சமீபத்தில் நான் பார்த்த பெங்குயின் படத்தில் என் மனதைத் தொட்ட வரி இது. “அப்படி சிலாகிச்சுக்கிற அளவுக்கு இந்த வரில என்ன இருக்கு….?” ன்னு யோசிக்கலாம். நிறைய விஷயம் இருக்குது…..அதப் பத்தின என்னோட பார்வையதான் நான் உங்க கிட்ட பகிர்ந்துக்கப் போறேன்.
காலம் காலமாக “ஹீரோ வொர்ஷிப்” என்ற வட்டத்திலிருக்கும் சினிமாவில்… அத்தி பூத்தாற்போல….. குறிஞ்சிமலர் மலர்வது போல ……ஹீரோயின் வொர்ஷிப்பும் நடப்பதுண்டு.
மாற்றங்கள் எல்லா காலகட்டத்திலும் இருந்தாலும்……, மாறாத ஒன்று, வெறும், நாலு பாட்டுக்கு நடனமாடிவிட்டு, ஒப்புக்கு வந்து போகும் கதாநாயகிகளாக, படத்துக்கு கவர்ச்சி தேவை என்பதாலேயே இப்போதும் கூட பல கதாநாயகிகளின் கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுவதுதான்.
1990 ல் வெளிவந்த வைஜயந்தி IPS அந்த கால கட்டத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது, மொழி, 36 வயதினிலே, அறம், அருவி, இமைக்காநொடிகள், பொன்மகள் வந்தாள் போன்ற படங்கள் வலுவான கதைகளைக் கொண்டு நாயகிகளுக்கான முக்கியத்துவத்துடன் வலம் வந்தன. . அழுத்தமான கதை, ஆழமான நடிப்பு என எல்லாக் கோணங்களிலும் வரவேற்பைப் பெற்றன. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த நடிகையர் திலகம் படம் அவருக்கு தெலுங்கு மொழியில் தேசிய விருதை வாங்கிக்கொடுத்தாலும்…. அது சாவித்ரி என்ற மாபெரும் நடிகையின் வாழ்க்கை வரலாறு என்பதால், அதில் கதாநாயகி மையப்படுத்தப்பட்டதில் ஆச்சரியமில்லை.
அதே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் “பெங்குயின்” படம் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால்…., ஒரு சில விஷயங்கள்…
சினிமா என்பது “லாஜிக் இல்லா மேஜிக்….” . கதாநாயகனால் ஒரே நேரத்தில் இருபது பேரை அடிக்கமுடியுமென்றால்……, குத்துயிரும் குலையுயிருமாக கிடக்கும்போதும்….எழுந்து…., ஓடி….., காரைத் துரத்தமுடியும் என்றால்….., இந்தப் பெங்குயின் படத்தின் காட்சிகளும்….லாஜிக் பற்றிய கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை. அதனால், எந்தவிதமான ஆராய்ச்சிக்கும் இடமில்லாமல், இந்தப் படத்தில் உள்ள நேர்மறையான கருத்துக்களை மட்டுமே நான் பகிர விரும்புகிறேன்.
முதலாவதாக…..ஒரு பிள்ளைதாய்ச்சிப்பெண்…..இத்தனை பெரிய வயிற்றைத் தூக்கிக்கொண்டு செய்யும் காரியங்களா இவையெல்லாம்….? இது நடைமுறையில் சாத்தியமா ….? இதெல்லாம் , ரொம்ப ஓவரா இல்ல…..? ” போன்ற கேள்விகள் உங்களுக்குள் இருக்குமென்றால்…, இதை மேற்கொண்டு படிக்க வேண்டாம். ஏனென்றால்….கார் ஸ்டியரிங்குக்கு கீழே விழுந்த கார் சாவியை கதாநாயகி (ரிதம்) தன்னுடைய வயிற்றை அழுத்தி…குனிந்து எடுப்பது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால், அந்த சூழ்நிலையைப் பார்க்கும்போது…. உடம்பில் ரத்தம் வழிய வழிய……இருபது பேரை ஒற்றை ஆளாய்ப் பந்தாடும் ஹீரோவை நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது அந்தக் கேள்வி மனதில் எழாது.
இப்போது என் மனதை தொட்ட வரி…..
“I am just pregnant….not brain damaged….” இந்த வரி….ஆயிரமாயிரம் பொருள் பொதிந்தது. இது அழுத்தமாகச் சொல்வது “தன்னம்பிக்கை “
ஒரு பெண்ணின் வாழ்க்கையில், பூப்பெய்துவது…., மாதவிலக்கு…, திருமண உறவு…., பிள்ளைப்பிறப்பு…., மெனோபாஸ்…. இவை எல்லாமே உணர்வுபூர்வமானவை.
இதில், எந்த ஒன்றும் அவளின் நடைமுறை வாழ்க்கையை பாதிக்கவோ… அல்லது அதற்காக புறக்கணிக்கப்பட்டோ இருக்கவேண்டியதில்லை.
