
தனிமை! இதை புரிந்த கொள்ள மட்டுமல்ல ஏற்றுக் கொள்ளவே நாம் தயங்குவது உண்டு. தனிமையை பலர் கொடுமை என நினைக்க, இதிலோ இரு வகை உண்டு எனக் கூறினால் ஆச்சர்யம் ஆட்கொள்கிறது.
திணிக்கப்பட்ட தனிமை ஒரு வகை, தாமாகவே விரும்பி தனிமைப் படுத்திக் கொள்ளவது இன்னொரு வகை. குடும்பத்தை விட்டு வேறு ஊரிலோ நாட்டிலோ வேலைப் பார்பவர்கள் படிக்கச் சென்றவர்கள் , கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பவர், துணையை இழந்தவர், மேலும் மிக முக்கியமாக தற்போது கொரோனா பாதிப்பினால் தனிமை படுத்தப்படுபவர்கள், இவையெல்லாம் கட்டாயத்தினால் ஏற்படும் திணிக்கப்பட்ட தனிமை.
இவர்கள் உணர்வு பூர்வமான நேரங்களில் தனிமையை கொடுமையாக உணர்கின்றனர். பல மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இது இப்படியிருக்க தானாக விரும்பி தனிமைப் படுத்தி கொள்பவர்கள் யார்? இவர்களை பற்றி கூறினால் விசித்திரமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும்.

தினசரி வாழ்வில் நாம் கடந்து போகும் நபர்களில் சிலர் அவரவர் துறைகளில் வெற்றியாளர்களாக இருப்பர், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் யோசிப்பது உண்டு இவர்கள் மட்டும் எப்படி இவ்வாறு சாதிக்கிறார்கள், என்ன இரகசியம் இருக்குமென்று. இரகசியம் இருக்கிறது, அவர்கள் வருடம் முழுவதும் உழைத்தாலும் தனக்கென்று விடுப்பு எடுத்துக் கொண்டு தனிமையில் இனிமை காண்பவர்கள்.
குறைந்தபட்சம் ஒரு நாளில் சில மணித் துளிகளாவது தனிமையில் இருப்பவர்கள். விரும்பி தனிமையை ஏற்படுத்திக் கொள்பவர்கள். தனிமையில் இருப்பதற்கும் சாதிப்பதற்கும் என்ன சம்பந்தம் எனக் குழப்பமா? கவனமாக உணர்ந்து இனி வருவதை படியுங்கள்!
மனிதனின் விபரீத குணம் மற்றவர் மேல் வைக்கும் அன்பு! மனிதனுக்கு அதுவே ப்ளஸ் அதுவே மைனஸ். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமே. மற்றவர் மேல் அன்பு காட்டுவதில் தவறேயில்லை, ஆனால் ஏன் அதே அன்பை உங்களிடமே நீங்கள் காட்டிக் கொள்வதில்லை.
உங்கள் மனதின் மேல் உங்களின் உடலின் மேல் காதல் கொள்ளுங்கள், உங்களை வெல்ல யாராலும் முடியாது.
“சுய” நலத்துடன் சிந்தியுங்கள். குடும்பத்தைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் மட்டுமே சிந்திக்கும் நாம் நம்மைப் பற்றி எப்போது எவ்வாறு சிந்திக்கிறோம்.
தனிமை கிடைத்த போதும் நீங்கள் மற்றவர் பற்றி யோசிப்பதாலேயே அற்புதமானஅபூர்வமான தனிமையை வலியாக உணர்கிறீர்கள்.

தோண்ட தோண்ட புதையல் கிடைப்பது போல் யோசிக்க யோசிக்க நம்மில் புதைந்து போன கனவுகள் ஆசைகள் திறமைகள் எல்லாம் ஞாபகம் வரும், இது தனிமையில் நீங்கள் இருக்கும் போது மட்டுமே சாத்தியம்.
அவற்றின் மேல் தினம் குறைந்தது அரை மணி நேரம் நமக்காக நம் ஆசை, கனவு, திமைகளுக்காக நம்மால் ஒதுக்க முடியாதா, அதில் கிடைக்கும் அலாதி இன்பம் வேறு எங்கே கிடைக்கும்.
பெரும் பணக்காரர் மேலும் மேலும் பணக்காராகிறார், எப்படி அவருக்கு மட்டும் தினம் அந்த புத்துணர்ச்சி, நேரம் கிடைக்கும் போது அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு, பொழுதுபோக்கில் சிறிது நேரம் செலவிடுகிறார்கள். டென்னிஸ், ஸ்நூக்கர், பேட்மின்டன் விளையாடுவதும், இரவு நேர லாங் டிரைவ் போவதும், சிறிது நேரம் நீச்சல் குளத்தில் செலவிடுவதும் பெருமைக்காக அல்ல. அவர்கள் மனதை புத்துணர்ச்சியாக்க மட்டுமே.
எதற்கும் திருப்தியடையாத மனம் நம்மை நாமே நேசிக்கும் போது ஆத்ம திருப்தியடையும். யோசித்து பாருங்கள், தனிமையில் இருக்கும் நேரம் நாம் உணர்வுபூர்வமாக யாரின் கட்டுப்பாட்டிலும் இல்லை. ” நானே ராஜா நானே மந்திரி”. ஆங்கிலத்தில் “Loneliness” “Lonely” இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

