ஹலோ நண்பர்களே!! நம்மை நாம் நம்புவதை தாண்டி தற்போது இணையத்தை நம்பி நமது நாட்கள் நகர்வதை உணர்ந்தீர்களா? நாம் ஒவ்வொருவரும் மற்றொருவர் வாழ்வில் வெறும் 30 வினாடிகள் வரக்கூடிய ஸ்டேட்டஸ் அப்டேட்டாய் மாறிவிட்டோம் கவனித்தீர்களா?இணையம் அவ்வளவாக இல்லாத நாட்களில் வாழ்க்கை சூழ்நிலைகளில் பாடம் படித்த நமக்கே மனச்சோர்வென்பது தவிர்க்க முடியாத ஒன்றெனில் இணையத்திலேயே மூழ்கி போலியான பிம்பத்தில் வாழும் சிலருக்கு நிச்சயம் மனச்சோர்வு என்பது பேராபத்து. எதிலும் நல்லதும் உண்டு தீமையும் உண்டு ஆனால் தீமையை கூட நல்லது என நம்ப வைக்கப்படுகிறது நமக்கிடையே.
மனச்சோர்வை வெல்ல உங்களுக்கான சில குறிப்புகள் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் ஸ்டைலில் !!
பிளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது ஓகே!
அது 50 பைசா மிட்டாயாக இருந்தாலும் சரி, 50 லட்சம் சொத்தாக இருந்தாலும் சரி அத்தனைக்கும் ஆசைப்படுதல் எளிது. அதை அடைவதற்கு திட்டம் என்பது அவசியமானது.
நாங்க எல்லாம் அப்பவே அப்படி!!
உங்களது அசல் தன்மையை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதீர்கள் அப்படியாக மாற தொடங்கினால் ஒவ்வொரு நாளும் மாறவேண்டியதாக இருக்கும் உங்களின் நடை, உடை, பாவனை அனைத்தையும் நகலாக்க முடியும் ஆனால் குணம் என்பது உங்களுக்கான அங்கீகாரம்.
ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி
நம் வாழ்வில் நாம் சாதிக்க நினைத்த பல திட்டங்கள் பாதியிலேயே பஸ்பமாவதற்கு காரணம் ஊக்கமின்மை. உதட்டின் ஓசையை நிறுத்தி மனதின் ஓசைக்கு செவி சாய்த்தால் போதுமானது. நாம் ஆசைப்பட்டது எதுவானாலும், சரி என்ன நேர்ந்தாலும் சரி, அடையும்வரை போராடுவதை நிறுத்தக்கூடாது.
திரிஷா இல்லனா நயன்தாரா
தேடலில் தோல்வி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனக்கு கிடைக்காத அனைத்தும் என் குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களே, இந்த அதிகபட்சமான அன்பே அவர்களை பிற்காலத்தில் ஆட்டி வைக்கப் போகிறது. குழந்தைகளுக்கு சிறு தோல்விகளை பழக்கப் படுத்துதல் மிகவும் அவசியம். அப்போது தான் அவர்கள் ஒரு தோல்வியின் போது
வாழ்க்கை முடிந்ததாக எண்ணாமல் “த்ரிஷா இல்லனா நயன்தாரா” என்று அடுத்ததை தேடத் தொடங்குவர்.
அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம்!
ஒருவேளை நீண்ட நாட்களுக்குப் பிறகும் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால் அந்தச் சூழ்நிலையில் மனம் தளராமல் அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம் என்ற பாணியில் வேறு ஒரு மாற்று திட்டத்தை சார்ந்து முன்னேறவேண்டும். தேடல் அதிகரிக்கிற போது உங்கள் இலக்குக்கு பக்கம் நெருங்குகிறீர்கள் என்று அர்த்தம், ஆனால் தேடும் தடத்தை தேர்வு செய்வதில் கவனம் தேவை.
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்
பேசினால் தீராத மன வலி எதுவும் இல்லை ஆனால் அப்படி மனம் விட்டு பேசுவதற்கான ஆட்களை கண்டறிதல் சிறு கடினமே தவிர முடியாத காரியம் இல்லை. அளவுக்கு மீறிய அழுத்தம் நிம்மதியை சிதைக்கும். கைபேசிக்கு வெளியிலும் பேசுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று இக்கால மனிதர்களுக்கு புரிவதில்லை. சரியோ, தவறோ மனதை விட்டு பேசிப்பாருங்கள் இறகைப் போல மனது லேசாகும்.
இந்தக் கோட்டை தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடாது
இந்த அளவில் அவரவர் வாழ்க்கையை வாழும் வரை எதுவும் அழகே. நம்மை பற்றி புறம் பேசும் சிலருக்குத் தெரியாது அவர்களுக்கு முன் வெற்றிப் பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோமென்று. யாருக்கு தெரியும் புறம் பேசுவது அவர்களின் இயலாமை காரணமாக கூட இருக்கலாம் வாழ்வோம் வாழ விடுவோம்.
டீசண்டா முடிச்சுக்கலாம்
உழைக்காமல் சிலர் வாழ்கிறார்கள் ஆனால் வாழாமல் ஒருநாளும் உழைக்காதீர்கள். தவறாகவே இருந்தாலும் அதை அடுத்தவர் மனம் புண்படாமல் கூறுவதோடு , மன்னிப்பையும் நன்றியையும் நம் மனம் திறந்து கூற பழகுவோம் முதல்!
ஐயம் யுவர் பெஸ்ட் பிரண்ட் , பிரியதர்ஷினி கோபிகிருஷ்ணன்.