அவள் மனம் எப்படி துடித்திருக்கும் பத்து மாதம் சுமந்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் குழந்தை செல்வம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்று அறிந்த நொடி. அச்செயலை அரங்கேற்றியவர்களைத் தவிர மற்ற அனைவருக்குள்ளும் எரியத் தொடங்கும் கோபத்தீ, சில நாட்களிலேயே அணையத் தொடங்கியது மறுபடியும் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் தனி பிரச்சனையாக மாறுகிறது இதற்கு நாம் கூறும் காரணம் “அட போப்பா எனக்கே ஆயிரம் பிரச்சனை, வந்து போராட முடியுமா இதுக்கெல்லாம் என்று” சரி ஏற்கிறேன்.

இதற்கான தீர்வு என்ன என்பதையாவது யோசித்ததுண்டா? தீர்வு என்பது அந்த மிருகங்களுக்கு கிடைக்கப்போகும் தண்டனை சார்ந்தது இல்லை இனி இந்த உலகில் அப்படிப்பட்ட வன்புணர்வு கொடுமைகள் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் தான். அவனுக்கு மரண தண்டனை அளித்தால் மற்றொருவன் அச்செயலை செய்ய அஞ்சுவான் அதெல்லாம் இருக்கட்டும் ஒரு புறம். ஆணிவேரை சற்று உற்று நோக்குவோம்.

இந்த உலகில் எங்கு என்ன பிரச்சினை என்றாலும் ஒரு விவரம் அறியாமல் கூட பலர் கூறுவது, “அவள் செய்தது தான் தவறு” என்று அப்படிப்பட்ட மேதைகளுக்கு என் கேள்வி, தோழி நிர்பயா உடுத்திய மேன்னாட்டு உடையினால் தான் அன்று டெல்லியில் அவளுக்கு அப்படிப்பட்ட கொடுமை நடந்தது என்றால் சென்னையில் சிறுமி சுஹாசினியும், அறந்தாங்கி ஜெயப்பிரியாவும் அப்படி என்ன உடை அணிந்திருக்கக்கூடும். சிலர் மனக்கட்டுபாடின்றி பெண்களின் நடை, உடை, இது, அது என்று தங்கள் சபலத்திற்கு காரணம் எத்தனை வேண்டுமானாலும் கூறமுடியும். தமிழில் அழகான ஒரு வாக்கியம் உண்டு அடுத்தவரை குறை கூறும் முன்பு நீ ஒழுங்காக இருக்கிறாய் என்று சற்று பார்.

ஒரு ஐந்து வயது குழந்தை தொலைக்காட்சியில் சேனிடரி நாப்கின் விளம்பரத்தை பார்த்து அம்மா இது என்ன என்று கேட்கும் போது உடனே ,”சும்மாயிரு உனக்கு அதெல்லாம் தேவையில்லாதது” என்று அடக்குகிறோம். அந்த கேள்விக்கு அவன் வளர்ந்ததும் இணையத்திலேயோ அல்லது நண்பர்கள் வாயிலாகவோ பதிலை கண்டறிகிறான். அதை கண்டறியும் வரை அவன் மனதில் நிச்சயமாக அதை சார்ந்த ஒரு தேடல் இருந்து கொண்டுதான் இருக்கும். அதற்காக குழந்தையிடம் நிச்சயமாக மாதவிடாய் சார்புகளை விவரிக்க முடியாது ஆனால் அவர்களின் கேள்விகளை அப்படியே விட்டுவிடாமல் ஏதேனும் ஒன்று கூறி அந்த ஆவலை பூர்த்தி செய்தால் போதுமானது. சரி அப்படி என்ன மாதவிடாய் என்பது வெளியே பேச முடியாத அளவுக்கு வெட்கப்படும் செயலா? பிரசவத்திலும் மாதவிடாயிலும் நான் படும் நரக வேதனையை துளி கூட அறியாததன் விளைவே இன்று நாய்களும் நரிகளும் நம் பிள்ளைகளை வேட்டையாடி செல்கிறது.

சூழ்நிலைகள் மாறி இருக்கிறது குழந்தைகளின் மனது கலங்கமாக்கப்படுகிறது, ஆமாம் காரணம் இணையம் தான். தெரியாததை தேடு என்று இணையத்தை கொடுத்தால் அவனுக்குத் தேவை இல்லாததை தேடுகிறான் தனிமையில். அப்படி வந்த தேடலின் முடிவுகள் மனதில் பதிந்திருக்க ஒருநாள் மிருகம் நிச்சயம் வெளிவரும். இதற்கு தீர்வுதான் என்ன என்றால் “Sex Education ” எனக் கூறப்படும் காம சாஸ்திரத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும். மனித வாழ்வில் பூப்படைதல் என்பது 13லிருந்து 15 வயதுக்குள் நிகழும் ஒரு நிகழ்வு இந்த வயதில்தான் அவர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்களின் பால் கேள்விகள் ஆயிரம் பிறக்கும். அப்போது பள்ளிகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட தகவல்கள் கொடுக்கப்படும் பொழுது மனதின் வன்புணர்வுகள் குறையும்.
நாம் அனைவருமே புரிந்து கொள்ள வேண்டிய சில :
இப்படியான குற்றங்களுக்கு சட்டம் என்ற ஒன்று இருந்தாலும், எந்த ஒரு மாற்றமும் நம்மிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். நன்கு படித்த ஒருவர் சிறிதும் மனசாட்சியின்றி பாலியல் வன்கொடுமை செய்கிறார் என்றால் கல்வியின் பயன் என்ன? குழந்தைகள் வேகமாக இருக்கும் இச்சூழலில் பெற்றவர்கள் விவேகமாக இருப்பது அவசியம்.

வயது வரம்பில்லை, அழகு கூட அப்பாற்பட்டது பெண்ணாக இருந்தால் போதுமானது தம் சபலத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று எத்தனையோ பெரும் சமூக வலைத்தளத்தில் வட்டமிடுகின்றனர் அப்படிப்பட்ட மக்களிடம் அன்பு என்று நம்பி வாழ்க்கையை தொலைத்த பெண்கள் இங்கு எத்தனை?
உருவம் சார்ந்த கேலிகளை இன்றுடன் நிறுத்துவோமாக.
நாம் நம் பிள்ளைகளுக்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டுமே தவிர தவிறிழைப்பதற்கு எடுத்துக்காட்டாய் இல்லை. சொர்க்கத்திற்கு தேவதைகளால் சென்றடைந்த ஹாசனியையும் , ஜெயப்பிரியாவையும், பூமியில் நாம் மறுபடியும் இழக்காமல் இருப்பதற்கு நிச்சயம் இனியொரு விதி செய்தே தீரவேண்டும்.
நன்றி!

பிரியதர்ஷினி கோபிகிருஷ்ணன்.