“ஹலோ பரத்! எங்க இருக்கீங்க ஐ ஹேவ் ரிச்டு தட் ரெஸ்ட்ரன்ட்!”, என்று கூறிய ஆதிராவின் செல்போனின் மறுமுனையில் இருந்து,”ஓ ..ஓகே ! நீ ஒன்னு பண்ணு உள்ள போய் ஒரு டேபில உட்காரு ..ஐ வில் பி தேர் இன் 5 மினிட்ஸ்”, என்று கூறினான் பரத். போனை அணைத்து விட்டு அந்த அழகிய ஏசி ரெஸ்டாரண்டுக்குள் தன் பெரிய பேக்பேக்கோடு நுழைந்தாள் ஆதிரா-21 வயது கொஞ்சம் பூசினால் போல இருந்தாலும் உயரமாக இருந்ததால் அளவாக,அழகாக இருந்தாள். பிளாக் அண்ட் வொயிட் அனார்கலி சுடிதாரில், ப்ரீ ஹேர் விட்டு, அளவான மேக்-கப்போடு வந்திருந்தாள். பி.இ ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருந்தாள், திருச்சியில்.
உள்ளே நுழைந்து சுற்றி பார்த்த அவளை ,”வெல்கம் மேம்! ஹவ் மெனி மெம்பர்ஸ்?”, என்று வரவேற்பாய் கேட்டான் ஒரு இளம் வாலிபன்.”2″, என்றாள் சுருக்கமாக.” ப்ளீஸ் கம் வித் மீ..”, என்று அவளை அழைத்துப்போய் ஒரு ஜன்னல் அருகில் இருந்த டேபிளைக் காட்டி அங்கே அமரும்படி கூறினான் .பேக்கோடு உள்ளே உட்கார சிரமப்பட்ட அவளிடம் “மே ஐ”, என்றவனை தலையசைத்து மறுத்துவிட்டு, கௌச்சின் உள்புறத்தில் பேகை வைத்துவிட்டு, தானும் அமர்ந்தபடியே கண்ணாடி ஜன்னலின் வழியே தெரியும் அழகிய தோட்டத்தைப் பார்த்தாள். அந்த வெயிலிலும் பார்ப்பதற்கு செழிப்பாகவும் குளிர்ச்சியாகவும் தெரிந்தது. “கார்டன் வியூ மேம்..யூ வில் எஞ்சாய் இட் !”,என்று கூறிவிட்டு நகர்ந்தான் அந்த வாலிபன். போனை ஆன் செய்து டைம் பார்த்தாள், மணி 1.30 p.m. என்று காட்டியது . போனை டேபிள் மீது வைத்துவிட்டு ஜன்னலை தாண்டி செடிகளையும், மலர்களையும் பார்த்தபடி பரத்துடன் தான் முதல் முதலில் பேச ஆரம்பித்த கதையை மனதில் ஓட விட்டாள்.
சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, காலேஜ் ஹாஸ்டலில் அமர்ந்து தன் தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள் ஆதிரா. அப்போது அவளுடைய செல்போனிலிருந்து ,ராம் படத்தில் வரும் ‘ஆராரிராரோ..’ பாடல் ரிங்டோனாக ஒலிக்க, “அம்மா”என்ற படி கால் அட்டன்ட் செய்து காதில் வைத்து “சொல்லுமா!”,என்றாள் ஆதிரா. “நான் சொன்னேன்ல பரத், அந்த தம்பி உன் நம்பர் வாங்கி இருக்காரு மா.. உன் கிட்ட பேசணுமாம்..”, என்று அவளுடைய அம்மா மறுமுனையில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே “மா.. ஓவரா போயிட்டு இருக்கே நீ ! யாரைக் கேட்டு நீ நம்பர் கொடுத்த.. எனக்கு இப்போ மேரேஜ் எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல மா ..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ!”,என்று பட படவென பொரிந்தவளிடம் “நாங்க ஒன்னும் வேணும்னு பண்ணல ஆதிரா ..உனக்கே தெரியும் அப்பாவோட ஹெல்த் கண்டிஷன்.. இப்போ மேரேஜ் பண்ணா என்ன ஆகும்? நீ பண்ணனும் நினைக்கிற ஹையர் ஸ்டடீஸ கல்யாணத்துக்கு அப்புறமா பண்ணு ..அந்த தம்பி கிட்ட பேசிட்டேன்.. அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லேன்னுடாரு. நல்ல குடும்பம்.. நல்ல பையன் ஆதிரா..”, என்று விடாமல் அடுக்கிய அம்மாவிடம்,”அச்சோ போதும்! இப்போ என்ன போன் பண்ணுவாரு, பேசணும் அவ்வளவுதான ..நான் பார்த்துகிறேன் ! நீ போன வை!”, என்று கடுப்பாக கூறிவிட்டு பதிலுக்காக காத்திராமல் போனை கட் செய்தாள். எரிச்சலோடு தலையில் கை வைத்து அமர்ந்தவளை உலுக்கினாள் அவளுடைய தோழி ரம்யா.
“என்னடி ஆச்சு? நம்பர் கொடுத்துட்டாங்களா.. அப்போ இனிமே மேடம் போனும் கையுமா எந்நேரமும் பிசியா இருப்பீங்க!!”, என்று கிண்டலாக கேட்கவும்,”உன்ன கொல்ல போறேன் பாரு!”, என்று கூறிவிட்டு வேகமாக வெளியில் சென்றுவிட்டாள். செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே காற்றாட உலாவியவளுக்கு அன்னோன் நம்பரிலிருந்து ஒரு கால் வந்தது. போனை ஆன் செய்து “ஹலோ! ஹூ இஸ் திஸ்?,” என்றாள் யோசனையாக. “ஹாய் ஆதிரா! பரத் ஹியர்!”, என்று ஒரு ஆண் குரல் மறுமுனையில்.”ஓ ..பரத்!ஓகே.. சொல்லுங்க ..”,என்றாள் பதட்டத்தை வெளிக்காட்டாமல். “ஜஸ்ட் கால்ட் யூ டூ ஸே ஹாய்.. அண்ட் கொஞ்ச நேரம் பேசலாம்னு.. இஸ் திஸ் த ரைட் டைம் டு டாக்?”, என்று கேட்ட வனிடம்,” சொல்லுங்க.. ப்ரீயா தான் இருக்கேன்!”, என்றாள். ஒருபக்கம் அவளுடைய மூளை ‘ஏன்..பிஸியா இருக்கேன்னு சொல்லி கால அவாய்ட் பண்ணி இருக்கலாம் இல்ல.. மக்கு மக்கு!’, என்று தன்னையே திட்டிக் கொண்டிருந்த போதே, “சோ.. ஆதிரா, பைனல் இயர் பி.இ. படிக்கிற ..இதுக்கு மேல எதுவும் தெரியாது ..ஆனா நம்ம வீட்ல கல்யாணம் பேசுறாங்க.. முதல்ல நான் உன்ன பத்தி தெரிஞ்சுக்கணும்.. நீ என்ன பத்தி தெரிஞ்சுக்கணும் ..அப்புறம் நம்ம கல்யாணத்த பத்தி எல்லாம் டிசைட் பண்ணலாம்!”, என்று சுற்றி வளைக்காமல் பேசிய அவனுடைய பேச்சா ? இல்லை பேச ஆரம்பித்த முதல் நாளே, தனக்கு ஒரு காதலி இருந்ததும், அவளோடு ஒரு வருடத்துக்கு முன்னதாக பிரேக் அப் ஆனதைப்பற்றியும்,நேர்மையாக தன்னிடம் கூறிய அந்த கள்ளம் கபடமில்லாத மனமா
?,என்று அவளுக்கு தெரியவில்லை.
