விலாசங்களற்ற விண்ணப்பங்கள்

nature, horizon, plant, sky, cloud, sunset, people, girl, thinking ...

தேடல்களைத் தேடிச் செல்லும் வயதில், தேவையற்ற தேர்வுகளை நாம் செய்வதுண்டு. ஆனால் அவை தேவையற்றவை என்பது சில தோல்விகள் அல்லது மன உலைச்சல்களை நாம் காணும் போது தான் ஏற்றுக்கொள்கிறோம், நாம் தேர்வு செய்தது ஒரு தவறான தேர்வு என்று. இன்று நம்மில் பலர் நாம் கண்ட தோல்விகளைப்  பற்றி பிறருடன் கலந்துரையாடுவதில்லை, காரணம் மற்றவர் நம்மை எண்ணி நகையாடுவர் என்று. ஆனால் நம்மி்ல் பலர் மறந்துவிடுகிறோம்,  நாம் கடந்து வந்த பாதையை பற்றி கூறுவதனால் சிலருக்கு அப்பாதை தவறு என்று அவர்கள் தேர்வு செய்யும் முன்பு அவர்களுக்கு தெரிந்துவிடுகிறது. இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு வெற்றிகரமான தலைமுறையுடன் என்பதை நாம் அவ்வப்போது மனதில் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். அவ்வாறு, நான் கூறக் காரணம் சற்று முந்தைய தலைமுறைகளில் வாழ்ந்த பெண்கள் செய்த வீரச் செயல்களும், பேசுவதும் எண்ணிக்கைகளில் குறைவு. ஆனால் இத்தலைமுறைப் பெண்கள் அவ்வாறு இல்லை, அனைவரும் தனக்கான இடத்தை தானாக தன் வழியில்  உருவாக்கிக் கொள்கின்றார்கள், இன்னும் பலர் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்றே கூறலாம்.

முன்னேற்றம் என்பது சுயம், அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் நம் சுயத்தை நாம் ஒவ்வொரு முறையும் சோதனை செய்து கண்டுபிடிப்பதற்கான கால அவகாசம் இல்லை. ஆதலால், தன் சுயத்தை காண விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் தன்னை எதிர்கொள்ளும் அல்லது கடந்து செல்லும் ஒவ்வொருத்தரிடமிருந்தது  தனக்கான நல்ல செயல்களை கற்றுக்கொள்ள வேண்டும். முன்னேற்றம் என்று சுய முன்னேற்றமாக மாறுகிறதோ அன்று நாம் காணும் வெற்றியை நாம் சுயமாக ஏற்றுக் கொள்ளலாம்.  “தோல்விகள் இயல்பு, ஆனால் அவை நம் மீது கொள்ளும் தாக்கம் எண்ணிலடங்காதவை”. ஆகவே , வெற்றியை விட நாம் தோல்வியை கையாளும் முறை பற்றி சற்று சிந்திப்போம்!.

சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே முதல் சிந்தனை. நாம் வாழும் இக்காலகட்டத்தில் சிந்தனை செய்யும் முன்பு செயல்களை செய்து முடித்துவிட்டு பின்பு சிந்திக்க தொடங்குகின்றோம். அன்றோ இன்றோ என்றும் இயற்கை விதிகளை நாம் பின்பற்றியே தீர வேண்டும்,  அதேபோல் நாள் காலம் எதுவாயினும் ஒரு செயலை செய்வதற்கு முன்பு நாம் சிந்திக்க வேண்டும். நாம் ஒரு செயலை பற்றி சிந்திக்கும் பொழுது ஏற்படப்போகும் நன்மைகளை மட்டுமல்லாமல் தீமைகளையும் அலசி ஆராய வேண்டும். அதில் மற்றவர்களுக்கும் ஏதாவது பாதிப்புகள் உண்டா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். நம்மில் பலர் இன்று சந்தர்ப்பவாதிகளாகவும் சூழ்நிலைக் கைதிகளாகவும் மாறக் காரணம் நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்திப்பது தான். சிந்தனை கொள்ளும்பொழுது அனைவரைப் பற்றியும் அவர்கள் சூழலிருந்து யோசனை செய்வது மிக அவசியம். ஆதலால் சிந்தித்து செயல்படுங்கள் செல்வங்களே. சிந்தித்து பின்பு என்ன செய்வது? சிந்தியுங்கள்……….

சிந்தனைகளுடன் ராகவி சாமியப்பன்.

 

Back To Top