“ஜார்ஜ் பிளாய்டுக்கு பேசி சாத்தான்குளத்துக்கு மௌனமா இருப்போம் னா இதை விட அலட்சியம் என்ன இருந்து விட போகிறது.”

சட்டத்துக்குப் புறம்பாக, சட்டத்தை மதிக்காமல் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் கடையைத் திறந்து வைத்திருந்தால், போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்கும்-னு அரசு அறிவிக்கிது. சரி பிரச்சனை இல்லை அந்தக் குறிப்பிட்ட நேரம் தான் என்ன ?
மத்தியில ஒரு நேரம். அப்பறம் மாநிலத்துல இருந்து ஒரு நேரம். அப்பறம் மாவட்டத்துக்கு ஒரு நேரம். அப்பறம் கொரோனா பாதிப்பு பொறுத்து ஏரியாவுக்கு ஒரு நேரம். நாம எந்த நேரம் செயல்படனும்னு கூட தெரியாத நிலையில் தான் பெரும்பாலான கடைகள் இயங்கிட்டு இருக்கு. இங்க இருக்குற ஒரே சட்டம் போலீஸ் வர்றதுக்குள்ள பூட்டனும். சரி அவர் எப்போ தான் வருவார். அவருக்கு தோணும் போது வருவார்.
இந்த சிக்கலில் அவர்கள் முன்ன பின்ன வரும் நேரம் கடை திறந்து இருந்தால் என்ன செய்வார்கள் ?
1. அதட்டுவார்கள்
2. மிரட்டுவார்கள்
3. கேஸ் எழுதுவார்கள்
4. அடிப்பார்கள்
5. கொலை செய்வார்கள்
நிஜமாவே இங்க ஜனநாயகம் தான் நடக்குதானு சந்தேகமா இருக்கு. ஒரு ஒரு நாளும் கடக்குறதே பெரிய கஷ்டமா இருக்குற இந்த நேரத்துல சிறுக சிறுக சம்பாதிச்சதை மொத்தமா எழுதி வைக்கவும். எதிர்த்து கேட்கும் பட்சம் உயிரையே இழக்கும் வகையிலும் தான் இந்த அமைப்பு இயங்கிட்டு இருக்கு.

ஏப்ரல் 4: மதுரையில் கறிக்கடை நடத்தி வந்த தோழர்.ரபீக் ராஜாவின் தந்தை சட்டத்தை மதிக்காமல் கடை திறந்ததாக கூறி போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் உறவினர்கள் சேர்ந்து போராடியும் ஊரடங்கை காரணம் காட்டியும் நடவடிக்கை எடுப்பதாக கூறியும் களைத்துவிட்டனர்.
பின்னர் இடையே ஒரு ஒரு நாளும் ஆங்காங்கே வியாபாரிகள் இந்த அதிகாரிகளின் மிரட்டல்களுக்கு ஆளாகியே வந்துள்ளனர்.
ஏப்ரல் 15: கண்டிகை கிராமத்தில் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை விற்பதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை இடைமறித்த போலீசார், விசாரணை என கூறி மணிக்கணக்கில் நிற்க வைத்துள்ளனர். ஊரடங்கால் காலை மட்டுமே நடைபெறும் சந்தைக்கு காய்கறிகள் கொண்டு சென்றவரை மதியம் வரை நிற்க வைத்து தனது அதிகாரத்தைக் காட்டியது காவல் துறை.
இதைத் தொடர்ந்து ஆங்காங்கே ஊர்களுக்கு உணவுப்பொருட்களை கொண்டு வரும் வண்டிகளை எல்லையில் நிறுத்தி திருப்பி அனுப்பிய சம்பவங்களும் அரங்கேறியது.
