நான் வரைந்த தூரிகை- 1

Pin on Crafts for boys

தூரிகை 1

சென்னை – 2019

‘மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று
ஆனந்த யாழை மீட்டுகிறாள்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்’

‘நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தங்க மீன்கள் படத்திற்காக நா.முத்துக்குமார் வரிகளில்,யுவன் சங்கர் ராஜா இசையில், ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியது…..’

“ஹேய்….சித்ரா….சித்ரா….உன்னைத்தான்டி கூப்பிடுறேன்!”

“என்னது கூப்பிட்டியா?சாரிடி. நான் கவனிக்கலை”

“என்னது கவனிக்கலையா?அடி பாவி! பத்து நிமிஷமா உன் பேரை ஏலம் விட்டுட்டு இருக்கேன். நீ அப்படி என்ன ரேடியோ கேட்டுட்டிருக்கே?”

“ஏய்! சாரி பூஜா.இந்த பாட்டை கேட்டிருக்கியா?எவ்வளவு அழகான பாட்டு இல்ல? கண்மூடி கேட்டா எவ்ளோ சுகம் தெரியுமா?அம்மா மடியில் படுத்து தாலாட்டுக் கேக்குற மாதிரி, மழை நின்றும் தூவானம் மறையாத சாலையில் நடந்து போற மாதிரி, பௌர்ணமி நிலவில் கடற்கரைக் காற்றை சுவாசிக்கிற மாதிரி, காலையில் மலர்ந்த பூக்கள் மீது பொழிஞ்ச பனித்துகளை முகருவது மாதிரி,அப்புறம்….”

“ஏய்!ஏய்!கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசுடி!பேசாம நீ ஒரு கதாசிரியராகவோ,கவிதாயினியாகவோ ஆகியிருக்கலாம். இங்க இந்த ஸ்கூல்ல வந்து வேலை பார்த்துட்டு மழை, நிலா, பூ, லொட்டு லொசுக்குனு ஏன்டி என் உயிரை வாங்குறே?”

“கழுதைக்கு தெரியுமா கற்பூற வாசனை!”

“ஹலோ….நாங்க கழுதையாவே இருந்துட்டு போறோம். கழுதைங்க கூட, தான் உண்டு தன் வேலை உண்டுனு இருக்கும். இந்த புத்தி கெட்ட மனுசங்க மாதிரி நிமிஷத்துக்கு நிமிஷம் நிறம் மாறிட்டே இருக்காது”

“என்னை கவிதாயினினு சொல்லிட்டு நீ ஏன்டி சாமியாரினி மாதிரி பேசுறே?மனுசங்க மேல உனக்கு அப்படி என்ன கோபம்?”

“ஐயோ ஆத்தா! மறுபடியும் உன் பிரசங்கத்தை ஆரம்பிச்சுடாதே. நான் சும்மா பொதுவா தான் சொன்னேன். இப்போ நீ சொன்னியே என்னை கழுதைன்னு, அந்த கழுதை மாதிரி தான் பத்து நிமிஷமா உன் கிட்ட “சித்ரா! மழை வர போகுது சீக்கிரம் கிளம்பலாம் வானு” கத்திட்டு இருக்கேன்,நீ என்னனா பாட்டை ரசிச்சிட்டு இருக்க?”

“அய்யயோ! மழை வர போகுதா? சரி சரி, வா சீக்கிரம் கிளம்புவோம்”அவர்கள் இருவரும் கிளம்பினர்.

சித்ரிதா. பெயருக்கு ஏற்றார் போல சித்திரம் போல இருப்பாள். அவள் கண்களே பல வண்ணச் சித்திரங்களை படைக்கும். அவளுக்கு தாய் தந்தை கிடையாது. ஒரு வொர்கிங் விமன் ஹாஸ்டலில் தங்கியிருந்தாள். காமராஜர் மேல்நிலை பள்ளி என்ற அந்த தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அழகான, அன்பான ஆசிரியை மற்றும் எதார்த்தவாதி!

பூஜா. சித்ரிதாவின் நெருங்கிய தோழி. தன்னை சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைப்பதென்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வராது.அப்படிப்பட்ட கலையை, வரமாய் பெற்றவள் இவள். சித்ரிதா வேலை பார்க்கும் அதே பள்ளியில் கே.ஜி மாணவர்களுக்கு பாடம் எடுப்பவள். அவள் வீடு சித்ரிதாவின் ஹாஸ்டல் அருகே உள்ளது.

இருவரும் பையை எடுத்துக் கொண்டு வெளியே வரவும், மழை சிறிது பிடித்துக்கொண்டது.