ஆனால் அவள் தோழி ரம்யா கிண்டல் அடித்தது போலவே, அடுத்த ஒரு மாதம் போனும் கையுமாய், வாட்ஸ்அப் ..லேட் நைட் கால்ஸ் என்று ஓடிப்போனது.திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன் கால் செய்து, “ஆதிரா.. நான் ஒரு ஃப்ரண்ட் மேரேஜ் காக இன்னைக்கு நைட் கிளம்பி திருச்சி வரேன். சண்டே அன்னிக்கு மேரேஜ்.. மார்னிங் மேரேஜ் முடிச்சுட்டு ,ஐ தாட் வி வில் மீட் சம்வேர்.மே பீ ப்பார் லண்ச்?”, என்று கேட்டான் பரத். உடனே,” ஷுயர்..பார்க்கலாமே..நான் இப்பவே ப்ராஐக்ட் வர்க் என்று சொல்லி வார்டன் கிட்ட அவுட்டிங் பர்மிஷன் வாங்கிடரேன்”,என்று சந்தோசமாய் கூறினாள் ஆதிரா. “கிரேட்! சோ.. வி ஆர் மீட்டிங் திஸ் சண்டே..ஓ காட்..ஐ அம் சோ எக்ஸைடட்.!ஓகே ஆதிரா.. கொஞ்சம் பேக்கிங் வொர்க்லாம் இருக்கு.. க்ளோஸ் ஃப்ரண்ட் மேரேஜ்.. ஸோ 2 டேஸ் முன்னாடியே அவன் கூட இருக்கனும்னு சொல்லிட்டான். ரொம்ப போன் பேச முடியாது.. பட் ஐ வில் டெக்ஸ்ட் யூ..”, என்று கூறி போனை வைத்தான்.
இன்று ஞாயிற்றுக்கிழமை, அவனைப் பார்ப்பதற்காக இந்த ரெஸ்டாரண்டில் காத்திருக்கிறாள். எப்.பி, இன்ஸ்டால ஃபோட்டோஸ் மட்டும் பார்த்திருக்கிறாள், அவனும் தான்.. நேரில் இப்போதுதான் இருவரும் சந்திக்க போகிறார்கள்.. இவ்வாறு யோசனையில் மூழ்கி இருந்தவளை, “வாட்டர்”,என்று ஒரு வாட்டர் பாட்டிலை திறந்து டம்ளரில் நிரப்பிய வெயிட்டர் நினைவுக்கு கொண்டு வந்தான்.”தேங்க்ஸ்..”, என்றவளின் கவனம் ரெஸ்டாரண்டின் கதவு திறக்கவும், அந்த பக்கம் சென்றது. பச்சை நிற செக்டு ஷர்ட், மங்காத்தா அஜித் போடுவதுபோல் கோல்ட் ஃப்ரேம் ஏவியேட்டர் கிலாசஸ்.. லைட்டா கலர் பண்ணின பரட்டை தலை, குட்டி தொப்பை,பிராண்டட் வாட்ச்சோடு நடந்து வந்த பரத்தை பார்த்ததும், ஏனென்று தெரியாமல் பட்டாம் பூச்சி பறந்தது அவள் வயிற்றில். பயமா? பதட்டமா? என்று சொல்ல தெரியவில்லை. சட்டென்று தலையைத் திருப்பி, ‘பின்புறம் ஏதேனும் வழி இருக்கிறதா? இருந்தால் ஓடி விடலாமா?’ என்று கூட தோன்றியது அவளுக்கு. அதற்குள் தன்னை கவனித்து கை காண்பித்துவிட்டு, டேபிளை நெருங்கிய பரத்,” ஹலோ மேடம்! அட் லாஸ்ட் அம் ஹியர் ..சாரி ஐ மேட் யூ வெயிட்!”,என்று சொல்லிக்கொண்டே எதிரில் அமர்ந்தான். திருதிருவென விழித்துக் கொண்டே, என்ன சொல்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்தபடி அமர்ந்திருந்தவளை ஆராய்ந்து பார்த்து விட்டு, பக்கத்தில் இருந்த பெரிய பேக்கை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.
