அவ்வரக்க விரல்கள்
நீண்டெனது மார்பழுத்திய போது,
அது மார்பென்பதே அறியாத பேதை நான்
ஆணுக்கு உணர்ச்சி தூண்டும்
காமப் பொருளென்றோ
சிசுவுக்கு உணவூட்டும் அமுதசுரபி
எனவோ அறியாத அறியாமை நான்
துளையிட்டு உள்நுழைந்த அக்கொடூரனின் அங்கம்..
அவ்வங்கம் ஆதிக்கம் செலுத்தவென்றே படைக்கப்பட்டதென்
பிறப்புறுப்பு என்பதை அறியவில்லை நான்
சிறுநீர் கூட கொஞ்சமாய் ஒழுகும்
சிறுதுவாரமாய் இன்னும் வளரக்கூட இல்லாத அவ்விடத்தில்
அவன் அழுத்தம் கொடுத்த ரணத்தில்
உயிர்பிளக்கும் வலி சுமக்கும் போது..
அது குழந்தை ஈன்றெடுக்கும்
சிறப்புறுப்பு என்பதறியாத குழந்தை நான்
ஏதும் தெரியாத எனக்கு
அவன் காட்டிய போலிப் பாசமும்
இனிப்பூட்டும் மிட்டாய்களும்
மட்டுமே தெரிந்தன.
அதன் பின்னிருந்த கோரமுகமும்
காமுகமும் அறியாத சிறு சிட்டு நான்
இவையெல்லாம் அறிந்தவன்
நான் குழந்தையென்பதை
எனக்கு மரணவலி வலிக்குமென்பதை
கபடமில்லா என் சிரிப்பு சிதறிவிடுமென்பதை
அறிந்தும் மறந்துவிட்டான்.
அறிந்ததை மறக்காதிருக்க
அடக்கியாளும் எண்ணம் துளிர்க்காமலிருக்க
ஆண்மையை காட்டாதிருக்க
மோகம் அடக்க
காமம் அடக்க
ஒழுக்கம் ஓம்ப
சொல்லிக் கொடுங்கள்
ஆண் சிசுவிற்கு
என் பெயரால்
கூண்டிலிட்டுப்
பூட்டாதீர்கள்
பூந்தளிர்களை
– இப்படிக்கு வன் புணர்வால் உயிர் பிரிந்த பெண் குழந்தை
image credit: needpix.com
ராஜலட்சுமி நாராயணசாமி