திருவிழா பரிசு

Rural india,village,random,mud house,nature - free image from ...

அம்மா  கண்மணி பாப்பாவுக்கு  வாங்கிய  வளையலை  எங்கு  வைக்கிறது? சமையற்கட்டில்  பம்பரமாய்  சுழன்ற  பாமாவின்  கவனத்தை சிதறடித்தது  அவள்  மகன்  கார்த்தியின்  குரல்.

ஏழு ஆண்டுகள்  கழித்து  அண்ணன் தன்  குடும்பத்துடன்  வெளிநாட்டிலிருந்து  வருகிறான். குலதெய்வத்திற்கு  படையல்  போட்டு  நேர்த்திக்கடனை  நிறைவேற்ற  வரும்  அவனுக்கு  சிறப்பாக  வரவேற்பு   கொடுப்பதற்காக குடும்பமே  பறந்து  கொண்டிருந்தது.

வீட்டின்   தோட்டத்திலிருந்து  மருதாணி  பறித்து  வரவேண்டும், முல்லைப்பூவை  கெட்டியாக  கட்டி வைக்க வேண்டும், சுதா வீட்டிலிருந்து தூய  பசும்பால்  வாங்கி  பால்கோவா  செய்யவேண்டும் என செய்யவேண்டிய  வேலைகளை  பட்டியலிட்டாள்.

அண்ணனுக்கும்,அண்ணிக்கும்  புது   வேஷ்டி, சேலை  வாங்கிவந்தாள்.அண்ணனின்  பெண், கண்மணிக்கு  பாவாடை சட்டை  வாங்கி வைத்து  அதற்கு ஏற்றாற்போல கைக்கு  வளையல், கழுத்துக்கு  மாலை   என அனைத்தையும் பார்த்துப்பார்த்து  வாங்கினாள். ஏதேது  விட்டா  ஏரோபிளேனை எடுத்துட்டு அண்ணனை  கூப்பிட  கௌம்பிடுவ போல  எனக் கிண்டலடித்த கணவனை ரசித்தாள்  பாமா.

கண்மணி  பாப்பா பிறந்தவுடன் அண்ணன்  மனைவி,குழந்தையோடு  வெளிநாட்டிற்கு  சென்று  விட்டான்.ஒவ்வொரு  வருடமும்  விடுமுறைக்கு  ஊருக்கு  வரச்சொல்லி  கெஞ்சுவாள்  பாமா ஆனால் அண்ணன் ஏதாவது  சொல்லி  தட்டிக்  கழித்து  விடுவான்.சென்ற  வருடம்  கண்மணிக்கு  உடம்பு  சரியில்லை  அப்பொழுது  அண்ணி  குலதெய்வத்திற்கு படையல் போடுவதாய்  வேண்டிக்கொண்டாள் எனவே  இந்த திருவிழாவிற்கு ஊருக்கு வரப்போகிறான் அண்ணன். எப்படியோ அண்ணனை  நேரில் பார்க்கப்போகிறேன் அதுபோதும் எனக்கு.

மறுநாள்  காலை.ஊரே  பரபரப்பாய்  இருந்தது.ஒருபக்கம்  திருவிழா கொண்டாட்டம் மற்றொரு பக்கம் அண்ணனின் வருகை என பாமாவை  கையில்  பிடிக்கமுடியவில்லை.

கணவனை காலை ஐந்து  மணிக்கே தட்டி எழுப்பி விட்டாள் பாமா. ஆப்பமும், கடலைக்கறியும் சமையலறைக்கு  மேலும் வாசம் சேர்த்தன.அண்ணன் குடும்பத்திற்கென  தனி அறை மாடியில்  ஒதுக்கப்பட்டது.அதை நன்றாக பெருக்கி,மொழுகினாள்.

அம்மா  எந்த துணி போட்டுக்கிறது என்றான்  கார்த்தி.

உன் பிறந்த நாளுக்கு வாங்கின பேண்ட்,சட்டை போட்டுக்கோ தம்பி

ஆப்பமா,போன வாரம்தானே செஞ்சே.சப்பாத்தி பண்ணமாட்டியா?

