வாரக்கடைசி என்பதால், ஒரு சோம்பேறித்தனத்துடன் விடிந்தது காலைப் பொழுது. தினசரி ரொட்டீனுக்குள் வராத வேலைகள்….. “ஆங்….பாத்துக்கலாம்….” என்ற நினைப்பு. சூடான காபியுடன்….தினசரி பேப்பரைப் புரட்டும்போது….., மனம் நெருடலாகவே இருந்தது.
வழக்கம் போல , உலக நிலவரம், ஊரடங்கு, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, நல்லபடியாக வீட்டுக்குப் போனவர்களின் எண்ணிக்கை, கொரோனாவால் பரிதாபகரமாக பலியானவர்களின் எண்ணிக்கை…..இவை தவிர, அரசு எவ்வளவுதான் அழுத்திச் சொன்னாலும், கெஞ்சிக்கேட்டாலும்…..
”எங்கேயோ மழை பெய்கிறது…..? எனக்கென்ன….? ” என்ற ரேஞ்சில் எதற்கும் அலட்டிக்கொள்ளாமல், இந்த உலக நடப்புக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல முகக்கவசம் அணியாத வேற்றுலக ஏலியன்கள் …., சமூக இடைவெளி என்றால்…”கிலோ என்ன விலை…?” என்று கேட்கும் வகையில் இருக்கும் இன்னும் சில ஏலியன்கள் …இவை தவிர….இவர்கள் ஓட்டி வந்த பிடிபட்ட விண்கலங்கள் (இரு சக்கர , நான்கு சக்கர வாகனங்கள்) இடம் பெற்றிருந்தன.
இதை அறியாமை என்று கொள்வதைவிட தெனாவட்டு மற்றும் சுயநலம் என்ற வகையில்தான் கொள்ளவேண்டும்.
“என்னோட உடம்புக்கு எதிர்ப்புசக்தி அதிகம் தெரியுமா….? என்னல்லாம் கொரோனா ஒண்ணும் செய்யமுடியாது…..நாங்கல்லாம் அப்பவே அப்படி…., இப்ப கேக்கவா வேணும்…..? “ என்ற வகையில் முட்டாள்தனமான தெனாவட்டோடு அலைபவர்கள்…..எத்தனை சுயநலவாதிகள்….?
இவர்களைச் சுற்றி இருக்கும் எத்தனையோ பேருக்கு மிகக்குறைந்த எதிர்ப்புசக்தி இருக்கலாம்…..அல்லது எதிர்ப்புசக்தியே இல்லாமலும் இருக்கலாம்…..ஒவ்வொருவரும் உடலுக்கு மேலே அணிந்திருக்கும் உடைகள்…..அவர்களின் உடல்நிலையின் உண்மை நிலையை உரைக்காது அல்லவா….? எத்தனையோ பாதிப்புக்கு ஆளானவர்கள் …..தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியே வந்திருக்கலாம். அவர்களுக்கு இப்பேற்பட்ட சூரர்களால் ஆபத்து வரும் என்பது இந்த ஏலியன்களுக்குப் புரிவதில்லை.
கை கழுவுவதோ, முகக்கவசம் அணிவதோ, சமூக இடைவெளியோ…அல்லது ஊரடங்கோ….இவையெல்லாம் யாருக்காக….?
இதோ….அதோ …என்று நினைத்தது போக, இப்போது பாதுகாப்புடன் இருப்பது, பல் துலக்கி ….காபி குடிப்பது போன்றதாக உள்ளது. அதாவது, இதுவும் அன்றாட கடமையாக கருத்தப்படவேண்டும்.
“படியில் பயணம் நொடியில் மரணம்” என்ற ஸ்லோகன் முன்பெல்லாம் பேருந்துகளில் எழுதபட்டிருக்கும். அது போலத்தான் இதுவும்.
கொரோனா யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. போத்தீஸ் உரிமையாளராக இருந்தாலும் ரோட்டோரம் வாழ்பவராக இருந்தாலும் ஒரே ஜோதிதான். அதற்காக, “ஐயோ…..எனக்கு வந்துடுமோ….?” என்ற அநாவசியமான பயம் தேவை இல்லை. இப்போது எல்லோருக்கும் அவசியமான தேவை சுயகட்டுப்பாடு.
