
இன்றைய காலக்கட்டத்தில் நம் இந்தியாவில் பெண்ணியம் என்பது தவறான புரிதல்களால் வேறு வகைப்பட்டிருக்கிறது. இந்தியத் தேசியமும் இந்தியப் பெண்ணியமும் ஒரே காலகட்டத்தில் கட்டமைக்கப்பட்டது. மேலைநாட்டுப் பெண்ணியத்திற்கு எதிராக இந்தியப் பெண்ணியம் உருவாக்கப்பட்டது. பெண்மையின் வலிமையைச் சக்தியை அடிப்படையாகக் கொண்டே இந்திய நாகரிகம் என்னும் மாளிகை எழுப்பப்பட்டிருக்கிறது என்று சரோஜினிதேவி போன்றவர்கள் குரல் கொடுத்தனர். இந்தப் பின்னணியில்தான், பெண் தெய்வமாக்கப்பட்டாள்; சக்தியின் வடிவமாக கொண்டாடப்பட்டாள். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று வகுத்து பெண்ணடிமைத்தனத்தைச் சட்டமாக்கியிருந்த மனுநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் போக்குகள் ஆங்கில ஆட்சிக்குப் பின்னரே பெண்களிடையே ஏற்பட்டது. பெண்களுக்கு சுதந்திரம், சம உரிமை, விதவை மறுமணம், உடன்கட்டை எதிர்ப்பு, பெண்கல்வி, அரசியல், ஓட்டுரிமை, தேர்தலில் போட்டியிடுவது, இலக்கியம், விஞ்ஞானம், ஆராய்ச்சி, சொத்துரிமை, சம்பளத்தில் பெண் என்ற பாகுபாடின்மை என எல்லாவற்றிலும் பெண்ணியம் விழிப்புணர்வு பெற்றது.

ஒரு பெண் தன்னைச் சேர்ந்த ஒரு ஆணுக்கு அது தந்தை, கணவர், மகன், உடன்பிறப்பு யாராகவே இருக்கட்டும் இடர்பாடு வரும்போது, அது வரைக்கும் தான் செய்யாத அல்லது தன் சக்திக்கு மீறி செயல்பட்டு அவர்களை மீட்கிற போது தான் அப்பெண்மையின் தனித்துவம் வெளிவருகிறது.
ஆண் வாரிசு இல்லாத வீட்டில் குடும்ப பாரத்தை சுமக்கும் பெண்கள், உடல்நிலை சரியில்லாத கணவர் , மாற்றுதிறனாளி குழந்தை என தன் உறவுகளை பேணி பாதுகாத்து தன் உழைப்பில் அவர்களை காப்பாற்றி வரும் பெண்கள், கணவர் இறந்த பிறகு ஒழுக்கத்தோடு வாழ்ந்து தன் குழந்தைகளை பண்புகளோடு வளர்த்து இந்த சமூகத்தில் ஆளாக்குகிற விதவைகள் என இன்னும் இன்றும் எத்தனையோ பெண்கள் சாதித்துக் கொண்டு உண்மையான பெண்ணியத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
ஆனால் “பெண்ணியம்” என்பது தான் ஆசைப்படும் ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதும், தன் உருவத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லாத அரைகுறை ஆடைகள் உடுத்தி பொது இடங்களில் உலா வருவதும், ஆண் மது அருந்துகிறான், புகைப் பிடிக்கிறான், எங்களுக்கும் சம உரிமை உண்டு நாங்களும் மது அருந்துவோம் புகைப் பிடிப்போம் என சில தவறான உதாரணங்களாக இருக்கும் பெண்களாலும் இயக்கங்களால் பெண்ணினத்திற்கே கேடு, அவமானம்.
” பெண்ணியம்” என்பது ஆண் சாதிப்பதை மட்டுமல்ல, அவன் சாதிக்க முடியாததையும் சாதித்துக் காட்டுவது தான். உண்மையான பெண்ணியத்தை அடையாளம் கண்டு தலை வணங்குவோமாக!

– பத்மப்ரியா