“பாரு! எல்லாம் உன்னால தான்.இன்னைக்கு நல்லா மழைல மாட்ட போறோம் போ”

“ஏண்டி?மழை தானே பெய்யுது? ஏதோ மேலிருந்து ஆசிட் கொட்டுற மாதிரியே பேசுற!மழை நம்ம பூமியோட செல்லபிள்ளைடி. அதைக் கொஞ்சி விளையாடனும். இப்படி ஒதுக்கக் கூடாது”

இதற்கு மேல் விட்டால் இவள் மழையை பற்றி ஒரு பெரிய வருணனையை ஆரம்பித்துவிடுவாள் என்பதால் அவளை திசை திருப்புவதற்காக அங்கே அவர்கள் அருகில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சிறு குழந்தையை காட்டி,”சித்ரா…இந்த பொண்ணு உன் கிளாஸ் தானே?” என்று கேட்டாள்

“அட…ஆமா.இந்த பொண்ணு லேட் என்ட்ரி. பேர் கூட ஏதோ…..?ஆங்….அதிதி. இப்போ தான் ஸ்கூல் சேர்ந்து ஒரு வாரம் ஆகுது. இங்க தனியா நின்னுட்டு இருக்கிறாளே? யாரவது அவங்க வீட்டிலிருந்து வந்து கூப்புடுவாங்களானு தெரியலையே? வா போய் கேப்போம்”

அவர்கள் அந்த சின்ன பெண்ணை நெருங்குமுன் ஒரு பெரிய கார் அங்கே வந்து நின்றது. கார் கதவு திறந்து உள்ளிருப்பவர் அந்தக் குழந்தையை ஏறுமாறு சொல்லவும், அந்த குழந்தை முடியாது என்று வேறு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது.

பின் அந்த காரிலிருந்து அவர் இறங்கினார்.அவர் தான் அதிதியின் தந்தை போலும்.மேலும் சிறிது நேரம் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அதற்குள் மழை சற்று நன்றாகவே பிடிக்க ஆரம்பித்துவிட்டது.ஒருவழியாக தந்தையும்,மகளும் ஏதோ சமரசத்துக்கு வந்தனர்.

அவர்கள் காரில் ஏறுவார்கள் என்று சித்ரா பார்த்துக் கொண்டிருக்க அவர்களோ எதிரில் இருந்த காலி கிரவுண்டிற்குச் சென்று மழையில் நனைந்து ஆட ஆரம்பித்து விட்டனர்.

அங்கே நின்ற பலரும் இந்தக் காட்சியை அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் மனதுக்குள் நினைத்ததை சிலர் வாய்விட்டே,”யாருடா இவன் லூசா இருப்பானோ? இப்படி பொது இடத்துல சின்னபிள்ளை மாதிரி ஆடிட்டு இருக்கான்?”என்று புலம்பி சென்றாலும், இந்த பூவுலகில் இருந்தால் தானே அவன் காதில் அது விழ. அவர்கள் இருவரும் தான் மழையில் கரைந்து போய்விட்டார்களே! கைகளை விரித்து வாயை திறந்து மழை நீரை அருந்தும் சக்கரவாக பறவையாகவே மாறிவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து அதிதியின் தந்தை ஓடிச் சென்று காரிலிருந்து சில பேப்பர் கப்பல்களை எடுத்து வர, அதிதி அதை அங்கு தேங்கியிருந்த மழை நீரில் விட்டு அந்த மழை நீரை, கடல் நீராக மாற்றிக் கொண்டிருந்தாள்!

காகித கப்பல், ஓடும் தண்ணீரில் சுழித்து ஓடுவதைப் பார்த்து குதித்து கைக்கொட்டி சிரித்தாள் அதிதி.மகரந்த மலர் போன்ற அவள் சிரிப்பை பார்வையால் பருகிக் கொண்டிருந்தான் அவள் தந்தை.

“ஹேய்….சித்ரா வாடி, பஸ் வந்திடுச்சு”

சித்ரிதா பஸ் ஏற செல்லவும், அங்கே விளையாடிக்கொண்டிருந்த அதிதி இவர்களை கைக் காட்டி அவள் தந்தையிடம் ஏதோ சொல்லவும், அவனும் திரும்பிப் பார்த்தான்.

அதற்குள் குறுக்கே ஒரு வண்டி வர, பூஜா சித்ரிதாவை இழுத்துக் கொண்டு செல்ல, அவன் முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை.

பஸ் ஏறிவிட்டு ஜன்னல் வழியே திரும்பிப் பார்த்தவள் அவன் முகத்தை பார்த்தது ஒரு நொடி தான், அதற்குள் பஸ் கிளம்பியது…..

சித்திரம் பேசும்

எழுத்து
சக்தி பாலா

Back To Top