற்றத்தின் உச்சத்தையும்
நேசத்தின் பரிதவித்தலும்
சினத்தின் கோரமும்..
கவிதைகுள்ளே
கருவாக உயிரேற்றினாலும்
எழுத முடியவில்லை ஏனோ…
காகிதமும் பென்சிலும் காத்திருக்கிறது உயிரோட்டமுள்ள கவிதைக்கு…
சசிகலா எத்திராஜ்,
கரூர்…