“Am feeling lonely” – நான் தனியாக இருப்பதைப் போல் உணருகிறேன்.
“Am enjoying loneliness” – நான் தனிமையை ரசித்து அனுபவிக்கிறேன்.
இதில் எல்லோரும் இருந்தும் நான் தனிமையில் இருப்பது போல் உணருகிறேன் என்பது தாழ்வு மனப்பான்மையாலும் மற்றவர்களிடம் நமக்கு இருக்கும் எதிர்பார்ப்பினாலும் வருவது. கவனமாக சிந்தியுங்கள் இதில் தாழ்வு மனப்பான்மை எங்கிருந்து வந்தது? எதிர்பார்ப்புகளும் பிறரை சார்ந்திருப்பதுமே அதற்கு காரணம்.
ஒவ்வொரு பிறப்பிலயே தனித்துவமானவன். ஒவ்வொரு பிறப்பிற்கும் அர்த்தம் உண்டு. யாரும் யாரையும் யாருடனும் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது, அது உண்மையில் மன்னிக்க முடியாத குற்றம். ஒவ்வொருவருக்கும் தனக்குள் இருக்கும் தனித்துவத்தை புரிந்துக் கொள்ள சிறிதளவு தனிமை தேவைப்படுகிறது.
ஒரு சின்ன ஆராய்ச்சி, உங்கள் குழந்தைகளை சிறிது நேரம் கண்டுக்கொள்ளாமல் விட்டு பாருங்கள். அவர்கள் அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டுமே செய்வார்கள். நாமும் குழந்தைகளாக இருக்கும் போது அப்படி தான் இருந்திருப்போம், இப்போது ஏன் இல்லை? முயற்சிக்கலாமே!

தனிமையில் மட்டுமே உங்கள் குணாதியசங்களை நீங்கள் உணர முடியும். மற்றவரை குறை கூறுவது சுலபம். ஒருவர் நம் தவறை சுட்டிக் காட்டும் போது கோபம் வருவதும் இயற்கையே.
அப்படி கோபம் வரும் போது ஒரே ஒரு நொடி உங்களை நீங்கள் உணர்ந்தால், கோபம் நியாயமானதா என புரிந்து விடும். அதற்கு முன் உங்களை நீங்கள் புரிந்து கொள்ள தனிமையே தேவைப்படுகிறது.
இன்றைய காலத்தில் ஓடி ஓடி பிள்ளைகளை இவையெல்லாம் கற்றுக் கொண்டால் அவர்கள் வாழ்க்கை தரம் உயருமென்று வித விதமான பயிற்சி வகுப்புகளில் சேர்க்கும் எத்தனை பேர் தங்களின் ஆசைகளைப் பற்றி யோசித்திருக்கிறீர்கள்.
அதுவும் பெண்கள் அவரவர் பிள்ளைகளை சரியான நேரத்தில் பயிற்சி வகுப்பில் விட்டு அழைத்து வருவதையே கடமையாக செய்வதை பார்க்கிறோம், தவறேதுமில்லை, ஆனால் தங்களைப் பற்றி யோசிப்பதில்லை.
ஒரு சிறு முயற்சி உங்களைப் பற்றி சிறிது தனிமையில் உட்கார்ந்து யோசியுங்கள், உங்கள் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது எது என கண்டுபிடித்து அதில் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
பிறகு பாருங்கள் இன்னும் உற்சாகமாக உங்கள் குடும்பத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள முடியும். உங்களுக்கு வரும் தன்னம்பிக்கையே வேற லெவல். உங்களை நீங்களே புரிந்து கொள்ளவில்லை எனில் மற்றவர் புரிந்த கொள்ளவில்லை என குறைப்படுவதில் என்ன அர்த்தம்.
நம் மனமே நம் எண்ணங்களே நமக்கு முதன்மை, நம் முதல் குழந்தை முதல் தோழன் நம் மனமே! அதன் மேல் அக்கறை கொண்டு ஆசையுடன் காதலுடன் நேசிக்க தனிமையே நமக்கு உதவிடும்.
அந்த ஆத்ம திருப்தியை நீங்கள் உணர்ந்தால் எந்த வித ஏளனப் பேச்சுகளோ தாழ்வு மனப்பான்மையோ தோல்விகளோ இழப்புகளோ உங்களைப் பாதிக்காது. அதை உணர்ந்தவர்க்கு தனிமையில் இனிமையை அடையாளம் காணப் பழகுங்கள். வெற்றிகளும் நிம்மதியும் தேடி வரும்.
-பத்ம பிரியா