பேரிடர், இந்த முறை கொரோனா எனும் நுண்கிருமியால், உலகத்தையே உலக மக்களையே பாரபட்சமின்றி புரட்டி போட்டுள்ளது. மாறாததும் மாறியது, மாற்ற வேண்டியதும் மாறியது, மாறக் கூடாததும் மாறியது.
இதைப் படிக்கும் இந்த நொடி சில விநாடிகள் யோசிப்போம், மூன்று மாதங்களுக்கு முன் வரை இருந்த நிலை, மனநிலை இப்போது தலைகீழாய் இருக்கிறது. எல்லோருக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா ஊரடங்கு. ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் , நாடு, தேசம், பெரியவர், சிறியவர் என எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை.
சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றம் அனைவரும் அறிவர், பலருக்கு அறியாமல் இருப்பது அவரவர் மனதிற்குள் ஏற்பட்ட மாற்றங்கள்.
இந்த ஊரடங்கு நேரத்தில் சுய பரிசோதனை செய்து கொண்டவர் பலர். இதுவரை சம்பாதிக்க ஓடிய கால்கள் ஓய்வெடுக்கும் போது தான் மனிதன் தன்னிடம் உள்ள குறைநிறை அலசி ஆராய நேரம் கிடைத்தது. ஓயாமல் உழைத்து குடும்பத்திற்காக தன் கடமைகளை செவ்வனே செய்த மதிப்பிற்குரிய ஆண்கள் அனைவருக்கும் ஓய்வு கொடுத்து தன் குடும்பங்களுடன் நேரம் செலவழிக்க செய்தது இந்த ஊரடங்கு. பணிக்குச் செல்லும் மங்கையருக்கு பல வருடங்களுக்கு முன் இருந்த வாழ்வியலை திரும்ப அறிமுகப்படுத்தியது.
எத்தனை எத்தனை மாற்றங்கள்! தாயின் உடல்நிலை, மனநிலை புரிந்துகொண்ட பிள்ளைகள், படிப்பு டியூசன் என காலை முதல் இரவு வரை ஓடிய குழந்தைகள் பெற்றவர்கள் தாத்தா பாட்டியுடன் செலவழித்த நேரம், மனைவியை உட்கார வைத்து சமையலறையில் புகுந்த கணவர்கள், தன் குழந்தைகளுக்கு தங்களிடம் உள்ள தனித்திறமைகளை கற்றுக் கொடுத்த தாய் தகப்பன்கள், கணினி நிறுவனங்களில் மாற்று பணி நேரங்களில் வேலை செய்த தம்பதியர் ஒரு சேர வீட்டிருந்த படி வேலை பார்க்க அவர்களுக்குள் தவறவிட்ட காதலை புதுப்பித்தனர், காசு கொடுத்து உடல் இளைக்க உடற்பயிற்சி நிலையங்களுக்கு சென்றவர்கள் அவரவர் வீட்டு பணியாளர்கள் வராததல் அவரவர் வீட்டுப் பணிகளை அவர்களே செய்தனர்.
வீடு பெருக்குவதும், துடைப்பதும், சமைப்பதும், மெஷினில் துவைத்த துணிகளை உணர வைத்து எடுத்து மடித்து வைப்பதும் தோட்ட வேலைகள் செய்வதும் இவை எல்லாமே உடற்பயிற்சி தான் என புரிந்து கொண்டவர் பலர். அறியப் படாத உண்மை இந்த ஊரடங்கு நேரத்தில் மனம் திருந்தியவர் பலர், தன் உடல்நிலை , குடும்பம், பொருளாதாரம் என உணர கால அவகாசம் கொடுத்தது இந்த ஊரடங்கு, மது விற்பனை இன்றி.
மற்றுமொரு பெரிய சமுதாய மாற்றம் புலம் பெயரும் தொழிலாளர்கள், பிழைக்க வருமானம் ஈட்ட வெளியூர் வெளிநாடு சென்றவர் பலர் நிரந்தரமாக சொந்த ஊர்களுக்கு திரும்பியது. தனிமைப் படுத்தப்பட்டவர்கள், தனிமை உணர்ந்தவர், தனிமையை நேசித்தவர் என பலர். ஆடம்பர செலவு தேவையில்லை அத்தியாவசிய செலவு போதும் எனவும் உணர்த்தியுள்ளது. பலரை அவரவர் குடும்பம் தேடி ஓட வைத்துள்ளது இந்த கொரோனா ஊரடங்கு.
பொருளாதார பாதிப்பு தவிர்க்க முடியாதது, ஆனால் பாடுபட்டு உழைத்தால் நிச்சயம் வரும் சந்ததிக்கு வழிகாட்டுதலாக இருக்கும். ஈடு செய்ய முடியாத இழப்பு உயிர், மன உளைச்சல் வேண்டாம் நம் குடும்பத்திற்காக நம் சமுதாயத்திற்காக நம்பிக்கையுடன் போராடி வெற்றி பெறுவோம்.
பத்ம ப்ரியா
Image credit: Freepik