பெண்களையும் சக்தியையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. உலகளவில் விரிந்து கிடக்கும் பல இந்திய தொழில் சாம்ரஜியங்களில் பெண் ஆளுமைகளின் பங்கு மிகப் பெரியது. அத்தகைய பெண் ஆளுமைகளை பற்றி இந்த தொடரில் அறிந்து கொள்வொம். பெயரளவில் மட்டுமே நமக்கு பரிச்சியமானவர்களின் வெற்றிப் பக்கங்களை புரட்டுவோமா?
சுதா மூர்த்தி
‘Infosys’ – இந்த ஐடி சாம்ரஜ்ஜியத்தை கேள்விப்படாதவர்கள் சொற்பமே. இந்தக் குழுமத்தின் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி.
முதல் பெண் பொறியாளர்
கர்நாடகாவின் ஹூப்லி மாவட்டத்தின் முதல் பெண் பொறியியல் பட்டதாரி. அந்தக்காலத்தில் பொறியியல் என்பதே ஆண்களுக்கு மட்டுமானதாக இருந்தது. 1960களில் அவர் கல்லூரியில் சேர்ந்த பொழுது, வகுப்பில் இருந்த 150 மாணவர்களில் இவர் மட்டும் பெண். அந்தக் கல்லூரியில் பெண்களுக்கென்று தனி கழிப்பறை கூட கிடையாதாம், எங்கு இது குறித்து கூறினால் தன் படிப்பு தடை பட்டு விடுமோ என்று, அதை சிரமப்பட்டு சமாளித்ததாக கூறியிருக்கிறார்.
பெண் பிள்ளைகளுக்கு தனி கழிவறை எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்ந்திருந்த அவர், தன் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் மூலம் நாடு முழுவதும் 16,000 கழிவறைகளை கட்டியிருக்கிறார். அது இல்லை, இது இல்லை என்று குறை கூறுவதை விட இருப்பதைக் கொண்டு முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம். எனக்கு இது கிடைக்கவில்லை, பிற்காலத்தில் நான் பிறருக்கு இதை செய்வேன் என்ற உத்வேகமே சுதா மூர்த்தியின் வெற்றிக்கான அடிப்படை.
TELCO-வில் வேலை
பொறியியல் முடித்தவுடன், டாடா வின் TELCO-வில் பொறியாளர் பணிக்கான நேர்முக அழைப்பில், பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்றிருந்தது. அதை சுட்டிக்காட்டி டாடா நிற்வாகத்திற்கு, ‘எதிலும் முன்னொடியாக இருக்கும் டாடா குழுமத்தில், பாலின பாகுபாடு இருப்பது சரியல்ல’ என்று கடிதம் எழுதினார். ஆச்சரியமாக, அதே பணிக்கு சிறப்பு நேர்வகத்தேர்வின் மூலம் அப்பொழுதே TELCO-வில் பொறியாளர் பணிக்கு நியமிக்கப்பட்டார். டாடாவின் முதல் பெண் பொறியாளரும் இவரே.
சுதா குல்கர்னி சுதா மூர்த்தி ஆன (காதல்) கதை
சுதா பூனேவில் TELCO-வில் வேலை செய்து கொண்டிருந்த சமயம், புத்தகம் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான சுதா, தனது அலுவலக நண்பர், ப்ரசன்னா (தற்போதைய விப்ரோ தலைவர்)-விடம் இரவல் வாங்கி படிப்பார். அந்த புத்தகங்கள் எல்லாம் நாரயண மூர்த்தியின் புத்தகங்கள். இந்த ஒற்றை புள்ளியில் ஆரம்பித்து நட்பில் தொடங்கி ஹோட்டல், சினிமா என்று காதலில் முடிந்தது. அப்போதெல்லாம் இருவரும் வெளியில் சென்று செலவு செய்யும் போது, செலவில் தன்னுடைய பங்கை வரவு வைத்துக்கொள்ளச் சொல்வாராம் நாராயண மூர்த்தி. சுதாவும் வரவு வைத்துக்கொண்டே வந்தாராம், மொத்த தொகை 4000 ரூபாய். அதை கடைசி வரை மூர்த்தி, தரவே இல்லை என்றும், அவர்களது திருமணம் முடிந்து, சுதா அதை கிழித்துப் போட்டு விட்டதாகவும் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
இன்ஃபோசிஸ் தொடங்க சுதா வித்திட்ட விதை
திருமணம் முடிந்து மும்பை குடியேறிய பிறகு, மூர்த்தி, தனது கனவுத் திட்டமான இன்ஃபோசிஸ் ஆரம்பிப்பதாக சொன்னார். அப்போது சுதா தன்னுடைய சேமிப்பான 10,000ரூபாய் கொடுத்து, அவருக்கு 3 வருட அவகாசமும் கொடுத்தார். ஆம், அந்த மூன்று வருடங்களில், குடும்பத்தை குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார்.
