நம் வீட்டின் செல்வங்கள் குழந்தைகள் தான். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தனியே பிள்ளைகளை வைத்துக் கொண்டு போராடும் இளம் யுவதிகளே அதிகம்.
அதுவும் ஆறேழு மாதங்கள் கடந்த பிள்ளையென்றால், குப்புற விழுந்து தவழ ஆரம்பிக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் ஓர் குழந்தை இருந்தால், அத்தனை பேரும் கவனித்தாலும் போதாது தான். ஏதோ ஓர் அசட்டையான பொழுதில் குழந்தை எதனடியிலாவது சென்று மாட்டிக் கொள்ளும். இல்லை எதையாவது வாயில் போட்டுக் கொள்ளும்.
இவற்றைத் தடுக்க நம் வீட்டை child proof செய்வது மிக அவசியம். குழந்தையை அதிக நேரம் வைத்திருக்கும் அறையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வறையிலிருக்கும் நாற்காலிகள், மேசைகள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்துங்கள். குழந்தை தானாக உருண்டு விளையாடும் போது குழந்தையை பாதிக்கும், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஏதும் அவ்வறையில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள்.
அத்தோடு கீழே வரை அலமாரி இருக்கும் அறையாக இருந்தால், அந்த அலமாரிகளில் குழந்தை எழுந்து நின்றால் எவ்வளவு உயரம் வருமோ அத்தனை அடுக்குகளையும் காலியாக வையுங்கள்.
இது நாம் கவனிக்காத நேரத்திலும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும். குழந்தையை கைகளிலேயே வைத்துக் கொண்டிருக்காமல், எந்த பொருளுமற்ற அறையின் தரையில் நன்றாக சுத்தம் செய்து விட்டு குழந்தையை விடுங்கள்.
அவர்களுக்கான எல்லைகள் விரியட்டும்.
இப்படி குழந்தைகளுக்கான பாதுகாப்பான அறையை உருவாக்குவதால் அவ்வறையை சுத்தம் செய்வது எளிதாக இருக்கும். தினமுமே கூட துடைத்து எடுக்கலாம்.
மறக்காமல் இரண்டு நாட்களுக்கொரு முறை ஒட்டடை அடித்து விடுங்கள். அது குழந்தையின் கண்களில் தூசு படாமல் காக்க உதவும்.
இப்படி ஓர் அறை தனியாக இருக்கும் தாய்மார்களுக்கும், ஏன் பிறருக்கும் கூட கொஞ்சம் ஆசுவாசத்தையும் பாதுகாப்புணர்வையும் தரும்.
நீங்கள் செய்ய வேண்டியது ஒரு நாள் ஒதுக்கி பொறுமையாக அவ்வறையை தயார் செய்வது மட்டும் தான்.
மகிழ்வான குழந்தை வளர்ப்பு சாத்தியப்படட்டும்.
எழுத்து
ராஜலட்சுமி நாராயணசாமி