சுள்ளென்ற வெயில் மதியம் சுட்டெரித்தால்…., மாலை நேரத்தில் லேசான சாரல்…..சாரல் விழும்போது மனதுக்கு மகிழ்ச்சிதான், என்றாலும் கூடவே சில எண்ணங்களும் எச்சரிக்கை மணி அடிக்கத்தான் செய்கின்றன.
மார்ச் மாதத்திலிருந்து எல்லோர் மனதிலும் கொரோனா தவிர்க்க முடியாத, ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். வேண்டாமென்றாலும்….வலுவில் வந்து வம்பிழுப்பது போல…..அழையாத விருந்தாளியாய், நம்முடைய பேச்சில வந்து விழுகிறது.
ஒரே ஊரின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தாலும் சரி, ஒரே மாநிலத்தின் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தாலும் சரி….வேறு மாநிலம்….வேறு நாடு என்று….உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் இரண்டு பேர்…., அது உறவினர்களோ …அல்லது நண்பர்களோ, பேச ஆரம்பித்தால், “ஹலோ” என்பது எப்படி ஆரம்ப வார்த்தையோ அது போல…..
“நேத்து நியூஸ் பாத்தியா…..? கேட்டாலே கண்ணக்கட்டுது…ஆமா, உங்க ஏரியால பரவால்லயா…? எங்க வீட்டுக்கிட்ட ரொம்ப மோசம்….” என்று ஆரம்பித்து, கொரோனா புராணத்துக்குப் பிறகுதான் , வழக்கமான குசல விசாரிப்புகளே ஆரம்பிக்கின்றன. இது ஒரு புறம் இருக்க, இப்போது இந்த இனிய மழைச் சாரலைப் பார்த்ததும் விழிப்புணர்வு தோன்றுகிறது.
சிறு வயதில் நாம் படித்த மூன்று மீன்களின் கதையைத்தான் இப்போது நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். “நாளை வந்து மீன்களைப் பிடிக்கலாம் என்ற பேச்சு காதில் விழுந்த உடனேயே….. அலார்ட் ஆறுமுகமான முதல் மீன் தகவலை பிற மீன்களுக்கு சொல்லிவிட்டு ஓடிவிட, “வந்தாப் பாத்துக்கலாம்….” என்றிருந்த இரண்டாவது மீன் வண்டுமுருகன் மீனவர்களின் தலையைப் பார்த்தவுடன்….”அட, உண்மைதான் போல….” என்று வலைக்கு சிக்காமல், முன்யோசனையுடன் தப்பிக்கொள்ள….”ஆங் பாத்துக்கலாம்….” என்று கடைசி வரை அலட்சியமாயிருந்த மூன்றாவது மீன் கைப்பிள்ள கன்ன பின்னாவென்று மாட்டிக்கொண்ட கதை நமக்கெல்லாம் தெரிந்ததுதான்.
“ஏன் மாலா சிஸ்…..இப்ப எதுக்கு இந்த நர்சரி ஸ்கூல் கதைய வந்து இங்க சொல்றீங்க…..?” என்ற குரல் காதில் விழுகிறது. இதற்குக் காரணம்…… “அடடா……!!! அப்படியே….., இதமாக…, பதமாக…., மனதை மயக்கும் பாட்டை நினைவுபடுத்திய….அந்த கவித்துவமான மழைச்சாரல்தான்……”
மழை ஆரம்பித்தால், வரக்கூடிய பிரச்சினைகளில் முக்கியமானது கொசுவால் பரவக்கூடிய நோய்கள்தான்……..மழை ஆரம்பித்தாலே…, மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற பெயர்கள்….பிரபலமாகிவிடும்.
இப்போதுதான், முகக்கவசம், கபசுரக்குடிநீர், சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்றவற்றை கடைபிடித்தால்தான், நம்முடைய வழக்கமான வாழ்க்கையை ஓரளவுக்காவது எட்டிப்பார்க்கமுடியும் என்ற மனநிலை நமக்குள் ஆழமாக வந்திருக்கிறது.