” நான் லன்ச் முடிச்சுட்டு,உன் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு நைட்டே ஊருக்கு போய்டணும்!”, என்றான் தெளிவாக .”தெரியுமே!போன்லயே சொன்னீங்களே!”, என்றாள் கேள்வியாக. ” இல்ல.. நீ கொண்டு வந்திருக்கிற பெரிய பேக்கை பார்த்தா ..இன்னைக்கு நான் ஊருக்கு போகணும்ரத மறந்துட்டியோன்னு பார்த்தேன்..!”, என்று அவன் அக்கறை போல கேலியாக கூறவும், முதலில் புரியாவிட்டாலும், சில நொடிகளில் அவன் கூறியது விளங்க ,சிறு கோபமும், தர்ம சங்கடமுமாய் சிரித்து வைத்தாள்.”ம்ம்.. போட்டோவில் பார்த்ததை விட கொஞ்சம் குண்டாயிட்டியோ? எத்தன வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோ அது?”, என்று அவன் கேலியை தொடர ,”2 மன்த்ஸ்க்கு முன்னாடி எடுத்தது தான்.. உங்க போட்டோஸ் ல கூட தான் உங்களுக்கு தொப்பை இருக்கிறதே தெரியல..”, என்று பதிலுக்கு கிண்டலாக கூறியவளை பார்த்து “அப்பாடா.. இப்போதான் நீ என்கிட்ட போன்ல பேசின பொண்ணு மாதிரி பேசுற..நீ முழிச்ச முழியைப் பார்த்து நா கூட வேற டேபில்ல,வேற பொண்ணு முன்னாடி வந்து உட்கார்ந்துட்டோமோன்னு பயந்துட்டேன்”,என்றான் சிரிப்போடு .
” ம்ம். “என்று மீண்டும் ஒரு அசட்டு சிரிப்பை போட்டு விட்டு, திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தாள்.அதற்குள் வெயிட்டர் வந்து,”வாட் உட் யூ லைக் டு ஹேவ் சர்?”, என்று கேட்க, மெனு கார்டை ஒருமுறை பார்த்து ,அவன் தனக்கு வேண்டியதை சொல்லிவிட்டு, “உனக்கு என்ன வேணும் ஆதிரா?”,என்றவனிடம், “எனக்கு…. ஆக்சுவலி ஐ அம் நாட் பீலிங் ஹங்கிரி.. ஏதாவது ஜுஸ் மாதிரி குடிக்கிறேன்..ஹம்.. ஒரு பப்பாயா ஜூஸ்!”, என்றதும் வெயிட்டர் ஒரு மாதிரியாக சிரித்துக்கொண்டே”ஷுயர் மேடம்!”, என்று டாபில் நோட் பண்ணிக் கொண்டு,” தட்ஸ் ஆல் சார்?”, என்று கேட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
பரத்தும் தன்னை பார்த்து சிரிப்பதை புரிந்துகொண்டு,”இப்ப என்ன கேட்டுட்டேனு வெயிட்டர் ஒரு மாதிரி சிரிக்கிறார்.. நீங்க ஒரு மாதிரி சிரிக்கிறீங்க?”,என்று பாவமாக கேட்டவளிடம்,” இல்ல ஆதிரா ..நீ ஒரு இளம்பெண்.. நான் ஒரு இளம் வாலிபன்.. நீ வேற பக்கத்துல பெரிய பேகோட இருக்க.. பப்பாயா ஜூஸ் வேற கேட்கவும் அவன் என்ன யோசிச்சானோ என்னவோ!?”, என்று சிரிக்காமல் பாவம்போல் கூறிய அவனை,முதலில் முறைத்துவிட்டு,பின்பு “சரியான வம்பு புடிச்ச ஆளா இருக்கீங்க..”, என்று கூறிவிட்டு சிரித்தாள். உணவு வந்ததும் சாப்பிட்டுவிட்டு, ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே வந்து ,அவன் காரில் இருவரும் ஏறியதும், ‘அடுத்தது என்ன?’ என்பது போல் ஆர்வமாக பார்த்த ஆதிராவிடம் ,”ஆதிரா.. எங்கேயாவது குவைட்டான ப்லேசுக்கு போலாமா? நல்ல கம்போர்டபிளான சீட்ஸ் இருக்கணும்.. ஆனா ரொம்ப கூட்டமா வோ இல்ல நாய்ஸியாவோ இருக்கக்கூடாது..”, என்று அவன் கேட்கவும்,’நம்ம கூட மனசு விட்டு பேசறதுக்கு தான் இப்படிக் கேட்கிறான்’, என்பதை புரிந்தவளாக “இப்படியே போனால் ஒரு பிளானட்டோரியம் இருக்கு ..ரொம்ப பீஸ்ப்புலான பிளேஸ் எங்க கேங் ஓட ஃபேவரிட் ஸ்பார்ட்!”, என்று அவள் கூற, அடுத்த 15 நிமிடங்களில் பிளானட்டோரியத்தை அடைந்து, டிக்கெட் எடுத்து 20 நிமிட கோள்களைப் பற்றிய குறும் படத்தை பார்க்கும் ரூமுக்குள் சென்று ,நன்கு சாய்ந்து மேலே இருக்கும் திரையை பார்ப்பதற்கு ஏதுவாக இருந்த சேர்களில் அமர்ந்தார்கள் இருவரும்.
அங்குமிங்குமாய் பெரியவர்கள், குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள். ‘நன்கு குளிரூட்டப்பட்ட அறை !அவன் கேட்டது போலவே ஜாலியாக பேசுவதற்கு ஏதுவான இடம்!!’, என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, விளக்குகள் அணைக்கப்பட்டு, சூரிய குடும்பத்தையும் அதன் கோள்களையும் பற்றிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஓட ஆரம்பித்தது .அதை பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவுக்கு திடீரென்று ‘கொர் கொர்’, என்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால்,நன்கு தூங்கிவிட்டிருந்தான் பரத்.அதுவும் குறட்டை வரும் அளவுக்கு ஆழ்ந்த உறக்கம்! கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள் ஆதிரா.. அடுத்த 20 நிமிடம் எப்படி ஓடியது என்று அவளுக்குத் தெரியாது .குறும் படம் முடிந்தும் விழிக்காமல் தூங்கபவனை பார்ப்பதற்கு கொஞ்சம் பாவமாகவும் இருந்தது அவளுக்கு. அவனை எப்படி எழுப்புவது என்று புரியாமல் இவள் விழிக்க,ஒருவழியாக செக்யூரிட்டி வந்து எழுப்பவும் எழுந்து,” வாவ் நல்ல தூக்கம்! கிரேட் பிளேஸ் டு ஹேவ் எ பவர் நேப் ஆதிரா.. தேங்க்ஸ் சோ மச்!”, என்று கூறிவிட்டு ஹேர்ஸ்டைலை சரி பண்ணிக்கொண்டு,காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அவன், பின்தொடர்ந்தாள் ஆதிரா.
‘கொஞ்சம் வம்பா பேசினாலும் ரொம்ப கண்ணியமானவனாதான் தெரிகிறான்..”, என்று மனதில் எண்ணி சிரித்துக்கொண்டாள். காரில் ஏறியதும் வாட்ச்சை பார்த்தபடி “டைம் 6.30 p.m. ஆயிடுச்சா? டைம் போனதே தெரியல ஆதிரா! ஐ வில் ட்ராப் யு இன் யுவர் காலேஜ் அண்ட் ஸ்டார்ட் பேக் டு ஹோம்.. சரியா?”,என்று கேட்டவனிடம், சரியென்று தலையாட்டியவளுக்கு,ஒரு வித மாக சோகமாக இருந்தது.’டைம் இப்படி ஓடிப் போயிடுச்சே!’, என்று நேரத்தைக் கடிந்தாள். காரின் மியூசிக் சிஸ்டத்தில் ‘என்ன சொல்ல ..ஏது சொல்ல.. கண்ணோடு கண் பேச வார்த்தை இல்லை!’,என்ற பாடல் ஓட ஆரம்பித்தது.
