உனக்கென மட்டும் வாழும் இதயம்

One Priceless Lesson We Often Forget About Love - Hopes & Dreams ...
“குழந்தைங்க எங்க? பஸ் ஏறிட்டாங்களா ?”, என்று குளித்து முடித்து வெளியில் வரும்போதே கேள்வியோடு வந்த  மதுவிடம், “ம்.. கிளம்பியாச்சு!”, என்று மொட்டையாக பதில் கூறினார் மீனாட்சி. 
“எனக்கு சாப்பாடு டப்பால போட்டுட்டீங்களா?”, என்று மது மீண்டும் கேட்க,”அப்பவே போட்டாச்சு ..அங்க டேபிள் மேல இருக்கு!”, என்று மீண்டும் சுரத்தே இல்லாமல் மீனாட்சியின் பதில் வந்தது. “என்ன ஆச்சுன்னு இப்படி உம்முண்ணு பேசுறீங்க?”, என்று விசாரிப்பாய் கேட்ட மதுவிற்கு,” ஒன்னுமில்ல!”, என்று ஒரு வார்த்தையில் பதில் வந்தது மீனாட்சியிடம் இருந்து.
“என்னன்னு சொன்னாதான தெரியும்”, என்று சிறு எரிச்சலோடு மது கேட்க,” என்னன்னு சொல்லிட்டா மட்டும், நீ என்ன பண்ண போறே?”, என்று பதிலுக்கு  எரிச்சல் காண்பித்த மீனாட்சியின் கையை பற்றி, “ப்ளீஸ்.. சொல்லுங்க! என்னன்னு?”, என்று கனிவாக மது கேட்க , “ஷங்கர் சார் வீட்ல இருந்து கால் பண்ணாங்க.. அவங்க எல்லாருக்கும் உன்ன ரொம்ப புடிச்சி இருக்காம்.. கல்யாணத்தை நீ எப்ப சொல்றியோ, அப்ப வச்சுக்கலாம்னு சொல்றாங்க”, என்று மீனாட்சி பதில் கூறியதும் பற்றி இருந்த கையை விடுவித்துக் கொண்டு, தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்த மதுவிடம்,”சொல்லு சொல்லுனு  நச்சரிச்ச.. சொல்லிட்டேன்! இப்போ என்ன பண்ணிட போற?”, என்று குத்தலாக கேட்ட மீனாட்சியை ஒரு நிமிடம் உறுத்து பார்த்துவிட்டு,” நான் உங்ககிட்ட பல தடவை சொல்லிருக்கேன்.. இந்த கல்யாணத்த பத்தி மட்டும் என்கிட்ட பேசாதீங்கனு.. ஆனாலும் மறுபடியும் சொல்றேன்.. என் வாழ்க்கையில கல்யாணம்ன்ற அத்தியாயம் என் ஜீவா ஓட முடிஞ்சு போச்சு! ஜீவாவோட இடத்துல என்னால வேற யாரையும் வைச்சி யோசிச்சுக்கூடப்  பார்க்க முடியாது..!”, என்று கூறிய மதுவிடம்,” அதுக்காக வாழ்க்கப்  பூரா.. இப்டி ஒன்டிகட்டயா.. ஆபீஸ், வீடு ,குழந்தைங்கனு இருக்க போறியா?”, என்று ஆதங்கத்தோடு வெளிப்பட்டது மீனாட்சியின் குரல்.
“ஏழு வருட வாழ்க்கையில்ல ,என் ஜீவா கூட வாழ்ந்தது ஏழு வருட நட்பு கலந்த காதல்.. இன்னும் மறக்கல! அப்படி எல்லாம் மறக்கவும்  முடியாது!”, என்று தீர்க்கமாக பதில் கூறிய மதுவிடம் ,”34 வருட அன்பு எனக்கு உன் மேல.. நீ நல்லா வாழனும்.. சந்தோசமா இருக்கணும்.. என் பேர பசங்க நல்லாப்  பத்திரமா வளரனும்னு   ஆசைப்படுறது தப்பா?”, என்று குரல் தழுதழுக்க  மீனாட்சி கேட்க, “இப்ப நா சந்தோஷமா வாழலனு  நீங்க ஏன் நினைக்கிறீங்க? நல்ல வேலை, கை நிறைய சம்பளம், பண்பான குழந்தைங்க, அன்பா அரவனைக்க நீங்கன்னு நா நிறைவா,சந்தோஷமா தான் இருக்கேன்!”, என்று தீர்க்கமான பதில்  மது விடமிருந்து வரவும்,”ஒரு துண இல்லாம காலம்பூரா ..உன்னால வாழ்ந்துட முடியுமா? இல்ல, உன் குழந்தைகள வளர்த்து ஆளாக்க முடியுமா?”, என்று விடாமல் கேட்ட மீனாட்சியின்  கரத்தை மறுபடியும் இறுகப் பற்றி, ” என் குழந்தைகளுக்கு, அவங்க கனவுகளுக்கு, நா மட்டுமே போதும் ! அம்மாவா.. அப்பாவா.. நா அவங்கள நல்ல முறையில பார்த்துப்பேன்..  என்ன  தயவு செஞ்சு நம்புங்க! “, என்று கூறிவிட்டு பதில் எதுவும் எதிர்பாராமல், பைக் சாவியை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்த, தன் மகன் மது என்றழைக்கப்படும் மதுபாலக்கிருஷ்ணனை அப்படியே ஒரு கணம் அசையாமல் பார்த்தார் மீனாட்சி.
பின்பு  தலையை திருப்பி, சுவரில் மாட்டியிருந்த தன் மருமகள் ஜீவாவின் மாலையிட்ட புகைப்படத்தையும், அதற்கு அருகிலேயே மாட்டி இருந்த தன் மனைவி சிவகாமியின் மாலை இட்ட புகைப்படத்தையும்  நோக்கியவாறே’ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எதிர்பாராத விதமாக தன் மனைவி சிவகாமி தன்னை விட்டு பிரிந்து விட, மறுமணம் புரிய அச்சுறுத்திய தன் பெற்றோரிடம்,” என் குழந்தைய வளர்க்க நான் மட்டுமே போதும்! ஒரு தாயுமானவனா  அவன நல்ல முறையில் நா  பார்த்துபேன்..என்ன தயவுசெஞ்சு நம்புங்க..!”,என்றுக் கையெடுத்துக் கும்பிட்டு, தான் கூறிய அதே வார்த்தைகளை, இன்று இவருடைய மகன் வாயிலாக கேட்பதை  எண்ணியவரின் காதுகளில், புல்லட் பைக்கில், அவர் மகன் புறப்பட்டு செல்லும் சத்தம் கேட்க, நிம்மதி பெருமூச்சுடன் தன் போனை எடுத்தார்,”ஷங்கர் சார் எண்ணுக்கு கால் செய்ய ..ஒரு புதிய முடிவுடன்!, அந்த மீனாட்சி- என்கிற மீனாட்சிசுந்தரம்!!
எழுத்து- ப்ரியா பாலசுப்பிரமணியன்
Back To Top