மாமாவிற்கு  ஆப்பம் ரொம்ப பிடிக்கும் கார்த்தி.நம்ம வீட்டிற்கு  வருபவர்களை  நாம்  நன்றாக உபசரிக்க வேண்டும் இல்லையா !

மாமா   எப்பம்மா  வருவாங்க ?

பத்து மணிக்கு.

சீக்கிரம் நீயும் புடவை மாத்திக்கோ. நான் உனக்கு  புடவை எடுத்துத்தரேன் என்றான் கார்த்தி.

அம்மா மாமா வந்துட்டாங்க என்று கார் சத்தம் கேட்டு வாசல் நோக்கி ஆசையாய் ஓடினான் கார்த்தி பின்பு மாமா சத்தியனை கட்டிப்பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தான் கார்த்தி. கண்மணியை  தன் இடுப்பிலிருந்து  கீழே   விடவில்லை பாமா. அத்தையிடம் ஆசையாய்  ஒட்டிக்கொண்டாள் கண்மணி.

அண்ணன் வெளிநாட்டிலிருந்து

 கொண்டு வந்துள்ள பரிசுப் பொருட்கள் ஒவ்வொன்றாக ஆசையாய் பார்த்துக் கொண்டிருந்தாள் பாமா.

மாமாவின்  மடியில்  கார்த்தியும்,அத்தையின்  மடியில்  கண்மணியும் உட்கார்ந்திருந்தனர்.

சத்யன்  கடைசியாய்  ஒரு  பெட்டியை  திறந்தான்.அதில் சிறிதும் பெரிதுமாய்  நிறைய மது பாட்டில்கள் இருந்தன.

என்ன அண்ணா இது? நிறைய பாட்டில்கள் இருக்கிறது.

ரொம்ப நாள் கழிச்சு வரேன். ஊரில் இருப்பவங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வரலை அதான் திருவிழா முடிந்ததும் எல்லாருக்கும் கொடுக்கலாமுன்னு வாங்கி வந்து இருக்கேன்.

அண்ணா, ஏன் இப்படி பண்ணின?

நான்  என்ன பண்ணினேன்.

உன்னை தான் இந்த ஊர்ல இருக்குற நிறைய பேர் வழிகாட்டியாய் எடுத்துக் கிட்டு நல்லா படிச்சு பெரிய ஆளாய் மாறிகிட்டு இருக்காங்க.

அதனால் என்ன? மது குடிப்பது ஒன்றும் தவறு இல்லையே அதுவும் கொஞ்சமாய் குடிப்பது பெரிய பாவமா என்ன?

எங்க  ஊர்   ஆண்களில் பலபேர்  மதுக்கடையையே சொந்த வீடாக்கி அங்கேயே குடித்தனம் பண்றாங்க. அவங்க மனைவிகள் படும் பாடு என்னன்னு உனக்கு தெரியாது அண்ணா.

திருவிழா மாதிரியான நாட்களில்தான் அவங்க மனைவி குழந்தைகளுடன்   இருப்பாங்க, இப்போது நீ கொடுக்கப்போற இந்த திருவிழா பரிசு அதற்கும் முற்றுப் புள்ளி வைக்கப்போகிறது. இந்த ஊர் பெண்கள் எல்லோரும் கலெக்டரிடம்  மனு கொடுத்து இந்த இரண்டு நாட்கள் மதுக்கடைகளை நமது ஊரில் மூடுவதற்கு அனுமதி வாங்கியிருக்கோம்.

தயவுசெய்து அந்த நிம்மதியை கெடுத்து விடாதே அண்ணா.

உன்னால் முடிந்தால் நீ பிறந்த ஊருக்கு ஏதாவது நல்லது செய் இல்லையென்றாலும் பரவாயில்லை கெடுதல் மட்டும் செய்யாதே என்ற தங்கையின் வார்த்தையில் இருந்த நியாயம் கருதி பாட்டில்களை மறுபடியும் பெட்டியில் வைத்து பூட்டினான் சத்யன்.

கிருத்திகா அஸ்வின்

image credit: needpix.com

Back To Top