Image Credit: freepik.com
இவ்வுலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. அதுபோல, தீர்வே இல்லாத பிரச்சனைகள் இருக்கவே முடியாது. ‘தற்கொலை தான் என்னுடய பிரச்சனைகளுக்கு தீர்வு’ என்று நினைத்து உயிரை விடுவதை விட முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது. சாகத் துணிந்தவனுக்கு வாழ துணிவிருக்காதா? காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, விரக்தி, வேலையின்மை, தவறான புரிதல் என்று தற்கொலைக்கான காரணங்கள் பல இருந்தாலும், மனமுடைந்த அந்த சமயத்தில் ஆறுதல் வார்த்தையும், சாய்ந்து கொள்ள ஒரு தோளும் இருந்தால் போதுமே, இந்த எண்ணத்திலிருந்து மீண்டு வர!
தற்கொலை எண்ணத்திற்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்ள உள்ளார், மனநல மருத்துவர் செல்வகுமார்.
சின்ன சின்ன காரணங்களுக்காக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றதே? என்னென்ன காரணங்களுக்காக தற்கொலைகள் அதிக அளவில் நடக்கின்றன?
நம் அடிக்கடி செய்தித்தாள்களில் படிப்பது போல தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, கேலிகளால் மனமுடைந்து தற்கொலை செய்வது, குடும்ப வன்முறை, குடும்ப பிரச்சனைகள் இப்படி பல காரணங்களால் தற்கொலைகள் அதிக அளவில் நடக்கின்றன. சமீபத்தில் வீட்டில் இணைய இணைப்பு இல்லை என்று கூட ஒரு சிறுவன் தற்கொலை-க்கு முயற்சி செய்ததாக செய்திகள் வந்தன. பொதுவாக 15 வயது முதல் 30 வயதிற்குள்ளான ஆண்களும் பெண்களும் அதிகமாக இந்த முடிவினை எடுக்கின்றனர். இந்த காலகட்டத்தில் தான் ஆளுமைத்திறன் வளர்ச்சி, படிப்பில், வேளையில், வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருப்பார்கள். அதில் வரும் சிக்கல்கள், பிரச்சனைகள், உடல் ரீதியான மாற்றங்களை கையாளும் அல்லது ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் தோல்வி அடையும் போது இந்த எண்ணங்கள் தலை தூக்கும்.
மன அழுத்தம் தற்கொலைக்கு வழி வகுக்குமா?
பெரும்பாலான தற்கொலைகள் மன அழுத்தினாலேயே ஏற்படுகின்றன. தற்கொலை செய்து கொண்டவர்களில் 90% பேர் ஏதாவது ஒரு மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 70% பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஏதேனும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் தற்கொலை எண்ணமும் தற்கொலை முயற்சிகளும் இன்னும் அதிகமாகும்.
தற்கொலை எண்ணங்கள் ஆண்/பெண் இருபாலரின் யாருக்கு அதிகம் உள்ளது?
NCRB (National Crime Records Bureau)-வின் அறிக்கையின் படி, 15 முதல் 30 வயதிற்கு உட்பட்டோரும் 60 வயதிற்கு மேற்பட்டோரும் அதிக அளவில் தற்கொலையினால் இறந்து போவதாகத்தெரிகிறது. தற்கொலையினால் ஏற்பட்ட உயிர் இழப்பில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிக அளவில் உள்ளது. 10 பெண்கள் தற்கொலையில் இறக்கிறார்கள் என்றால், ஆண்களின் இறப்பு எண்ணிக்கை 15-17 ஆக உள்ளது. தற்கொலை எண்ணங்கள் பெண்களுக்கு அதிக அளவில் இருந்தாலும் அவர்களது தற்கொலை முயற்சிகள் தோல்வியில் முடிவதே இதற்குக் காரணம்.
தற்கொலை எண்ணங்கள் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?
தற்கொலை என்பது ஒரு நொடியில் நடக்கும் விஷயம் அல்ல. பல போராட்டங்களை கடந்து தான் இந்த எண்ணம், செயலாக வெளிப்படும். முதலில், அவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கை இல்லாத தன்மை ஏற்பட்டிருக்கும். எதையுமே எதிர்மறை சிந்தனையுடனே பார்ப்பார்கள்.எதற்காக வாழ வேண்டும்? இறந்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். இதற்குப்பின் தான் தற்கொலைக்கான வழிகளை ஆராய ஆரம்பிப்பார்கள். பின் அந்த வழிகளை கையாண்டு தற்கொலைக்கு முயற்சிப்பார்கள். முதல் முயற்சியே இறப்பில் முடியாது. திரும்ப திரும்ப அவர்கள் முயற்சி செய்யும் போது, ஒரு கட்டத்தில் இறந்து விடுவார்கள். இப்படி பல கட்டங்களை தாண்டி தான் தற்கொலை நடக்கிறது. இந்த எண்ணம் வருவதற்கு ஆரம்ப புள்ளியே வாழ்க்கையில் பிடிப்பு இல்லாத தன்மை தான். தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள் முதலில் இந்த எண்ணத்தை ஒழிக்க வேண்டும். தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். குடிப்பழக்கம் இருந்தால் கண்டிப்பாக அதை விட்டு விட வேண்டும். தமக்குள்ளயே ஒரு தன்னம்பிக்கை உணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதையும் மீறி தற்கொலை எண்ணங்கள் வந்தால், ஒரு சுய கட்டுப்பாட்டுடன் எந்த விபரீத முடிவும் எடுக்கக்கூடாது என்ற உறுதியான முடிவு அவசியம். அதன் பின், நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிக அவசியம். எவர் ஒருவருக்கு தற்கொலை எண்ணங்கள் இருக்கிறதோ, அவர்களது செயல்திறன் குறையும். உதாரணத்திற்கு மாணவராக இருந்தால் மதிப்பெண் குறையும், பணிக்கு செல்பவராக இருந்தால், பணியில் கவனம் இருக்காது. அடிக்கடி தனிமையில் இருப்பார்கள், சோர்வடைந்து காணப்படுவார்கள். இப்படி யாரேனும் இருந்தால் அவர்களிடம் மனம் விட்டுப் பேசி ஆறுதல் தந்தால், பல தற்கொலைகளை தடுக்க முடியும்.
சிவரஞ்சனி எழுதுவது பிடிக்கும். படிப்பது பிடிக்கும் - இலக்கியங்கள் அவ்வளவும் படித்ததில்லை. தமிழ் ஜாம்பவாங்களின் புத்தகங்கள் கரைத்துக் குடித்ததில்லை. ப(பி)டித்த புத்தகங்கள் பல உண்டு. எதார்த்த வாழ்க்கைகயை புத்தகங்களில் வேறு பரிணாமத்தில் படிக்கப் பிடிக்கும். சமைக்க பிடிக்கும் - அதைவிட வகையாக சாப்பிடுவது பிடிக்கும். (கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்) ....இவையெல்லாம் விட, சின்ன சின்ன சந்தொஷங்கள் மிகப் பிடிக்கும்.