அப்பா என்னும் அற்புதம்

Fathers day concept with daughter covering fathers eyes

“கண்டிப்பிலும் கனிவை ஒளித்து வைத்திருக்கும் காவல்தெய்வம் – அப்பா” என்று என் கவிதைப் புத்தகத்தில் எழுதியிருந்தேன். அப்பாவின் கோபத்திற்க்குப் பின்னால் மறைந்திருப்பது அப்பாவின் அன்பு தான்.

சிறிய வயதில் நாம் நிறைய தேவதைக் கதைகளைக் கேட்டிருக்கிறோம். ஒருவேளை அந்த தேவதை ஆணாக இருந்தால் எப்படி இருக்கும்? நம் அப்பாவைப் போல இருக்கும். அப்பா – நம் ஆண் தேவதை.

அலாவுதீனும், அற்புத விளக்கும் என்கிற கதையை நீங்கள் படித்திருப்பீர்கள். அல்லது தொலைக்காட்சித் தொடாில் பார்த்திருப்பீர்கள். அதில் வரும் அலாவுதீன் எங்கே இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த அற்புத விளக்கு நம் ஒவ்வொருவா் வீட்டிலும் இருக்கிறது. அதன் பெயா் – “அப்பா”. நாம் நினைப்பதை எல்லாம் நிறைவேற்றுகிற, நாம் ஆசைப்படுவதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிற, இருளில் தன்னை வைத்துக் கொண்டு வெளிச்சத்தை நோக்கி நம்மை நகா்த்துகிற அற்புத விளக்கு தான் “அப்பா”.

அம்மாக்களுக்கு நம்மைக் குறித்து ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால் அப்பாவிற்கு ஒரே ஒரு கனவு தான். தன் பிள்ளைகள் மனதில் நினைக்கிற பொருளை அடுத்த கணமே அவர்களின் கைகளில் தர வேண்டும் என்பது தான் அது. தன் பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கித் தர முடியாத சூழலில் அப்பா என்பவர் வேதனையின் விளிம்பிற்குச் சென்று விடுகிறார். அம்மாவின் மடி சாயும்போது நமக்கு உலகமே மறந்து போனது போல் இருக்கும். அப்பாவின் விரல் பிடித்து நடக்கும் போது நமக்கு உலகமே கிடைத்தது போல் இருக்கும். ஆனால் அப்பாவின் உலகம் என்பது நாம் தான்.

Father kissing his baby in the park

தனக்கு கிடைக்காத கல்வி தன் மகனுக்கும், யாருக்குமே கிடைக்காத வாழ்க்கை தன் மகளுக்கும் கிடைத்திட வேண்டும் என்பது தான் ஒரு அப்பாவின் வாழ்நாள் ஏக்கமாக இருக்கும். அதற்காக தன்னையும் இழக்கத் தயாராக இருக்கும் தியாக தீபம் தான் அப்பா.

சரித்திரத்தின் பக்கத்தில் சந்தித்த ஒரு சம்பவம். மாபெரும் மன்னனான பாபா் அவா்களின் அன்புக்குரிய வாரிசு ஹிமாயூன் உடல் நலமிழந்து எந்த வைத்தியராலும் குணமாக்க மடியாத அவதிக்கு ஆளாகிறார். அந்நிலையில் அங்கு வந்த துறவி ஒருவர். “மன்னா ! உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றை உங்கள் மகனுக்காக தியாகம் செய்யுங்கள் அவர் பிழைப்பார்” என்று சொல்லிச் சென்றார். பாபாின் எண்ண அலை இப்படியாக இருந்தது. “எனக்கு அதிகம் பிடித்த கோஹினூர் வைரத்தை என் மகனுக்கே கொடுத்து விட்டேன் ; ஆட்சியும் அதிகாரமும் என் மகனுக்குத் தான். அதையும் தாண்டி என் பிரியத்திற்குாியது என் உயிர் மட்டுமே ; என் உயிரை எடுத்துக் கொண்டு என் மகனை பிழைக்க வையுங்கள்” என இறையை நோக்கி இறைஞ்ச, அடுத்தடுத்த நாட்களில் ஹிமாயூன் எழுந்து, பாபா் மறைந்தார். அரசனாக இருந்தாலும், அடுத்த வேளைக்கே உணவில்லாதவனாக இருந்தாலும் தன் பிள்ளைக்காக தன் உயிரையும் கொடு‌ப்பது அப்பாவாகத் தான் இருக்க முடியும்.
உயில் எனும் த‌லைப்பில் நா. முத்துக்குமார் எழுதிய கவிதை ஒன்று

“மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை அறிந்து கொள்ள முடிந்தது ;
என் அன்பு மகனே!
உன் மகன் பிறந்ததும் என்னை நீ அறிவாய்”.

அப்பாவின் அன்பை பெரும்பாலும் அவர் இருக்கும் போது நாம் உணர்வதில்லை. தன் ஆயுள் வரை நமக்காக ஆயுள் ரேகை தேயும் அளவு உழைக்கும் உலகின் அத்தனை அப்பாக்களுக்கும் அன்பான
” தந்தையா் தின வாழ்த்துக்கள் “

கவிதா ஜவகர்

Back To Top