
நம்பிக்கை! யாருக்கு யார் மேல்? யாரை நம்புவது இந்த உலகத்தில்? முதலில் நீங்கள் நம்ப வேண்டியது உங்களை மட்டுமே. உங்கள் திறமைகள் மேல் நம்பிக்கை வேண்டும். உறுதியான நம்பிக்கை வர வேண்டும். உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் எதற்காக மற்றவர் பற்றி யோசிக்கிறீர்கள். என்னால் முடியும் என உறுதியான நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றால் உங்களால் வெற்றிகரமாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்க முடியாது.
தாழ்வு மனப்பான்மை எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் இக்கால கட்டத்தில் ஏராளமானோர். அப்படி ஒரு மனப்பான்மை உங்களுக்குள்ளும் இருந்தால் பயப்பட தேவையில்லை . ஒரு சில பயிற்சிகள், நடவடிக்கைகள் மூலம் அதிலிருந்து வெளி வந்து விடலாம். உங்களுக்கே உங்கள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வந்துவிடும். தாழ்வு மனப்பான்மை வருவதற்கு முக்கிய காரணம் மற்றவர்களுடன் நம்மை நாம் ஒப்பிட்டு பார்ப்பது தான். மற்றவர்களுக்கு முக்கியத்துவம் தரும் நாம் நம் சூழ்நிலைக்கும், நம் மனத்திற்கும், நம் உணர்வுகளுக்கும் தருவதுமில்லை.

இவ்வுலகில் பிறந்த, பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதை உணர்ந்தவர் உயருகின்றனர். வாழ்க்கையில் பல இன்னல்கள் இடர்பாடுகள் வருவதுண்டு, வரத்தான் செய்யும். தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் அறிமுகமாகும் கடக்கும் நபர்கள் பல விதம். வாழ்க்கையை பாடமாக உணருங்கள். நம்மால் முடியும் என்ற எண்ணமும் கனவும் துணிந்து நாம் தொடங்கும் நொடி நம்மில் இருக்கும் அறிவும் ஆற்றலும் வெளிவரத் தொடங்குகிறது. ஒன்றை செய்ய முடியும் என நாம் முழுதாய் நம்பும் போது நம் மனம் அதை செய்து முடிக்கும் வழிகளை கண்டறிகிறது.
வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே, என்ன செய்கிறாய் என அறிந்து செய், செய்வதை விரும்பிச் செய், நம்பிக்கையோடு செய். பலரும் தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து தங்களுக்கான சூழ்நிலையை தேடுகிறார்கள், அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில் அவர்களே உருவாக்குகிறார்கள். தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என எதுவுமே இல்லை.

உன்னை அறிந்தால் – நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்!!
– என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
வேட்டைக்கு போவதென்பது அக்காலங்களில் பொழுதுபோக்காக இருந்துள்ளது. எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெருவதில் தானே முழுமையான சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும். நம் வாழ்க்கையும் மாய வேட்டை தான். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத நபர்களிடமிருந்து சோதனைகளும் நெருக்கடிகளும் வரும், அவமானங்கள் தோல்விகள் என வெவ்வேறு ரூபங்களில் வரும். அதை எதிர்கொண்டு வெற்றியடைவதில் உள்ளது சந்தோஷம்.

” என் உயிருக்கு உயிரான நண்பன் என்னை ஏமாற்றி விட்டானே, செழிக்கும் என நினைத்து தொடங்கிய வியாபாரம் இப்படி மந்தமாகி விட்டதே, என்னை இந்த சமூகம் அங்கீகரிக்கவில்லையே” என்றெல்லாம் வருத்தப்பட்டு புலம்புவதில் அர்த்தம் இல்லை. வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக் கொண்டு வாழத் தொடங்குங்கள். போராட்ட உத்வேகமும், புதிய தெம்பும் உற்சகமும் கிடைக்கும்.
* அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்
* காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
* செய்வன திருந்தச் செய்
* வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
* நம்பிக்கை இருந்தால் செயல் வெற்றி பெறும்

எதிர்காலத்தில் என்ன நேருமோ என கணக்கு பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் கூறுகிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர் –
1. பிறரைக் காட்டிலும் அதிகமாக உழைக்க கற்றுக் கொள்ளுங்கள்
2. பிறரைக் காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடம் இருந்து பெற முயலுங்கள்
வாழ்க்கையில் முன்னேற குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை – இம்மூன்றும் இருந்தால் போதும் என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன். பலவீனம் இடையறாத சித்தரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரனத்திற்கு ஒப்பானது, வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, இது சுவாமி விவேகானந்தரின் வாக்கு.

தோல்வி என்பது தற்காலிக தடையே, தன்னம்பிக்கை அந்தத் தடைகளை தகர்த்தெறியும். வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ அப்போது வெற்றியும் நின்று விடுகிறது. ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பது தான் பெருமை!
முடியாது என சொல்வது மூட நம்பிக்கை!
முடியுமா என கேட்பது அவநம்பிக்கை!
முடியும் என சொல்வதே தன்னம்பிக்கை!

பத்மப்ரியா
