ஆரோக்கியம் காப்பது அவசியமே!

Hands holding heart
நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியும்.  உடற்பயிற்சி செய்வதால் நம் உடல் மட்டுமல்ல மனமும் வலிமை பெறுகிறது.  உடற்பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டுமென திட்டமிட்டால் எதுவும் சாத்தியம் தான்.  நம் உடலை நாம் பராமரித்துக் கொள்வதும் ஒரு வித கலை. உடற்பயிற்சியில் பல விதம்.  நடைப்பயிற்சி,  யோகா, ஏரோபிக்ஸ், ஜூம்பா, ஓட்டப் பயிற்சி,  ஜிம் பயிற்சி எனப் பலப் பல.  உடற்பயிற்சி செய்வதால் மூளை புத்துணர்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வைக்கிறது.  மேலும் உடற்பயிற்சி செய்ய சிறியவர் பெரியவர் பாகுபாடு கிடையாது.  ஆண் பெண் பேதமும் இல்லை.
பெண்களுக்கு உடற்பயிற்சி மிக மிக அவசியமாகிறது.  திருமணத்திற்கு முன் கொடுக்கும் முக்கியத்துவத்தை திருமணத்திற்கு பிறகு அழகு, ஆரோக்கியம் இவற்றிற்கு பெண்கள் கொடுப்பது மிக அபூர்வம்.  இதனால் குழந்தைகள் பிறந்து அவர்களை வளர்த்தி ஆளாக்கி விடுவதிற்குள் பல மன உளைச்சல்கள் ஆரோக்கிய குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர்.  பலர் தினமும் வீட்டு வேலைகள் நேரம் தவறாமல் செவ்வனே செய்வதும், பிள்ளைகள் படிப்பிலும் அவர்கள் ஆரோக்கியம் குறையாமல் பார்த்துக் கொள்வதும் என்பவை மட்டுமே கடமையாக எண்ணி திறம்பட செயல்படுகின்றனர்.  இதே ஆர்வத்துடன் ஆசையுடன் அக்கறையுடன் தன்னையும் பெண்கள் பார்த்துக் கொள்ள தவறி விடுகின்றனர்.
இதில் பலப் பெண்களுக்கு நாம் குடும்பத்தினர் மேல் காட்டும் அக்கறைப் போல் அவர்கள் நம் மேல் அக்கறை காட்டுவதில்லையே என குறைப்பட்டும் கொள்கின்றனர்.  எதற்காக இந்த எதிர்பார்ப்பு,  தேவையில்லையே!  பெண் ஒரு தாயாக தன் குடும்பத்தை பேணி பாதுகாக்கும் போது அவள் எல்லோரையும் விட உயர்ந்து நிற்கிறாள்.  மறைமுகமாகவும் பல சமயம் வெளிப்படையாகவும் அவளே குடும்பத்தை ஆள்கிறாள்.
Illustration of healthy lifestyle
பெண்களே! எந்த சூழ்நிலையிலும் மனதில் தாழ்வு மனப்பான்மை வேண்டாம்.  கணவன் சம்பாதித்தாலும் நீங்கள் தான் வீட்டையும் குடும்பத்தையும் ஆள்கிறீர்கள்.  குடும்பத்தில் கணவன் மனைவி இருவர் சம்பாதித்தாலும் வீடு ஆள்வது பெண்கள் தான்.  அதனால் எந்த சூழ்நிலையிலும் தாழ்வு மனப்பான்மை தேவையில்லை.  அதே போல் எதிர்பார்ப்புகள் இல்லாமல் நாம் வாழப் பழகிக் கொண்டால் ஏமாற்றங்கள் இருப்பதில்லை.
