எங்கேயாவது ஓடிப் போய்விடலாம் என்று தோன்றுகிறது!
இந்த கடவுளுக்கு கண்களே கிடையாதா?
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?
என்ன பாவம் செய்தேனோ நான்!
இவை அனைத்தும் அன்றாட வாழ்வில் நாமோ அல்லது நமது சுற்றத்தில் ஒருவரோ கூறி கேட்டுக் கொண்டிருக்கிறோம் , ஆனால் என்றாவது விடை கிடைத்ததுண்டா? உங்களுக்குள் இருக்கும் பதிலை வெளியே தேட தேட மன அழுத்தமும், சோர்வும் தானே மிஞ்சும். சரி அப்படியாக இருக்க எண்பது வயதில் ஒரு ஆண் தன் குடும்பத்திற்காக எந்த வேலையையும் செய்யத் துணியும் பட்சத்தில் , இளம் வயதில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தில் எனக்கு நிம்மதி கிடைக்கும் என்று அவன் தற்கொலை செய்கிறார்கள் என்றால் அதற்கு யார் காரணமாக இருக்க முடியும், அவர்களது போராட்ட குணத்தின் பற்றாக் குறையை தவிர ! அப்படியான மன அழுத்தம் சார்ந்த தற்கொலைகளை உற்று நோக்கினால் நாம் ஒன்று உணரலாம் நாமும் நிச்சயமாக அந்த நிலையை என்றோ ஒரு நாள் கடந்து வந்திருப்போம் , கையாளத் தெரியாமல் உயிரை மாய்த்து இருப்பான் அந்தப் பேதை.
மன அழுத்தத்தின் காரணம் என்னவாக இருக்கும்?
அது யாரால் ஏற்படுகிறது ?
நண்பர்களின் பகடியாலோ?
உறவினர்களின் ஏளன பார்வைகளாலோ?
பணப்பற்றாக்குறையாலோ ?
ஆரோக்கியத்தினாலோ?
குடும்ப பிரச்சனை நிமித்தமாகவோ?
இவை அனைத்தும் காரணங்களாக கருதினாலும் உங்கள் அனுமதியின்றி எதுவும் உங்கள் மனதை அழுத்த துணியாது! கண்களை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று பூனை நம்பட்டும் , வாழ்க்கை நமக்காக ஒளித்து வைத்திருக்கும் புதிர்களை பாய்ந்து பிடிக்க புலியாய் மாற வேண்டிய நேரம் இது.
அனைவரிடமும் அன்பை அள்ளித் தெளிக்க தெரிந்த நமக்கு அதை யாரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்பது தெரிவதில்லை, வழிப்போக்கரிடம் நமது மனதின் உரிமைச் சான்றிதழைக் கொடுத்தால் அதன் மதிப்பு அவருக்கு எப்படி தெரியும்? அது அவரின் குற்றமா அல்லது கண்மூடித்தனமான நம்பிக்கையின்பால் நாமிழைத்த குற்றமா? அன்பை பிறரிடத்தில் தேடுவதை நிறுத்தி ஒரு நிமிடம் கண்ணாடியின் முன் நின்று கடந்து வந்த பாதையை நினைவு கூறுங்கள், புரியும் இன்று இவ்வுலகில் நாம் நிலைத்திருப்பதும் சாதனையே! மன அழுத்தத்திற்கு மரணம் நிச்சயமாக ஒரு முடிவல்ல! நான் நினைப்பதை கூறினால் என்னை தவறாக எண்ணி விடுவார்களோ ?என் விருப்பப்படி என் வாழ்க்கையை வாழ்ந்தால் ஏளனமாக பார்ப்பார்களோ ? என்று நீங்கள் யோசிக்கும் அந்த நொடியில் மன அழுத்தம் உங்கள் மனதில் வேறூண்றுகிறது.

வாழ்வது ஒரு வாழ்க்கை ! அதில் மன்னிப்போ, மகிழ்ச்சியோ, சினமுமோ, புகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசும் அளவிற்கான நட்பை பெறுவது முக்கியமான ஒன்று . அந்த நட்பு பெற்றோர் பிள்ளைகளுக்குகிடையே இருக்கலாம் , கணவன்-மனைவிக்குளாக இருக்கலாம் அல்லது தோழன் தோழியாகவும் இருக்கலாம். தட்டிவிட ஆயிரம் கைகள் நம்மைச் சுற்றி இருக்க மற்றொருவரை தட்டிக் கொடுக்கும் கை ஏன் நமதாக இருக்கக்கூடாது?

பாசிட்டிவிட்டி என கூறப்படும் நேர்மறை எண்ணங்களை கொண்டு உங்கள் மனக் கோட்டையை வடிவமையுங்கள் பார்க்கலாம் ஒரு கை , அதிரத்தான் செய்யும் ஆரம்பத்தில் ஒரு சிறிய கல் எறியப்படும் பொழுது, ஒரு கட்டத்திற்குப் பிறகு அக்கற்களை கொண்டு கோட்டைக்கு சிலை செதுக்கும் சிற்பிகள் ஆக மாறி இருப்போம். இதுவும் கடந்து போகும் என்பதை உங்கள் இதயத்தில் பச்சை குத்திக்கொள்ளுங்கள், நிச்சயம் ஒருநாள் அது அனைத்தையும் கடந்து உங்களைக் கூட்டிச் செல்லும் நீங்கள் நினைத்த உயரத்திற்கு.
பகுதி இரண்டில் என் கருத்துக்களோடு உங்களை நான் சந்திக்கும் வரை நினைவில் இணைந்திருப்போம்.

இப்படிக்கு,
பிரியதர்ஷினி கோபிகிருஷ்ணன்.