ஜூன் 17: கோவையில் தள்ளுவண்டியில் வைத்து இரவு நேர உணவுக்கடை நடத்தி வந்த வேலுமயிலை 9 மணி வரை மட்டுமே கடை நடத்த அனுமதி என கூறி 8 மணிக்கு கடையை அடைக்க உத்தரவிட்டு SI செல்லமணி மிரட்டியுள்ளார். அதை அவரது மகன் வீடியோ எடுப்பதை பார்த்த காவலர், சிறுவனின் போனை பிடுங்கி ஸ்டேஷன் அழைக்க, அவன் அவர் வாகனத்தின் சாவியை எடுத்துள்ளான். அதே இடத்தில் காக்கி அச்சிறுவன் மீது பாய்ந்து தாக்கியுள்ளது போலீஸ்.
ஜூன் 19: சாத்தான் குளத்தில் கடை அடைக்க கூறி தந்தை ஜெயராஜை போலீஸ் தாக்கியதை கண்ட மகன் பென்னிக்ஸ் அவர்களை எதிர்க்க, விசாரணை என்ற பெயரில் தந்தை, மகன் இருவரையும் அழைத்துச்சென்று கொன்று அழித்தது இந்த ஏவல் துறை.
ஜூன் 22: ஆவடி அருகே இ-பாஸ் இன்றி பயணித்ததாக கூறி மின் ஊழியர் மீது இரக்கமற்ற தாக்குதலை நடத்தினர் ஏவல் அதிகாரிகள். அவசர வேலைக்கு செல்லும் மின் ஊழியர்களுக்கு இ-பாஸ் தேவை இல்லை என்ற நிலையில் தனது அடையாள அட்டையை காட்டியும், இரு கரம் கூப்பி வேண்டி மன்றாடியும் சிறிதும் இரக்கமின்றி சாலையில் தள்ளி அவரை தாக்கினர்.
இத்தனை நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் கடும் தண்டனை என்னவாக இருந்தது என்றால்
4 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவு
மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் கோவத்தில் இருந்து அவர்களை காக்கும் வகையில்
பணியிட மாற்றம்
பணியிடை நீக்கம்
இன்னும் இது போல பதிவாகாமல் போன அல்லது பதிவாகி நமது கண்களில் படாமல் போன நிகழ்வுகள் எத்தனையோ ? அது சரி பதிவாகி பேசப்பட்ட நிகழ்வுகளுக்கே இவ்வளவு தான் அவர்கள் நடவடிக்கை எனும்பட்சம் பதிவாகாத வலிகளுக்கு என்ன நியாயம் கிடைத்துவிட போகிறது.
நம்மால என்ன தான் செய்ய முடியும்னு கேக்குறீங்களா??
குறைந்த பட்சம் பொதுவில் பேசலாமே.
முடிந்தால் இரண்டு வரி எழுதலாமே.
அது ஒரு சின்ன அதிர்வலையை ஏற்படுத்தாதா ?
தனக்கென்ன வந்துவிட்டது என இருப்பவர்கள்.
இன்று இவர்களின் நிகழ்காலம் என்றோ உங்களின் எதிர்காலம் என்றுணர்க.
பேசி என்ன ஆகிவிட போகிறது என்பவர்களே ..
பேசாமல் என்ன ஆகிக்கொண்டிருக்கிறது என்பதே பேச வேண்டிய நிர்பந்தத்தின் காரணம்.
ஜார்ஜ் பிளாய்டுக்கு பேசி சாத்தான்குளத்துக்கு மௌனமா இருப்போம் னா அதை விட அலட்சியம் என்ன இருந்து விட போகிறது.
ஜார்ஜ் பிளாய்டுக்கு குரல் கொடுத்ததை போல் இதற்கும் கொடுங்கள். இச்சம்பவத்திற்கும் மக்களின் குரலும் கவனுமும் தேவை. தூரத்தில் உள்ள ஒருவருக்கு உணவளிக்கிறீர்கள், உங்கள் பாதத்தின் அருகிலும் ஒரு குழந்தை பசியில் துடித்துக் கொண்டிருக்கிறது.
மௌனம் கலைப்போம்!!
-சோழன்