பெண் என்பவள் குழந்தைப் பெறும் போது ஒன்றும் தாயாவதில்லை அவள் பெண்ணாகப் பிறக்கும் போதே தாய்மை உணர்வைப் பெற்று விடுகிறாள். இந்த மென்மையும் தாய்மை உணர்வும்தான் பரிவு இரக்கம் என்று கொடுத்து சமயத்தில் ஏமாறவும் செய்கிறது. தன் முனைப்பு, சுய சிந்தனை, உறுதி, தெளிவு பெண்ணிற்கு தேவை அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சமீபத்தில் ஃபேஸ்புக் பழக்கத்தில் சிறு பெண் ஒருத்தி பயன்படுத்தப்பட்டு, பசியாக்கப்பட்டு, அடி உதை என்னும் பரிசும் பெற்று ஒருவாறாக மீண்டாள் அறிந்திருப்போம் அவள் மீண்டு விட்டாலும் கூட மனரீதியான உத்வேகத்தை முடுக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வர காலங்கள் ஆகுமில்லையா?
நான்கு பெண்கள் பாராட்டுகிறார்கள் என்றால் ஐந்தாவதாக ஒரு பெண்ணிற்கு சிறு ஆர்வம் ஏற்படுகிறது. ,அப்படி என்ன அவன் செயல்படுகிறான், எப்படி இருக்கிறாள் என்று அதுதான் அந்தச் சிறு ஆர்வம்தான் ஏமாற்றுக்காரர்களின் முதலீடு. அந்த ஆர்வத்தை உருவாக்க, தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள என்று யோசித்தே செயல் படுகிறார்கள்.
ஒருவருக்கு அளிக்கும் பாராட்டு என்பது எதன் பொருட்டாக இருந்தாலும் அது அவனுக்கா அதுக்கா என்பதின் தெளிவு அவசியம். காகிதப்பூ காண்பதற்கு அழகு. நீங்களோ மணம் விரும்பிகள். காணவும் நுகரவும் அழகானவை இருக்கின்றன என்பதே நீங்கள் துர்நாற்றம் நுகர்கையில்தான் உணர்வீர்கள். மனம் விரும்பிகள் சிந்திக்கலாம். எப்படியும் பிடிக்கும் எல்லாம் பிடிக்கும் என்றால் அது வேறு.
பெண்கள் கூட்டமாக அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த கல்லூரிப் பொழுது அது. அந்த இடத்தைக் கடந்த ஒருவனைப் பற்றியப் பேச்சு எழுந்தது எல்லோரும் அவன் நன்றாக இருப்பதாகவும் , நன்றாகப் பாடுகிறான் எனவும் என்று இன்னும் சில சேர்த்து “பிடிச்சிருக்கு” என்று வாக்களிக்கின்றனர். பையன் பெரிய பிம்பமாக உயர்ந்து நிற்கிறான் அந்த இடத்தில். பேசிய அத்தனை பேரும் எழுந்து சென்று விட்டனர் அந்த இடத்தில் அவள் ஒருத்தியைத் தவிர. அவளுக்கு இவர்கள் கட்டிய உயர பிம்பம் என்னவோ செய்ய , வலிய பேச்சு கொடுக்கிறாள். பின் அடுத்தடுத்து என்னென்ன நடக்க வேண்டுமோ அத்தனையும் நடந்தது . இறுதியாக பொருத்தம் இல்லாதப் பொருத்துமையின் காரணமாகப் பிரிந்தார்கள் அவளைப் பற்றி அவதூறுகளை அள்ளித் தெளித்து அவனும், அவனைப் பற்றிய குறைபாடுகள் சுமந்த அவளின் பல பேச்சுகளுக்கிடையே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது அந்த உறவிற்கு.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அவளைச் சுற்றி அமர்ந்து அன்று அவனை ஒரு உயர பிம்பமாக உருவாக்கிய யாரும் அவனிடம் பேசவில்லை. ஏதேனும் அவனைப் பற்றியச் செய்தி எனில் நான்காவது மனிதனுக்கு உள்ள அசூசையோடு ‘ஓ அப்படியா’ எனக் கேட்டு நகர்ந்தார்கள். அவர்களுக்கும் தெரியாது அப்படி அவர்கள் பேசியது இப்படியான விழைவை ஏற்படுத்தும் என , யாரைச் சொல்லியும் குற்றமில்லை நீங்களே சிந்திப்பதும் செயல்படுவதுமே தீர்வு.
உங்களுக்கு அவனைப் பிடித்தது எனில் நேரில் சந்தித்து உரையாடி யோசித்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ள நண்பர்களிடம் பகிர்ந்து அவர் கருத்து எதுவும் கூறினால் செவி மடுங்கள். நண்பன் என்றாலும் கூட சில நேரங்களில் இந்த எச்சரிக்கை உணர்வு தேவைதான்.
“துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு “என்னும் வள்ளுவன் வாக்கு இங்கு பொருந்தாது ஏற்காதீர்கள். துணிந்த பிறகு உங்களுக்கு கேடு அளிப்பதாக இருந்தால் எப்படி இந்த வாக்கு பொருந்தும் ?தூக்கி எறிந்து விட்டு வெளியே வருவதுதானே சரியாக இருக்கும். இந்த இடத்தில் வள்ளுவனின் ” மெய்ப்பொருள் காண்பது அறிவு ” என்னும் வாக்கினை எடுத்துக் கொள்வோம்.
அகராதி
Image credit: Freepik