Image credit: freepik.com
இந்தியா முழுவதுமாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்படுபவர்களில் சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்களும் அடங்குவர் . இதற்கு முக்கிய காரணம் பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் சில ஆண்கள் இருக்கும் சமுதாயத்தில் பெண்களும் வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.
அண்மையில் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள குற்ற சம்பவங்களின் புள்ளி விவரங்களின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 91 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்வதாகவும் 2017ஆம் ஆண்டு பதியப்பட்ட 32,559 பாலியல் வன்கொடுமை குற்ற வழக்குகள் 2018ஆம் ஆண்டில் 33,356 வழக்குகளாக உயர்ந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலளிக்கிறது.. இன்னும் சொல்லப் போனால் 2019ஆம் ஆண்டில் இதைவிட அதிகமான வழக்குகள் பதிய பட்டிருக்கலாம். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 342 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது.
2020 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது..
இப்படி தொடர்ந்து பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் நிலைமையை பார்க்கும் போது பெண்கள் ஏன் ஏமாற்றப் படுகிறார்கள் என்ற கேள்வி தோன்றுகிறது.. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இயற்கையிலேயே பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலின் போது ஆணுடன் போராடத் துணிவிருந்தாலும் தன்னைத்தானே காத்துக் கொள்ளும் அளவிற்கு உடலளவில் வலிமையில்லாத மென்மையான உடலமைப்பைக் கொண்ட பலவீனமான பிரிவைச் சார்ந்தவளாக இருக்கிறாள் என்றாலும்.. ஏன் தற்போதைய காலங்களில் பெண்கள் அதிகமாக ஏமாற்றப் படுகிறார்கள்.. அல்லது ஏமாறுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது..
சில இடங்களில் பெண்கள் ஆண்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடுகிறார்கள்..
சில பெண்கள் தாமாகவே சென்று ஆண்களின் வலையில் சிக்கிவிடுகிறார்கள்.. சில பெண்கள் வலுக்கட்டாயமாக சீரழிக்கப் படுகிறார்கள்.. திருமணமான பெண்களைக் கூட வெளி ஆண்கள் சிலர் தங்கள் வலையில் விழ வைத்து அவர்களது குடும்ப வாழ்க்கையை தொலைத்து ஏமாற்றி விடுகிறார்கள்.. இதற்கு முக்கிய காரணம் டிக் டாக் போன்ற வலைதளங்களில் எந்த நேரமும் தங்கள் வீடியோக்களைப் பதிவிட்டு அதன் மூலம் மற்றவர்களை கவர நினைப்பதுவும் காரணம் என்று சொல்லலாம்.. இதற்கு டிக்டாக்கில் காதல் என்ற பெயரில் தான் பெற்ற குழந்தைகளைக் கூட கொன்று வாழ்க்கையைத் தொலைத்த அபிராமி போன்ற பெண்ணில் தொடங்கி இப்போது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் படித்த நல்ல பணியிலிருக்கும் பல பெண்களை உதாரணம் சொல்லலாம்.. லைக் கமென்டுகளைத் தாண்டி சில பெண்கள் வீடியோ ட்ரெண்ட் ஆக வேண்டும்.. இதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.. என்று நினைத்து தங்களின் வீடியோக்களைப் பதிவிடுவதன் மூலம் மோசடியான பலரிடம் ஏமாறுகிறார்கள்.. எல்லாமே சமூக வலைதளங்களிலேயே கிடைத்து விடுமா.. அப்படிக் கிடைத்தால் அது உண்மையாக இருக்குமா.. என்பதைப் பகுத்தாய்வது பெண்களின் கடமையல்லவா…! அதனால் சமூகவலைதளங்களையே பெண்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லவில்லை… நம் குடும்பத்தை விடவும் எதுவும் பெரிதில்லை என்ற எண்ணத்துடன் சரியான வகையில் வலைதளங்களைப் பயன்படுத்தினால் ஏமாற்றங்களைத் தவிர்க்க முடியும்..
இதற்கு விடிவுகாலம்தான் என்ன!?
பெண்கள் இப்படிப் பட்ட குற்றங்களிலிருந்து எப்படி பாதுகாக்கப்பட வேண்டும்..?