நல்ல மழை தொடங்கும் முன், முன் யோசனையுடன், குப்பை கூளங்களைச் சேர்க்காமல் இருக்கவேண்டும். தேவையில்லாத பொருட்களை தனி வீடுகளில் மாடிபடிக்குக் கீழுள்ள காலி இடத்திலும், தோட்டத்துப்பக்கமோ, அல்லது வீட்டுக்கு வெளியே ,அதே சமயம் காம்பௌண்டுக்கு உள்ளே போட்டுவைப்பதுண்டு. ஃப்ளாட்டுகளில், அதிகம் பயன்படுத்தாத பால்கனிகளில் போடுவதுண்டு. ஆனால், இந்த இதமான மழைச்சாரலை தேக்கிக்கொள்ளும் இடங்களில் இவைகளும் உண்டு. இதனால், கொசு உற்பத்தி பல்கிப் பெருகும். என்னதான், ஒரு பக்கம், கொசு எதிர்ப்பு ஆயின்ட்மென்ட் தடவிக்கொண்டாலும், கொசு மருந்து அடித்தாலும், கொசு பேட்டால் அடித்து அவைகளை வானுலகம் அனுப்பினாலும், மறு பக்கம், இந்த இடங்கள் அவைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கும்.
அதனால், முதலாவது மீன் போல….தூறல், சாரலின்போதே….அபாயத்தை உணர்ந்து தூய்மைப்படுத்திக்கொள்ளவேண்டும். கொசுவலைகள் அடிப்பதும் நல்லது. வேப்பிலைகளைக் காயவைத்து வீட்டுக்கு வெளியே (தனி வீடுகளில்) மூட்டம் போடுவதும் பயன் தரும்.
அடுத்த அபாயம் மழைக்காலத்தில் தண்ணீரால் பரவக்கூடிய பிரச்சினைகள். சில இடங்களில் கழிவு நீர் குடிநீரோடு கலக்கும் அபாயங்களும் எதிர்பாராமல் நடப்பதுண்டு. இதனால், ஏற்படும் மஞ்சள் காமாலை, டைபாய்ட் போன்றவற்றிலிருந்து நம்மை காக்கக்கூடிய ஒரே விஷயம் குடிக்கும் தண்ணீரை வடிகட்டிக், காய்ச்சி உபயோகிப்பது மட்டுமே.
நன்றாக சமைக்கப்பட்ட சுகாதாரமான உணவுகள் அமீபியாஸிஸ் உள்ளிட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும். வெளி உணவுகளைத் தவிர்த்தல் நலம். இப்போது கொரோனா காலகட்டத்தில் இருப்பது போலவே…., காய்கறிகள் , பழங்கள் போன்றவற்றை நன்றாக சுத்தப்படுத்தி, பயன்படுத்துதலை வாடிக்கையாக்கினால் பாதி நோய்களை விரட்டிவிடலாம்.
மொத்தத்தில் வருமுன் காப்பது சிறந்தது. கொரோனா முன்னறிவிப்பின்றி உள்ளே நுழைந்தது. அந்த நோய் குறித்த தகவல்கள் , பாதிப்புகள் எல்லாமே புதிது. ஆனால், டெங்கு போன்ற நோய்கள் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். இதன் பாதிப்புகள் எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்தன என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
இப்போது, நம்முடைய எதிர்ப்புசக்தி மட்டுமே நம்மை காப்பாற்றும் என்பதற்காக, எலுமிச்சை , இஞ்சி, மிளகு, மஞ்சள் தூள் சேர்த்த கொதிநீர் போன்றவற்றை பருகும் நாம், இன்னும் கொஞ்சம் முயற்சியை சேர்த்துப் போட்டு, நோய்களிலிருந்து விலகி இருப்போம்.
எல்லாவற்றுக்கும் மேல், மிக முக்கியமானது, நம்முடைய மன உறுதி….எதையும் எதிர்கொள்ளும் திறன்…..நேர்மறை எண்ணங்கள்…..மருந்துகளை விடவும் மனத்திட்பம் சக்திவாய்ந்தது. அதனால், ஒரு விஷயம் வந்துவிட்டால் என்ன ஆகுமோ என்ற பயத்தை விட்டுவிட்டு….செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்தால்…… எல்லாமே நன்றாக நடக்கும்…
வருமுன் காப்போம்….!!! நலமாய் வாழ்வோம்….!!!
இனிய பகிர்தலுடன்,
உங்கள் மாலா ரமேஷ், சென்னை.