தாத்தாவின் அறையின் ஓரத்தில் மிகவும் கம்பீரமாய் அமர்ந்திருந்தது அவரது வெளிர் பச்சை நிற ரேடியோ.தாத்தா அதற்கு தரும் மரியாதையை வேறெந்த அஃறினை பொருளும் இந்த வீட்டில் பெற்றதில்லை.இவ்வளவு ஏன் என் அம்மா வாஷிங்மெஷினுக்கு கூட கொடுத்ததில்லை.
பாட்டி இறந்தபின் தாத்தாவின் உலகமே ரேடியோ என்றாகிவிட்டது.ரேடியோ நிகழ்ச்சிக்கு விமர்சனம் எழுதுவது, பாட்டு கேட்பது என்பது வாடிக்கையாகி விட்டது.
இன்று தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை.காலையில் அப்பாவும்,அம்மாவும் ஆபிஸிற்கு சென்றுவிட இணையத்தில் இணைந்திருந்தேன்.
கார்த்தி,கார்த்தி என்ற தாத்தாவின் குரலில் ஏதோ வித்தியாசம்.
என்ன தாத்தா எதுக்கு கூப்பிட்டீங்க? என்று கேட்டுக்கொண்டே அவரது அறைக்குள் சென்றேன்
நெஞ்சு வலிக்கிறதுப்பா என்று சொல்லிவிட்டு அப்படியேபடுத்து விட்டார்.பக்கத்தில் அவரது செல்போன் அடித்தது.
நான் பதற்றத்துடன் எடுத்து ஹலோ என்றேன்.
ஹலோ சுப்பிரமணியன் சார், பிரச்சனை ஒன்றும் இல்லையே ?
நான் சுப்பிரமணியனோட பேரன் பேசுறேன்.
சாருக்கு என்ன ஆச்சு தம்பி?என்னோடு போன் பேசி கிட்டு இருக்கும்போதே திடீரென்று என்னவோ மாதிரி இருக்கின்றதுன்னு சொல்லி போனை கட் பண்ணினார்.
தாத்தா திடீரென்று மயக்கமாயிட்டார் என்றேன் பதற்றத்துடன்.
தாத்தாவை சீக்கிரம் மருத்துவமனைக்கு கூட்டிண்டு போப்பா என்ற அவர் குரலில் அவசரமும் அவசியமும் தெரிந்தது.
தாத்தாவை மருத்துவமனையில் அனுமதித்த ஐந்து நிமிடத்திற்குள்ளேயே தாத்தாவின் மூன்று நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.
நீங்க எல்லாம்…….
நாங்க உன் தாத்தாவின் ரேடியோ நண்பர்கள் தம்பி.ஐம்பது வருடமாய் ரேடியோவில் பேசியபடியும்,கடிதம் எழுதியபடியும் மாதத்திற்கு ஒருமுறை சந்தித்தபடியும் நட்போடு இருக்கிறோம்.
எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.பேஸ்புக் நண்பர்கள்,இன்ஸ்டாகிராம் நண்பர்கள் என்று மட்டுமே கேள்விபட்ட எனக்கு ரேடியோ நண்பர்கள் அதிசயமாய் தெரிந்தனர்.
அப்பா,அம்மாவுக்கு தகவல் கொடுத்திட்டியாப்பா என்றார் என்னோடு போனில் பேசியவர்.
என் மொபைலை சார்ஜர்ல போட்டிருந்தேன் அவசரத்தில் எடுத்துட்டு வர மறந்துவிட்டேன்.அப்பா,அம்மாவின் நம்பர் அதில்தான் உள்ளது என்றேன்.
தாத்தாவிற்கு ஹார்ட் அட்டாக் என்று மருத்துவர்கள் கூறியதும் அதிர்ந்தேன்.மயங்கி அங்கேயே விழுந்து விடுவேன் போலானேன்.
தம்பி நீ வீட்டிற்கு போய் அப்பா,அம்மாவிற்கு தகவல் சொல்லிட்டுவாப்பா என்றார் தாத்தாவின் நண்பர்.
தாத்தாவை தனியாய் விட்டுட்டு எப்படி செல்வது?
கவலைப்படாதே,தாத்தாவிற்கு துணையாய் நாங்கள் இருக்கிறோம் என ஒரே குரலில் கூறினர் அவரது நண்பர்கள்.
ஆட்டோவை பிடித்து வீட்டிற்கு பயணப்பட்டேன்.மனதுக்குள் ஏனோ ஒரே குற்ற உணர்ச்சி.
கார்த்தி,ரேடியோவில் அறிவியல் புதையல் நிகழ்ச்சியை கேட்டுப்பாரேன்.உனது அறிவியல் ஆர்வம் வளரும்.
கார்த்தி, டும் டும்முன்னு மண்டையை உடைக்கிற மாதிரியான பாடல்களையே கேட்கிறாயே,ரேடியோவில் தென்றல் தவழுவது மாதிரியான பழைய பாடல்கள் ஒலிபரப்பாகிறது கொஞ்சம் கேளேன்.