காரை ஓட்டிய படியே”ஆதிரா..ஐ அம் சோ ஹாப்பி டுடே! உன்னைப் பார்த்தது,உன் கூட இருந்தது.. ஐ ப்பீல் லைக், ஐ அம் வித் சம்ஒன் ஐ ஹேவ் நோன் ப்பார் யியர்ஸ்… கண்டிப்பா உன்ன மிஸ் பண்ணுவேன்..”, என்று சொல்லி, “உனக்கு எப்போ ஃபைனல் எக்ஸாம்ஸ்?”,என்று அவன் கேட்க, “மே என்ட்ல ..ஏன்?”,என்று கேட்டவளிடம்,”இல்ல ..அப்ப ஜூன் ல மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணினா கரெக்ட்டா இருக்கும்ல?”, என்று ஆர்வமாக அவன் கேட்க,பீறிட்டுக் கொண்டு வந்த வெட்கத்தை மறைத்தபடி, “கல்யாணமா ? நமக்கா?”,என்று புரியாமல் கேட்பது போல் அவள் கேட்கவும், கொஞ்சம் அதிர்ந்து போய்,”எஸ்! நாம அதுக்காக தானே பேச ஆரம்பிச்சோம்..ஐ மீன்.. ஓகே! உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க ஓகே தானே?”, என்று கேட்டவனிடம் ,”ம்ம்.. ஓகே தான் ஆனா ஒரு கண்டிஷன்!”, என்று அவள் சொல்ல ,’என்ன?’, என்பதுபோல் பார்த்தவனிடம், “மேரேஜ்க்கு அப்புறம் எங்கியாவது வெளியில போனா, தூங்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க..கல்யாணம் பண்ணிக்கலாம் !”,என்றாள் சிரித்தபடியே வெட்கத்தோடு.
சட்டென்று அவள் கன்னங்களை பிடித்து நெற்றியில் இதழ் பதித்தான் பரத். இதை சற்றும் எதிர்பாராத ஆதிரா,கொஞ்சம் கோபமா ?இல்லை பதட்டமா? என்பது தெரியாமல் , விழியில் துளித்த சிறுநீரோடு மிரண்டுபோய் அவனைப் பார்க்க,” அம்மா தாயே! சாபம் கீபம் விட்டுடாதே.. நான் கோயம்புத்தூர் வரைக்கும் பத்திரமாக போய் சேரணும்!”, என்று பாவம் போல அவன் கூறவும் சிரித்தே விட்டாள் அவள். அதற்குள் அவள் இறங்கும் இடம் வந்தவுடன் பையை எடுத்துக் கொண்டு இறங்க மனமில்லாமல் இறங்கியவளின் கையை பிடித்து,”ஐ வில் மிஸ் யூ! ரூமுக்கு போனதும் கால் பண்ணு!”, என்று சொன்னவனின் கையை அழுத்தி ,”வில் மிஸ் யூ டூ ..கால் பண்றேன்!”, என்று கூறிவிட்டு அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் கன்னங்களில் இதழ் பதித்து விட்டு, வேகமாக காரை விட்டு இறங்கி ,அவனை திரும்பி திரும்பி பார்த்தபடியே நடந்து ,கேட்டை தாண்டி மறைந்து போனாள் ஆதிரா.
ஒரு வித மன நிறைவோடும் உற்சாகத்தோடும் காரை ஸ்டார்ட் செய்து, மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்யவும், ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்! என் ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…’, என்ற ராஜாவின் இசை மழையில் நனைந்தவாறே கோயம்புத்தூரை நோக்கி காரை ஓட்ட ஆரம்பித்தான் பரத் காதலோடு…
எழுத்து-ப்ரியா பாலசுப்பிரமணியன்.