பெண்கள் அவர்களாகவே கவனத்துடன் இருப்பது அவசியம். கல்லூரியிலோ அலுவலகத்திலோ பாலியல் துன்புறுத்தல் இருந்தால் பயப்படாமல் ஆரம்பத்திலேயே பெற்றோர்களிடமோ, உறவிர்களிடமோ, உரிய அதிகாரிகளிடமோ, நிர்வாகிகளிடமோ தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அன்பை வலைதளத்தில் தேடுவது ஆபத்தானது.. இதை சமீபத்திய பல குற்றங்கள் சாட்சிப் படுத்தியிருக்கிறது.. தேவையில்லாமல் தெரியாத நபர்களுடன் பேசுவது, அவர்கள் அழைக்கும் இடங்களுக்குச் செல்வது இதையெல்லாம் பெண்கள் தவிர்க்க வேண்டும்.
சில இடங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாக செயல்படும் அவலங்களும் இருக்கிறது. அதனால் பெண்ணானாலும் சரி.. ஆணானாலும் சரி.. தெரியாத நபர்களை முழுமையாக நம்பிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக உணர்ந்தாலொழிய இரவு நேரங்களில் பெண்கள் தனியாக வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம். தவிர்க்க இயலாமல் போய்தான் ஆக வேண்டும் என்ற சூழலில் நம்பத் தகுந்த சரியான துணையோடு பலர் பயணிக்கும் பொது வாகனங்களில் பாதுகாப்புடன் செல்லலாம்.
அறியாத பருவத்திலிருக்கும் பெண் குழந்தைகளை பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது நல்லது. அவசியமில்லாமல் யாரையும் நம்பி அக்கம் பக்கத்திலிருப்பவர்களிடம் பெண் குழந்தைகளை தனியாக விடுவதையும்… தகுந்த துணையில்லாமல் வீட்டில் தனியாகவே விட்டுச் செல்வதையும் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்..
இது போன்ற வன்கொடுமை நேரங்களிலிருந்து பெண் குழந்தைகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக் கலைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஆரம்பம் முதலே பெண் குழந்தைகளுக்கு எது நல்லது.. எது கெட்டது.. யாரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதை எல்லாம் சொல்லித் தருவதும் முக்கியம்..
குழந்தையிலிருந்தே எப்படி பெண் குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ என்பதை சொல்லிக் கொடுப்பது அவசியமோ.. அதே அளவு ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும்.. சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லித் தருவதும் அவசியம்.. பெண்கள் பாதுகாப்பில் சமூகத்திற்கும் பெரும் பங்கு இருக்கிறதல்லவா…. !
அரசாங்க தரப்பிலும் இப்படி பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் அதிவிரைவில் பிடித்து உடனடி விசாரணை செய்து குற்றம் நிரூபிக்கப் படுமெனில் தண்டனையை உடனடியாக நிறைவேற்றப்படும் வண்ணம் கடுமைமையான சட்டம் இயற்ற வேண்டும். எந்தச் சூழலிலும் பெண்கள் பாதுகாக்கப்படும் வகையில் சட்டத் திருத்தங்கள் வேண்டும்..
மேலும் பெண்கள் எந்த சூழலிலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில் தமிழக காவல்துறை அறிமுகம் செய்திருக்கும் தமிழகக் காவல்துறையின் முத்திரையுடன் இருக்கும் ‘காவலன் SOS’ என்ற செயலியை தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கேட்கப்படும் சில விவரங்களை தந்து எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு பாதுகாப்பற்ற சூழல் என்று தோன்றும் சமயம் உபயோகித்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் இருக்கும் தமிழக காவல்துறையின் சேவையை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்….
பெண்கள் நாட்டின் கண்கள்.. குடும்பத்தின் தூண்கள்.. அதனால் பெண்களையும் குழந்தைகளையும் காக்க வேண்டியது அவசியம் மட்டுமில்லை.. சமூகத்தின் பொறுப்பும் கடமையும் கூட.. அதனால் பெண்களைக் காப்போம்..!! உலகம் காப்போம்..!!
ஆனந்தி. பா