செய்தித்தாள் படிப்பதற்குத்தான் நேரம் இல்லை என்கிறாய்,பள்ளிக்கு கிளம்பிக்கொண்டே ரேடியோவில் செய்திகள் கேளேன்.நாட்டு நடப்பு தெரியும் அல்லவா!
நேற்று மதியம் அறுசுவை நேரத்தில் ஒரு புதிய சமையல்குறிப்பு சொன்னாங்க.மிகவும் அருமையாய் இருந்தது.இவ்வாறு தாத்தா ரேடியோவை பற்றிப்பேச பேச எனக்கு பற்றிக்கொண்டு வரும்.தாத்தா ரேடியோ கேட்கும்போதெல்லாம் ஏதாவது சொல்லி அவரை வெறுப்பேற்றி ரேடியோவை அணைத்துவிடும்படி செய்துவிடுவேன்.
எனக்கு பரிட்சைக்கு படிக்கவேண்டும் ,உங்கள் ரூமில் அமர்ந்து படிக்கிறேன் என்பேன்.அவர் ரேடியோவை ஆஃப் செய்து விடுவார்.
காலையில் அப்பா ரேடியோவின் சத்தம் தொந்தரவாய் உள்ளது என்பார்,மாலையில் அம்மா டீவி பார்க்க ரேடியோ சத்தம் தொந்தரவாய் உள்ளது என்பார்.மொபைலில் ரேடியோ கேளுங்கள் என்றால் தாத்தா ஒத்துக்கொள்ளமாட்டார்.சாய்வு நாற்காலியில் அமர்ந்து கதவை திறந்து வைத்து சத்தமாய் ரேடியோ கேட்க மட்டுமே அவர் விரும்புவார்.
தனது சம்பளத்தில் தனக்கென வாங்கிய முதல் பொருள் இந்த ரேடியோ என அவர் கர்வமாய் கூறும்போது எனக்கு காமெடியாய் இருக்கும்.
தாத்தா தினமும் ரேடியோவை துடைத்து விட்டு அதன்மேல் போட்டிருக்கும் துண்டை மாற்றுவார்.ரேடியோ வைத்திருக்கும் டேபிளின் மீது காபி டம்ளரையோ அல்லது வேறு ஏதாவது உணவு பண்டங்களையோ வைத்தால் பயங்கர கோபம் வந்துவிடும் அவருக்கு.
வீட்டிற்கு சென்று அப்பா,அம்மாவிற்கு தகவல் தெரிவித்து விட்டு தாத்தாவின் அறைக்குள் சென்றேன்.என்னை வாஞ்சையாய் வரவேற்றது அவரது ரேடியோ.அதையே பார்த்துக்கொண்டு நிற்கையில் என் நண்பனுக்கு ஒன்றும் ஆகாது என்று ரேடியோ சொல்வதைப்போல் தோன்றியது எனக்கு.
வீட்டில் நான் அப்பாவுடன் இருந்த நாட்களை விட தாத்தாவுடன் இருந்த நாட்களே அதிகம்.பாட்டி இறந்த பிறகு தாத்தா மட்டுமே என்னை கவனித்துக்கொண்ட நாட்களும் உண்டு.அம்மா ஆபிஸிலிருந்து வரும் வரை நானும்,தாத்தாவும் ஒன்றாய் அமர்ந்து ரேடியோ கேட்போம் பிறகு சாப்பிட்டு விட்டு ரேடியோ கேட்டுக்கொண்டே தூங்கிடுவேன்.
ஒருகாலத்தில் எனது உலகமாய் இருந்தவர்களை இன்று மறந்துவிட்டேன். தாத்தாவிற்கு ஒன்றென்றதும் உடனே வந்த அவர் நண்பர்களை நினைத்துக்கொண்டேன்.ரேடியோ நண்பர்கள் ஐம்பது வருட நட்பு என்கின்றனர்,தாத்தாவின் சுக ,துக்கத்தில் பங்கேற்கின்றனர் .அவரோடு அதிகமான நேரம் வீட்டில் இருக்கும் நானோ அவருடன் எதிரி போல் சண்டை போடுகிறேன்.
ரேடியோவை தாத்தா துடைப்பது போல பாசத்துடன் துடைத்தேன்.அதன் உறையை மாற்றினேன்.தாத்தாவின் பீரோவில் தாத்தாவும்,நானும் ரேடியோவுடன் எனது சிறு வயதில் எடுத்த புகைப்படம் கிடைத்தது.ரேடியோவை தொடுகையி ல் தாத்தாவை தொடுவது போல் இருந்தது.தாத்தாவையும்,ரேடியோவையும் பிரித்து வைத்தது தான் அவரது மன அழுத்தத்திற்கும்,ஹார்ட் அட்டாக்கிற்கும் காரணமோ?எனக்குள்ளே ஏதோ மாதிரி இருந்தது.
ரேடியோவை ஆன் செய்துவிட்டு தாத்தாவின் சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன்.
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு”
குறளமுதம் ஒலித்தது ரேடியோவில்.
எனக்குள் ஓர் உற்சாகம் பிறக்க தாத்தாவிற்கு பிடித்த கார்த்தியாய் தாத்தாவை பார்க்க புறப்பட்டேன் மருத்துவமனைக்கு.
எழுத்து க்ரித்திகா மணியன்