இந்திய அரசியலமைப்பு சட்டமானது, பெண்களுக்கு பல உரிமைகளையும் சலுகைகளையும் அனைத்து துறைகளிலும் அவர்களின் கனவை நனவாக்க அளிக்கிறது. பெண்களுக்கு சமத்துவம், கண்ணியம் மற்றும் பாகுபாட்டிலிருந்து விடுதலை உரிமை ஆகியவைகளையும் அளிக்கிறது. அவர்களின் மனித உரிமைகளுக்குள், உயிர் மற்றும் சுதந்திரம், சம உரிமை அளிப்பது மற்றும் வன்முறைகளிலிருந்து விடுபடும் உரிமை ஆகியவை அடங்கும். மனித உரிமைகள் சட்டம், பெண்கள் பாதுகாப்பை அங்கீகரிக்கிறது, அனைத்து நாடுகளிலும் பெண்களின் மாண்பையும், கெளரவத்தையும் மதிக்கமாறு சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று கூறுகிறது.
கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான உரிமை:
திருமணமான பெண்கள் உரிய கௌரவத்துடனும் சுய மரியாதையுடனும் வாழ்வதற்கான சட்டரீதியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தன் வாழ்க்கையை தன் விருப்பத்திற்கு ஏற்ப வழி நடத்தலாம். ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையின் இலக்குகளை அடைவதற்கு சட்டம் உதவுகிறது மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கிறது.
சமத்துவத்திற்கான உரிமை:
பெண்களின் வயது, பாலினம், பிறப்பிடம், இனம் அல்லது மதம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடும் இன்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இந்திய அரசியலமைப்பு கூறுகிறது (ஷரத்து 14).
அரசானது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எல்லா வகைகளிலும் சிறப்பு சலுகைகளை அளிக்கலாம். எடுத்துக்காட்டாக, பொது போக்குவரத்தில் பெண்களுக்கான சிறப்பு இருக்கை ஏற்பாடு செய்வது அரசியலமைப்புச் சட்டப்படி அடிப்படை உரிமையாகும்.
“சமத்துவத்திற்கான உரிமை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் அடிப்படை உரிமையாகும்”. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உரிமையை அது உறுதி செய்கிறது. அரசியலமைப்புச் சட்டப்படி கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டில் எந்த விதமான பாகுபாடோ, தடையோ இருக்கக்கூடாது.
சொத்துரிமை:
ஷரத்து 300Aன்படி சட்டம் அளிக்கும் அதிகாரத்தின் படி அல்லாமல், எவரிடமிருந்தும் அவரது சொத்து பறிக்கப்படுதல் ஆகாது.
இந்திய வாரிசுரிமை சட்டம்,1925ஆனது ஒரு கூட்டுக்குடும்பத்தில் பிறந்த மகனுக்கு மட்டுமே மூதாதையரின் சொத்துக்களை சுதந்தரித்துக்கொள்ளுமாறு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்து வாரிசு சட்டம்,1956 ன் படி 1987ம் ஆண்டுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு வாரிசு உரிமை விலக்கப்பட்டது. 1987க்கு பின்னர் திருமணமான அனைத்து பெண்களும் ஒரு கூட்டுக்குடும்பத்தில் பிறந்த மகனைப் போலவே சொத்துக்களை கோரலாம் என்று இச்சட்டம் கூறுகிறது.
பணியிடத்தில் பெண்களின் உரிமை:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14 (2), 19 (1) (g), 21 (4) ஆகியவை ஒவ்வொரு இந்திய குடிமகனும் தொழில், வணிகம் மற்றும் தொழில்சார்ந்த வேலைகளில், பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. இச்சட்டத்தின்படி பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் கௌரவமாக பணியை மேற்கொள்வதற்கு உதவி செய்கிறது. மேலும், இச்சட்டமானது பெண்களுக்கு பணியிடத்தில் உடல்நலம், பாதுகாப்பு, நலன், சரியான வேலை நேரங்கள், விடுப்பு, பிற சலுகைகள் மற்றும் மகப்பேறு நலன்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.
சம வேலைக்கு சமமான சம்பளம்-
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 39 ஆனது ஒரே பதவியில் சமமாக பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களை சமமாக நடத்தி சமமான சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
பணியிடத்தில் பெண்களுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் அமைக்க வேண்டும். பாலினம் அடிப்படையிலான பாகுபாடு இருக்கக்கூடாது.