பல பேருக்கு நான்கு மாதம் முன்பு, இத்தனை வேலைகளை நாமே செய்யமுடியுமா…? வீக் எண்ட் இப்படி வீட்டோடு அடைந்து கிடக்க முடியுமா…? ரெஸ்டாரண்ட், மால் போன்ற சொர்கபுரிகளுக்கு போகாமல் இருக்க முடியுமா…?என்பது பல “முடியுமா….”க்கள் மனதில் இருந்திருக்கலாம். ஆனால், அத்தனையும் சாத்தியமானது.
மனம் ஒன்றுதான் அத்தனையையும் ஆட்டுவிக்கும் மந்திரக்கோல். மனமிருந்தால் எல்லாமே நடக்கும் . எல்லோரும் அவசியம் இல்லாமல் வெளியில் வருவதை அடியோடு கைவிடவேண்டும். ஏன் நாம் கொரொனாவுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும்…? அது என்ன …நமக்கு மாமனா மச்சானா…?
ஹெல்மெட்டை பெட்ரோல் டேங்க் மேல் வைத்துக்கொண்டு பெருமையாகப் போகின்ன்றவர்கள்….ரோட்டு முனையில் போலீசைப் பார்த்ததும் போட்டுக்கொள்வார்கள். இப்போது, சில இடங்களில் மாஸ்க் நிலமையும் கூட அப்படித்தான் இருக்கிறது.
“ஏங்க பெட்ரோல் டேங்க்குக்கா ஹெல்மெட்டு….? “ என்று கேட்டால்,
“தலை வேர்க்கிறது, முடி கொட்டுகிறது, கழுத்து வலிக்கிறது……” என்று சொல்பவர்களில் பலர், நரகவாசலின் கதவத்தட்டியிருக்கிறார்கள் (அஜாக்கிரதையால் குடும்பத்தை தவிக்கவிட்டவர்களுக்கு சொர்க்கம் ஒரு கேடா…….?) அது போல, இப்போது
“ஏங்க மாஸ்க்கை பாக்கெட்டில வெச்சிருக்கீங்க….?” என்று கேட்டால்
“மூச்சு முட்டுகிறது, மயக்கம் வருகிறது…. வாட்சப்பில் பார்த்தேன்….ரொம்ப நேரம் போடக்கூடாதாம் …” என்று சொல்பவர்கள் வெளியில் வராமலேயே இருக்கலாம். மாஸ்க் போலீசுக்காக அல்ல….. நமக்காக.
வாழ்க்கை முழுவதும் நடை பழக விரும்புபவர்கள்….இப்போது ரோட்டில் நடைப்பயிற்சி செய்து கடமையுணர்ச்சியைக் காட்டவேண்டாம். ஊரடங்கு என்பதும் நமக்காக. பல ஆண்டுகள் நடப்பதற்காக…., சில நாட்கள் நடக்காமல் இருப்பதில் தவறில்லை.
விளக்கில் விழும் விட்டில் பூச்சி போல அவசரமாக தேடிப்போய் ஆபத்தை விலை கொடுத்து நாம் வாங்கிவிடக்கூடாதே என்பதற்காகத்தான் இத்தனை வழிமுறைகளும். பொறுப்புள்ள குடிமக்களாக, எல்லா வழிமுறைகளையும் மதித்து நடப்போம்…..நமக்காகவும்….நம்மை சேர்ந்தவர்களுக்காகவும்….
முகக்கவசம் அணிவோம்…..சமூக இடைவெளியைக் கடைபிடிப்போம்….அடிக்கடி கை கழுவுவோம்…கபசுரக்குடிநீரைப் பருகுவோம்… தேவையில்லாமல் வெளியில் சுற்றாமல் இருப்போம்….மன உறுதியைக் கைவிடாமல் வாழ்வோம்….எல்லாவகையிலும் பொறுப்புடன் இருப்போம்…..கொரோனாவை வெல்வோம்…
நிச்சயம் இதுவும் கடந்து போகும்….
இனிய பகிர்தலுடன்,
உங்கள் மாலா ரமேஷ் , சென்னை