உங்கள் ஆடைகளில் கட்டுப்பாடு கொண்டு வாருங்கள். உங்கள் கட்டழகை கடை விரிக்காதீர்கள்!
இப்படி ஒரு வாசகத்துடன் 3-4 வயது பெண் குழந்தைகளின் புகைப்படங்கள் (நவீன உடைகள், பர்தா அணிந்த குழந்தைகள்) இணையத்தில் காணக் கிடைத்தது.
எனில், அடிக்கும் வெயிலில் அனலாய் கொதிக்கும் நாட்டில் தலை முதல் கால் வரை முக்காடிட்டு புழுங்கிச் சாக வேண்டுமா பெண்ணினம்?
பெண்ணாய் பிறந்ததற்கு கிட்டும் சாபமா இது?
ஏன் எப்போதும் பெண் பிள்ளைகளையே கட்டுப்படுத்துகிறோம்?
ஏன் அவர்களின் அங்கங்கள் கட்டழகாக பார்க்கப்படுகின்றன?
இவையெல்லாம் கலாச்சாரத்தின் பெயரால் நிகழும் நம் பாரம்பரியத்தின் விளைவா?
உலகிலேயே குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகமிருக்கும் நாடு இந்தியா என்பதை இதனோடு பொறுத்திப் பார்க்க வேண்டாமா?
இளமை துள்ளும் நங்கைகளும் நீச்சலுடையில் சாதாரணமாக நடமாடும் மேற்கு நாடுகளின் ஆண்களுக்கு ஏன் வன் புணரத் தோன்றுவதில்லை?
பெண்ணே தெய்வம் என நாடு முதல் நதி வரை பெயரிட்டு அன்னை ஓர் ஆலயமாக ஆராதிக்கும் இந்திய கலாச்சார சூழலில் ஏன் இவ்வளவு வன்புணர்வுகள்?
பிறந்த 3 நாள் குழந்தை முதல், 90 வயது மூதாட்டி வரை வன் புணரப்பட்ட பெண்களின் பட்டியல் நீள்கிறதே?
இவையெல்லாம் பெண்களின் தவறா இல்லை இந்திய ஆண்களின் பாலியல் வளர்ச்சியா?
ஆண் ஆண்டான் பெண் அடிமை என்பதன் நீட்சியா?
இப்படியொரு கேவலமான மனித இனத்தை உருவாக்குவது தான் இந்தியாவின் கலாச்சார பண்பாட்டு விழுமியமா?
இவ்வளவு கேள்விகளுக்கும் என்ன தான் பதில்? பெண்கள் என்ன செய்ய வேண்டும்? ஆண் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு நாளும் கொடூரமாய் நிகழும் பாலியல் அத்துமீறல்களைத் தடுக்கும் நிரந்தரமாய் நிறுத்தும் வழி தான் என்ன?
உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் அலசுவோம்!
-நன்றி ராஜலட்சுமி நாராயணசாமி