சக்தி வாய்ந்த ஆளுமைகள் – பகுதி 4
தமிழ் பெயர் மாதிரி இருக்கே, தமிழ் இல்லனாலும் நிச்சயம் தென்–இந்தியா தான். முக லட்சணமே நல்லா காட்டிக் கொடுக்குதே?
ஆம். வித்யா பாலன் தென்-இந்தியா தான். மும்பை-யில் பிறந்தாலும், அவரது வீட்டில் தமிழும் மலையாளமும் மாறி மாறி ஒலிக்குமாம். கேரளா மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள ஒட்டபள்ளம் தான் இவரகளது சொந்த ஊர்.
இவ்வளவு பக்கத்துல இருந்தும் ஏன் தென்–இந்திய மொழிகள்–ல நடிக்காம இந்தியிலேயே நடிக்கறாங்க? இவ்வளோ அழகை யாராவது வேண்டாம் –ன்னு சொல்வாங்களா?
ஆம், சொன்னார்கள். வித்யா பாலன் முதன் முதலில் நடிக்க இருந்தது, மலையாளத்தில், அதுவும் மோகன்லால் ஜோடியாக. சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது, அதனால் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டது. தமிழில் கதாநாயகி பாத்திரத்திற்கான முகவெட்டு இல்லை என்று, 2 படங்களில் படப்பிடிப்பு தொடங்கியும் நீக்கப்பட்டார்.
ஆச்சரியமாக இருக்கிறதா? இன்னும் நிறைய ஆச்சர்யங்கள் இந்தக் கட்டுரையில் உண்டு.
வித்யா பாலன், 1 ஜனவரி, 1979-ம் ஆண்டு மும்பையில் பி.ஆர்.பாலன் – சரஸ்வதி தம்பதியருக்கு பிறந்தார் சிறு வயதில் ஷபானா ஆஷ்மியையும் மாதுரி தீக்ஷித்-ஐயும் பார்த்து சிறந்த சினிமா நடிகை ஆக வேண்டும் என்று தீராத கனா கண்டார்.
அவரது ஆசைக்கு வீட்டிலும் எதிர்ப்பு சொல்லவில்லை, ஆனால் படிப்பையும் விடக்கூடாது என்பது தான் அவர்களுடைய ஒரே நிபந்தனை.
தன் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், ஏக்தா கபூரின் ‘ஹம் பாஞ்ச் (Hum Panch) ‘ என்னும் தொலைக்காட்சி தொடரில் ‘ராதிகா’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார், அது சூப்பர் ஹிட் ஆகி எல்லார் வீடுகளிலும் பிடித்தவளாகிவிட்டாள்.
அதைத் தொடர்ந்து மேலும் சில தொலைக்காட்சி தொடர்களுக்கு வாய்ப்புகள் வர, பிடிவாதமாக மறுத்தார்.
அவரது கனவெல்லாம் சினிமா மீதே இருந்தது.
தென்னிந்திய சினிமா வாய்ப்புக்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்படி வந்தது தான் மோகன்லால் மலையாள பட வாய்ப்பு மற்றும் அந்த 2 தமிழ் படங்கள்.
- 2001-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தில் முதலில் மீரா ஜாஸ்மின் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர், வித்யா பாலன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு, நீக்கப்பட்டார்.
- அதே வருடத்தில் ‘மனசெல்லாம்’ படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி, பின் நீக்கப்பட்டார்.
வித்யா பாலனுக்கு கதாநாயகிக்கான வசீகார முகம் இல்லை, ராசி இல்லை என்ற எண்ணம் தென்னிந்திய சினிமா உலகில் அப்பொழுது பதிந்திருந்தது.
அந்த நிராகரிப்பு அவருக்கு மிகுந்த வலியைக் கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். தான் அழகில்லை என்றும், தன்னை தானே அருவெறுப்பாக உணர்ந்ததாகவும், கண்ணாடியையே பார்க்காமல் இருந்ததாகவும் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அன்று முடிவு செய்தார், இனி தமிழ் & மலையாளம் சினிமாவிற்கு திரும்பி வரக்கூடாது என்று. தசாவதாரம் படத்தில் அசின் கதாபாத்திரத்திற்கு வாய்ப்பு வந்த போது கூட, மறுத்துவிட்டார். அந்தப் பிடிவாதம் கறைய இவ்வளவு ஆண்டுகள் ஆயிற்று, ஒரு வழியாக தமிழ் சினிமாவிற்கு ‘நேர்கொண்ட பார்வை’ மூலம் அடி எடுத்து வைத்து விட்டார்.