நாராயண மூர்த்தி முழுமையாக தன் சாம்ராஜ்ஜியத்தை கட்ட ஆரம்பித்தார். சுதா கொடுத்த நம்பிக்கையிலும் பணத்திலும், தன் வீட்டிலேயே அரம்பித்தது தான் இன்ஃபோசிஸ். இன்று உலக அளவில் கொடி கட்டிப் பறக்கிறது.
அந்த சமையத்தில் சுதாவின் உழைப்பு அசாதாரணமானது. பொறியாளராக, வீட்டின் நிர்வாகியாக, தாயாக, மனைவியாக, இன்ஃபோசிஸ்-க்கு உறுதுணையாக திறம்பட திகழ்ந்தார்.
எளிமையின் அடையாளம்
நம்பிக்கை கொடுக்கும் புன்சிரிப்பு, எளிய பருத்தி செலையே சுதா மூர்த்தியின் அடையாளம். ஒரு முறை லண்டனில், முதல் வகுப்பு விமானத்தில் பயணிக்க காத்திருந்த போது, இவரது எளிமையைக் கண்டு, அங்கிருந்த சக பயணி ஒருவர், ‘கால்நடை கூட்டம்’ (Cattle class) என்று விமர்சித்து, அவரை சாதாரண வரிசையிலும் நிற்கச்சொன்னாராம். அதற்கும், புன்முருவலையே பரிசாக அளித்துவிட்டு வந்ததாக கூறுவார்.
எத்தனை முகங்கள்?
சுதா மூர்த்தியின் மற்றொரு முகம், அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். குழந்தைகள் புத்தகம், தொழில்நுட்பம், பயணம், சிறுகதைகள், நாவல்கள் என்று கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஏறத்தாழ 35-கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அதிலும் அவர் மாதத்தில் 20 நாட்கள் இன்ஃபோசிஸ் அறக்கட்டளைக்காக கிராமப்புறங்களுக்கு பயணம் செய்துகொண்டே தான் இருப்பார்.
இவ்வளவு பணிகளுக்கு மத்தியிலும் திரைப்படங்கள் பார்ப்பதென்றால் அவ்வளவு பிடிக்கும் அவருக்கு. வருடத்தில் 300 படங்களாவது பார்த்து விடுவாராம். கதை மட்டுமல்லாது, திரைக்கதை, வ்சனம், தொழில் நுட்பம், இசை, படக்கோர்வை என்று ஒரு திரைபடத்தின் ஒவ்வொறு விஷயத்தையும் நுனுக்கமாக கவனிப்பார். திரைபடத்தில் ‘Pitruroon’ என்ற மராத்தி படத்திலும், ‘Prarthana’ என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளை
1997 இன்ஃபோசிஸ் அறக்கட்டளையைத் துவங்கி, பின்தங்கிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு 2300 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். சுகாதாரம், கல்வி, பெண்கள் முன்னேற்றம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்று பல சமூகப் பணிகளை செய்து வருகிறார். 70,000 நூலகங்கள், 16,000 பொது கழிப்பிடங்கள் இதில் அடக்கம். இதற்கெல்லாம் உத்வேகம் அளித்தது, ரத்தன் டாடா என்று கூறுவார் சுதா.இவரது சாதனைகளை போற்றும் வகையில் ‘பத்ம ஶ்ரி’ விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. பம்பரம் போல் இன்னமும் சுழன்று கொண்டிருக்கும் சுதா மூர்த்தியின் வயது 69.
இந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய ‘கௌன் பனேகா கிரொர்பதி’யின் 11-வது சீசனில் கலந்து கொண்டபொழுது, சுதா மூர்த்தின் பாதம் தொட்டு வணங்கினார் பச்சன். பலருக்கும் அது வியப்பாய் இருந்தது. சுதா மூர்த்தியை முழுதாய்த் தெரிந்தவர்களுக்கு அது வியப்பாய் இருக்க முடியாது.
தொடரும்..
எழுதுவது பிடிக்கும் - புத்தகம் எழுதியதில்லை. பெரிய பெரிய பத்திரிக்கைகளில் கட்டுரைகள எழுதியதில்லை. ஒரெ ஒரு சின்ன வலைப்பூ, இணைய இதழ்களில், சில சிற்றிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். படிப்பது பிடிக்கும் - இலக்கியங்கள் அவ்வளவும் படித்ததில்லை. தமிழ் ஜாம்பவாங்களின் புத்தகங்கள் கரைத்துக் குடித்ததில்லை. ப(பி)டித்த புத்தகங்கள் பல உண்டு. எதார்த்த வாழ்க்கைகயை புத்தகங்
களில் வேறு பரிணாமத்தில் படிக்கப் பிடிக்கும். சமைக்க பிடிக்கும் - அதைவிட வகையாக சாப்பிடுவது பிடிக்கும். (கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்)
இவையெல்லாம் விட, சின்ன சின்ன சந்தொஷங்கள் மிகப் பிடிக்கும்.
-சிவரஞ்சினி