பிள்ளைப் பிறப்பு என்பது மிகவும் போற்றப்படவேண்டியது. சந்தேகமே இல்லை. ஒரு ஆனால், அது அவளுடைய முழு வாழ்வில்…., ஒரு காலகட்டத்தில் வரும்…., ஒரு நிகழ்வுதான். அதனால், பயப்படுவதற்கோ….. அதன் காரணமாக சோம்பேறித்தனமாக இருப்பதற்கோ… அவசியமே இல்லை. மருத்துவர் சொன்னாலொழிய படுக்கையிலேயே இருக்க வேண்டும்…. எதுவும் செய்யக்கூடாது என்பதெல்லாம் தேவையே இல்லை. உற்சாகமாகவும் முன்சாக்கிரதையாகவும் இருந்தால் போதும். பெற்றோர்களும் கூட சில நேரங்களில்…அதீத அக்கறை காட்டி….ஏதோ ஒரு பூதாகாரமான விஷயமாக இதனை ஆக்குவதும் உண்டு. உண்மையில், வாழ்க்கை மிக மிக எளிதானது. அதை சிக்கலாக்கிக்கொள்ளவேண்டியதே இல்லை.
இந்தக் கதையின் நாயகி ரிதம் ஒரு கர்ப்பிணி. அவள் தன்னுடைய தொலைந்து போன மகனைத் தேடுவதும்….கடைசியில் அவனை அடைவதும் மிக மிக நேர்த்தியாக….பல திடுக்கிடும் சம்பவங்களுடன்….பல திருப்பங்களுடன் சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கிறது.
இதில், அந்த கர்ப்பிணிப்பெண் சொல்வதாக வருவதுதான் அந்த வசனம்…. கர்ப்பிணியாக இருக்கும் உனக்கு இது தேவையா….? இந்த ஆபத்து அவசியமா….? உன்னால் இது முடியுமா….? போன்று மனதில் எழும் பல கேள்விகளுக்கு….ஒற்றைவரி பதில். அதாவது,
“நான் கர்ப்பிணிதான்….மூளை செயலிழந்தவள் அல்ல…..”என்பது.
எவ்வளவு நம்பிக்கை கொடுக்கும்….., பிரச்சினைகளை ஊதித்தள்ளும் வசனம் இது. நான் கர்ப்பிணியாக இருப்பதால்…..செய்யமுடியாது என்பது அல்ல என்பதை….ஒரு அழகான அலட்சியத்துடன் சொல்வது கொள்ளை அழகு.
இரண்டாவதாக, ஒரு விவாகரத்தான ஒரு பெண்…., தன்னுடைய வாழ்க்கையை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இயல்பாக வாழ முடியும் என்பதை சர்வ சாதாரணமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக்.
முதல் கணவனின் தொலைந்து போன குழந்தையை ….இரண்டாவது கணவனின் குழந்தையை வயிற்றில் சுமந்தபடி ரிதம் தேடியலைகிறாள்.இந்த ஒரே வாக்கியத்துக்குள்….அவளுடைய முறிந்து போன மணவாழ்க்கை……., மறுமணம், சோகத்தை மறந்து நம்பிக்கையுடன் ஆரம்பித்திருக்கும் புது வாழ்க்கை…. என பல சிக்கலான வாழ்க்கையின் முடிச்சுக்களை சுலபமாக நெகிழ்த்திக் காட்டியிருக்கிறார்.
எதுவுமே வாழ்க்கையின் முடிவல்ல……, எல்லாமே தொடரும்….., நன்றாகவே நடக்கும் என்ற நேர்மறையான சிந்தனை இதில் பளிச்சிடுகிறது…..
மூன்றாவதாக….. “அம்மா என்பது ஒரு attitude” என்று சொல்லியிருப்பது. உண்மைதான்…..படித்தவளோ படிக்காதவளோ….., பணக்காரியோ அன்றாடங்காய்ச்சியோ….. அம்மா என்பவளுக்கு குழந்தை எவ்வளவு முக்கியம்…., அதன் மேல் காட்டும் அன்பும் பாசமும்….வார்த்தைகளால் சொல்லமுடியாது….. அது ஒரு உணர்வு என்பதை மிக மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில்……ரத்தமும் சதையுமாக…. திகிலூட்டும் வகையில் படமாக்கப்பட்டு….பின்னணி இசையில் மிரட்டும் வகையில் படம் இருந்தாலும்…..பல நல்ல கருத்துக்கள் பொதிந்திருப்பதாகவே நான் பார்க்கிறேன்.
பெங்குயின்…..நிச்சயமாக “பெண்குயின்” தான்….சந்தேகமே இல்லை.
என்னை பாதித்த…. எனக்குப் பிடித்த படம்…..அதில் எனக்குப் பிடித்த வரி….. “I am just pregnant………”
இனிய பகிர்தலுடன்…..
உங்கள் மாலா ரமேஷ், சென்னை.