பெண்களே உங்கள் ஆரோக்கியமே குடும்பத்தின் உண்மையான சொத்து.  தேவையெல்லாம் தினசரி சிறிது உடற்பயிற்சி,  உங்கள் மனதிற்கும் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியமாகிறது.  தினசரி குறைந்தது இருபது நிமிடங்கள் உங்களுக்காக உங்கள் ஆரோக்கியத்திற்காக மட்டுமே ஒதுக்குங்கள், புத்துணர்ச்சி கிடைக்கும்.  முகம் பொழிவு பெறும், வயது குறைவாக இளமையாக காணப்படுவீர்.
தினசரி உடற்பயிற்சியால் மன ஆரோக்கியம் மேம்படும், பதற்றம் குறையும், மன அழுத்தம் குறையும்,  இதயம் சீராக செயல்பட உதவும், உடல் எடை குறையும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும், இரத்த அழுத்தத்தை சீராக்கும், செரிமானத்தை சரி செய்யும், உடல் உறுதியை அதிகரிக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், தசைகள் வலுவடையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இதனால் வாழ்நாளும் அதிகரிக்கும்.
உடற்பயிற்சி முழங்கால்களுக்கு, குதிகால்களுக்கு, கை விரல்களுக்கு, முதுகெலும்புக்கு, கழுத்திற்கு,  கண்களுக்கு, முகத்திற்கு எனப் பலவும் உண்டு.  உடற்பயிற்சி மூலம் கவர்ச்சிகரமான உடல் அமைப்பு பெறும்.  பசியின்மை போக்கும், மேனி பொலிவடைகிறது.  எலும்புகளை மூட்டுகளை வலுவடையச் செய்கிறது, நல்ல உறக்கம் வரும்.  மாதவிடாய் பிரச்சனைகள் சீராகும்.
Young woman practicing yoga in the nature
வீட்டு வேலைகளே உடற்பயிற்சிக்கு சமமானதாக உள்ளது என குருட்டு நம்பிக்கை வேண்டாம் பெண்களே! இன்றைய காலச் சூழ்நிலையில் நாம் செய்யும் வீட்டு வேலைகள் பொதுமானதே இல்லை.  அன்றைய காலங்களில் விறகு அடுப்பு கீழே உட்கார்ந்து சமைத்தனர், சமைக்கும் போது தேவையான பொருட்களை எடுக்க பல முறை எழுந்து எடுத்தனர்.  அரைப்பதற்கு ஆட்டு உரலும் அம்மியும், துணி துவைப்பதும் அலசுவதும் கையில் தான்.  வீடு துடைப்பதற்கு கூட மாப் கிடையாது, குனிந்து அல்லது குத்துகாலிட்டே துடைப்பார்கள்.  வெஸ்டர்ன் டாய்லட்டும் கிடையாது, மூட்டு வலியும் கிடையாது.  அடுக்கு மாடி குடியிருப்பு இல்லை, அதனால் வற்றல் வடாம், துணி காய போட மாடி ஏறி இறங்கினர்.  விடியற்காலை வாசல் சுத்தம் செய்து கோலம் போட்டனர்.  இப்போதோ நம் அதீத விஞ்ஞான வளர்ச்சியால் கைகள் கால்கள் உடலுக்கு தேவையான அசைவுகள் இல்லை.  அதனால் நோய்களும் பெருகி விட்டது.  கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்று சிசேரியன் அறுவை சிகிச்சை முறை அதிகரித்துள்ளது.  இயற்கை பிரசவ வலி என்பதே பெண்கள் உணர முடியாமல் போனது வேதனைக்குரியது.  மேலை நாடுகளிலும் தற்போது நம் நாட்டிலும் பல நகரங்களில் அறிமுகமாகியுள்ளது கற்பகால உடற்பயிற்சி,  இயற்கை பிரசவத்திற்கு, வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக.
நாகரிகம் என நாம் நம்மை சோம்பேறியாக்கி உடல் ஆரோக்கியத்தை வீணடிக்கிறோம். இனி ஒரு புதுயுகம் செய்வோம், தினசரி உடற்பயிற்சியை நம் அன்றாட வழக்கமாக்கி, ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்து காட்டுவோம், பெண்களே!

எழுத்து பத்மப்ரியா
Back To Top