1991 லிருந்து உலக தாய்ப்பால் வாரம் என ஆகஸ்ட் முதல் வாரத்தை 120 நாடுகளுக்கு மேலாகக் கொண்டாடி வருகிறார்கள். இங்கு கொண்டாட்டம் என்பது கூட்டங்கள், செய்திகள், விளம்பரங்கள் என்பது மட்டும் அல்ல, அறிவுறுத்துவது . எப்படியும் இதை நடைமுறைப் படுத்துங்கள் என்பதுதான். ….
அவ்வகையில் ஆகஸ்ட் மாதத்தில் பெருவாரியான கவனம் பெறாதுப் போன தாய்ப்பால் வாரம் குறித்து. ..
தாயின் சிறப்பு சென்டிமெண்ட் என்பதெல்லாம் ஏகத்துக்கும் கொட்டியிருக்கிறது வெளியெங்கும். அவை அனைத்தையும் விட்டு அவசியம் அறிந்து நடைமுறைப் படுத்த வேண்டிய அடிப்படை பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுப்பது. தாய்ப்பாலின் சிறப்பு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. விஞ்ஞானம் வளர்ச்சிடைய வளர்ச்சியடைய தாய்ப்பாலின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.
உங்கள் குழந்தைகளுக்கு அன்பையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பது இன்றியமையாதது இதுதான் சொத்து மற்றவை அடுத்த நிலைதான். தாய்ப்பால் இல்லை, ஊறல, கிடைக்கல, எங்க அத்தைக்கும் இல்லையாம் இப்படி அது மாதிரி எனக்கும்… இந்த வகை பேச்சுகள் அனைத்தும் சுத்த முட்டாள்தனமானது . பிள்ளை வயிற்றில் வளரும் போதே பாலையும் உற்பத்தி செய்யும் வேலையை பிள்ளைக்குத் தேவை என்று இயற்கை தொடங்கி பூர்த்தி செய்து விடுகிறது .
முதலில் கொடுக்கும் போது அப்படித்தான் இருக்கும் நினைத்த உடனே எல்லாம் குபுகுபுவென கொப்பளித்துடாது.. இரண்டு மூன்று நாட்களில் ஊற்றெடுக்கும் வளமாக. ஆனால் இதை விட்டு குழந்தை குடிக்கல பால் ஊறல இல்லைங்கிறதலாம் மோசமான பேற்றல். சிலரிடமெல்லாம் சொல்லி புரிய வைக்கவே முடியாது .எந்த மொழியில் என்ன முறையில் சொன்னால் புரியுமோ அப்படிச் சொல்லி பதிய வையுங்கள் அருகில் இருப்பவர்கள். சீம்பால் குழந்தைக்கு மிகவும் இன்றியமையாதது; அதிகப் பயனுள்ளது. குறைந்த அளவிலே சுரக்கும் முதல் மூன்று நாட்களுக்குக் குழந்தையின் எல்லாத் தேவைகளுக்கும் போதுமானது.குழந்தைக்குத் தேவையான பொழுதெல்லாம் பால் புகட்ட வேண்டும். அதோடு எவ்வளவு நேரம் குழந்தை குடிக்கின்றதோ அவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும்.
உலகில் கிட்டத்தட்ட 4500 பாலூட்டும் இனங்கள் உள்ளன. ஆனால் மனித இனத்தில் மட்டும்தான் பாலூட்டுவதில் விநோத பிரச்சினைகள்
விட்டேத்தியாகக் கொடுப்பது , ”வெளியே போக முடியல எப்ப பாத்தாலும் கங்காரு குட்டியாட்டம் தூக்கிட்டே இருக்க வேண்டியதா இருக்கு ஃபிரியாவே இருக்க முடியல” என்றெல்லாம் எண்ணாமல் அக்கறையுடன் குழந்தையை அரவணைத்துக் கொடுங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் பால் இருக்கும். இயற்கைக்கு ஓரவஞ்சனை தெரியாது . பெண்கள் செய்வார்கள் முடியும் என்றுதான் இயற்கை இந்த இமாலயப் பொறுப்பினை நம்மிடம் கொடுத்துள்ளது.
திருமணம் ஆகாத இளையவர்களும் இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள். ஆணாக இருப்பின் தயக்கம் வெட்கம் கூச்சம் எல்லாம் தூக்கி போட்டு விட்டு திருமணத்திற்கு முன்னரே கூறி விடுங்கள் .குழந்தைக்கு ஒரு வருடம் தாய்ப்பால் கொடுத்தே ஆக வேண்டும் என்பதை . பெண்ணாக இருந்தால் குழந்தை பிறந்தது முதல் ஒரு வருடம் தாய்ப்பால் கொடுப்பேன் அதற்கான சூழல் அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று. பொருளாதர நிலை ஒத்துழைத்தால் வேலையை விடுதல் ,விடுமுறை, வேலைக்கு சென்று கொண்டே பராமரிப்பு என அவரவர் சூழ்நிலை பொறுத்து முடிவெடுங்கள்.
நீங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்கி கொடுக்கறீர்கள் . உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் போது அவர்கள் தங்களோட குழந்தைகளையும் நலமாகத்தான் கொடுப்பார்கள். எவ்வளவு பொறுப்பு இருக்க வேண்டும் என்று பாருங்கள்….
- அகராதி