பாலியல் தொந்தரவு:
ஒரு பாலினம் மற்றொரு பாலினத்தை நோக்கி ஒரு விரும்பத்தகாத/வரவேற்கத்தகாத பாலியல் தொந்தரவுகளையோ அல்லது சைகைகளையோ செய்யக்கூடாது. அது அந்த நபரை அவமானப்படுத்தி, புண்படுவதாகும். பாலியல் துன்புறுத்தலுக்கு இந்தியாவில் ஈவ் டீசிங் என்று பெயர். இது பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். மேலும் இது ஷரத்து 21ன்படி பெண்கள் கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கும் அடிப்படை உரிமைகளை பெறுவதற்கும் வழிவகை செய்கிறது.
பாலியல் துன்புறுத்தல்கள் தவிர்க்கப்பட்டு, பாலினத்தவர்களுக்கிடையே சமத்துவம் பணியிடத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் இடையூறின்றி பாதுகாக்க வேண்டும். எந்த ஒரு நபரும் பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும். தனியார் நிறுவனங்களில், கண்டிப்பான விதிமுறைகள் உள்ளடக்கப்பட வேண்டும். மேலும், பெண்களுக்கு வெளியாட்கள் மூலம் ஏதேனும் தொந்தரவுகள் ஏற்படுத்தினால், அந்த நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம்,1860, பிரிவு 509 ஆனது , எந்த ஒரு நபரும் பெண்களின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துமாறு , அவமரியாதையாக எந்த ஒரு வார்த்தை பேசினாலோ , ஒலி அல்லது சைகை எழுப்பினாலோ என குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருட சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் விதிக்கப்படும்.
கைது செய்வதற்கு எதிரான உரிமை:
உரிமையியல் நடைமுறைச் சட்டம் 1908, பிரிவு 56ன்படி, எந்த ஒரு பெண்ணையும் உரிமையியல் வழக்குகளில் கைது செய்ய முடியாது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் ,1973 பிரிவு 46 (4)ன்படி, ‘ ‘ எந்த ஒரு பெண்ணும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்போ, சூரிய உதயத்திற்கு முன்போ கைது செய்யப்பட முடியாது ‘ ‘. பெண் காவல் அதிகாரியின் துணைக்கொண்டு பெண்களை குற்ற வழக்குகளில் கைது செய்ய வேண்டும்.
கருக்கலைப்பு என்பது மனித உரிமை:
ஒரு பெண்ணின் வாழ்க்கையில், சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியை பாதுகாக்க ஒரு பெண் தனிப்பட்ட உரிமையை எடுத்து, கருக்கலைப்பு செய்யும் உரிமையை பெறலாம். கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்ப காலத்தில் அவர்களின் உடல் மற்றும் மன நலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் அந்த பெண்ணிற்கு கருக்கலைப்பு உரிமை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில், 1971 ஆம் ஆண்டு மருத்துவம் சார்ந்த கருக்கலைப்பு சட்டத்தின் கீழ், பெண்கள் அல்லது பிறக்காத குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் ஒப்புதலோடு, கர்ப்பகாலத்தின் 12 வாரங்கள் முதல் 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு அனுமதிக்கப்படும்.
பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு:
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012, பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசப் புகைப்படங்களின் மூலம் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பவர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஒரு முழுமையான சட்டம் ஆகும். இச்சட்டமானது, குற்றத் தீவிரத்தின் அடிப்படையில், ஆயுள் தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படும்.
குழந்தையின் பாலியல் குற்றத்தைப்பற்றி அறிந்து கொண்டவர்கள் , அந்த குற்றத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் அவருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும், பயிற்சி பெற்ற வல்லுனர்கள் மூலம் வழிநடத்த வேண்டும்.
குடும்ப வன்முறை சட்டம், 2005:
குடும்ப வன்முறை சட்டம் என்பது, பெண்களுக்கு எதிராக, எந்த ஒரு செயலோ, அல்லது நடவடிக்கையோ அல்லது நடத்தையோ, அல்லது உடல்நலத்தையும், பாதுகாப்பையும், அல்லது நல்வாழ்வையும், குலைக்கும் நோக்கத்தில் இருந்தால் அது குடும்ப வன்முறையாகும். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை, வாய்மொழி மற்றும் உணர்வுபூர்வமாக துன்புறுத்தல் மற்றும் அவர்களின் சொத்து, உடமை மேலும் அவர்களின் உயிருக்கு தீங்கு செய்தால் இச்சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினராக பெண்கள் கருதப்படுகின்றனர். ஆனால் நாம் (பெண்கள்) நிச்சயமாக இல்லை! இத்தகைய சட்டங்களும் உரிமைகளும் சமுதாயத்தில் நமது வாழ்வை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்றன.
இது பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய ஒரு முன்னுரை ஆகும். இதுப்பற்றி விரிவான விவரங்களை பின்வரும் அத்தியாயங்களில் காண்போம்.
ப.சியாமள நிஷா,
வழக்கறிஞர், சட்ட ஆசிரியர், சட்ட ஆலோசகர்