தென்னிந்திய சினிமா புறக்கணிப்பிற்கு பிறகு, விளம்பரப்படங்களில் கவனம் பதிக்க ஆரம்பித்தார். 90-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்து விட்டார். அதே சமயம் தன் சினிமா கனவையும் விடவில்லை, படிப்பையும் விடவில்லை. சமூகவியலில் முதுகலை முடித்திருந்தார்.
- 2003-ம் வருடம், வித்யாவின் கனவு நனவானது, ஆம்! Bhalo Theko என்ற பெங்காலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
- 2005-ம் ஆண்டு, பரிநீத்தா என்ற இந்தி படத்தில் நடித்ததன் மூலம், அவரது திறமை இந்தி பட உலகில் வேகமாக பரவியது. அந்த படத்திற்காக பிலிம்பேர், அறிமுக நடிகை விருதினை பெற்றார்.
அன்றிலிருந்து அவருக்கு ஏறுமுகம் தான். லகே ரஹோ முன்னாபாய், ஹே பேபி , பூல் பூலையா என்று வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் முன்னனி இடத்தை தக்க வைத்து கொண்டார்.
வித்யா பாலன் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும், ஒரு தனி முத்திரை பதிப்பதுடன், மக்கள் மனதில் தாக்கத்தை எற்படுத்தவும் தவறியதில்லை. ‘பா‘ திரைப்படத்தில் இளம் மகளிர் மருத்துவராகவும் அதே சமயம் முதிரா முதுமையுடைய 12 வயது மகனுக்கு தாயாகவும் நடித்தார், கவர்ச்சி கன்னி சில்க் -காக ‘தி டர்ட்டி பிக்ச்சர்’-ல் உடல் மொழியில் வசீகரித்தவர், மணிரத்தினம் இயக்கிய ‘குரு’வில், தண்டுவடம் பாதித்த பெண்ணாக சர்க்கரை நாற்காலியில் அமர்ந்து கொண்டே, அழுகை காதல் நெகிழ்ச்சி வருத்தம் என்று அவ்வளவு உணர்ச்சிகளையும் அந்த கண்களிலேயே கொட்டி வைத்தார்.
41-வயதாகும் இந்த இளமை பதுமைக்கு அழகு மட்டும் குறையவே இல்லை! நண்பராக அறிமுகமாகி கணவராகவும் நண்பராகவும் இருக்கும் சித்தார்த் கபூரும் ஒரு சினிமா தயாரிப்பாளரே.
திருமணத்திற்கு பிறகான சினிமா பயணமும் சிறப்பாக இருக்கிறதென்றால், சித்தார்த், வித்யாவின் திறமை மீது வைத்திருக்கும் மரியாதையும், அவருக்கான சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.
தற்போது கணிதமேதை ‘சகுந்தலா தேவி’-யாக கலக்கிக்கொண்டிருக்கும் வித்யா பலன்-ஐ எத்தனை முறை திரையில் பார்த்தாலும் நம்மை அறியாமல் ‘வாவ்’ சொல்லவைத்து விடுகிறார். ‘அகழாதே, நொடிகூட நகராதே’ என்று நேர்கொண்ட பார்வை படப்பாடலை அஜித் மட்டுமல்லாது நம்மையும் பாடவைத்து விடுகிறது இந்த அழகான ஆளுமை!
சிவரஞ்சனி ராஜெஷ் மென்பொருள் பொறியாளர். எழுதுவது பிடிக்கும் - புத்தகம் எழுதியதில்லை. பெரிய பெரிய பத்திரிக்கைகளில் கட்டுரைகள எழுதியதில்லை. ஒரெ ஒரு சின்ன வலைப்பூ, இணைய இதழ்களில், சில சிற்றிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். படிப்பது பிடிக்கும் - இலக்கியங்கள் அவ்வளவும் படித்ததில்லை. தமிழ் ஜாம்பவாங்களின் புத்தகங்கள் கரைத்துக் குடித்ததில்லை. ப(பி)டித்த புத்தகங்கள் பல உண்டு. எதார்த்த வாழ்க்கைகயை புத்தகங்
களில் வேறு பரிணாமத்தில் படிக்கப் பிடிக்கும். சமைக்க பிடிக்கும் - அதைவிட வகையாக சாப்பிடுவது பிடிக்கும். (கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்)
இவையெல்லாம் விட, சின்ன சின்ன சந்தொஷங்கள் மிகப் பிடிக்கும்.