
வழக்கமான நாளுக்கு
இன்னும் நான்கு நாட்கள்
இருக்குதென்ற நினைவொன்று
அந்நிறம் பூசிக்கொண்டபடி எழும்..
மாசாமாசம் வருதே
மறதியென்ன உனக்கென்று
வந்து விழும் கேள்வியொன்றும்..
என்னைத் தவிர எவர் கண்களுக்கும்
எட்டி விடும் அவ்விடத்தை
அமர்ந்தெழும் போதெல்லாம்
அனிச்சையாய்க் கைகள்
தடவிக் கொள்கையில்
வெளிவரும் பெருமூச்சொன்றும்..
திட்டமிட்ட கொண்டாட்டங்களை
விட்டுத்தர மனமில்லா
பார்வையின் கனலொன்றும்
கசிந்து கசிந்து வாழ்வனைத்திலும்
தன்னை நிரப்பிக் கொண்டு
என்னை ஒரு ஓரத்தில்
அது தள்ளிச் சிரிக்கையில்
சட்டென்று பூக்கும்
தைல வாசனை கொண்ட பிரியமொன்றும்
அந்நிறமே கொண்டிருக்கும்..
எனக்குப் பிடித்த வெண்மையை
நானே மறுதலிக்கும் சூட்சுமம் கொண்டு
மாதத்திற்கொரு முறை
வாழ்வைக் கொள்கிறது அவ்வண்ணம்..
எப்போதேனும் எட்டிப் பார்க்கும்
கனவுகளின் சிறகுகளை
என் கைக்கொண்டே வெட்டிவிடும் நேசங்களின் கத்தி போல..
கிருத்திகா கணேஷ் கவிதைகள்