
வானத்தில் கார்மேகம் சூழ, வருண பகவானின் வருகைக்காக பூமி காத்திருந்த சமயம் , இரு மேகத்தை பிளந்து ஒரு இடி சத்தம் டமால் என்றதும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நான் வெளியே காய வைத்திருந்த துணிகளை எடுக்க விரைந்தேன். கதவைத் திறந்ததும் சில்லென்று காற்று என் மேல் மோத, அழகாய் காற்றுக்கு ஏற்றபடி மரங்கள் அசைவதைக் கண்டு அப்படியே கதவின் ஓரம் சாய்ந்து நின்றேன்.இயல்பாகவே எண்ண அலைகள் மிகவும் வேகமானது அல்லவா, என்னையும் ஒரு யோசனை ஆட்க்கொண்டது.
என்ன வாழ்க்கை இது ? இப்படியாக இறுதி வரை சென்றுவிடுமோ?
அடுத்தவர்களின் கருத்துக்களுக்கு தலையசைக்கும் வரை நாம் எப்பொழுதுமே அவர்களுக்கு பிரியமானவர்களாய் தான் இருக்கிறோம். சுயமரியாதையை உயிர் எனக் கருதி வளர்ந்தவர், தவறுக்கு தலையசைக்க மறுப்பதன் விளைவும், உடன்படியாமையுமே அனைவரின் வெறுப்புக்கு காரணமாய் அமைகிறது. எதை வைத்து மனிதனை மதிக்கிறார்கள், பணத்தை வைத்து? இன்று அது ஒருவர் இடத்தில், நாளை அது மற்றொருவரிடத்தில். குணத்தை வைத்து என்றால் நிச்சயம் அதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும், போலியான உலகில் உண்மையான அன்பின்பால் பழகுவது தவறுதானே!
பொதுவாகவே என் சமூகப் பதிவுகள் போராட்ட குணம் பற்றியும் , நேர்மறை கருத்துக்கள் சம்மந்தமாகவே இருக்கும் அதற்கு காரணம் என்னை போல் வேறொருவர் வருந்துவாராயின் என் பதிவு அவர்களை தேற்றட்டுமென்று தான்.
ஆஹா! கடல் எத்தனை அழகு என்று வர்ணித்து முடிக்கும் முன் வாழ்க்கை சக்கரம் என்னை கடலுக்குள் தள்ளியது. கடலை தூரம் நின்று பார்த்த எனக்கு நீச்சல் அவ்வளவு பரிச்சயமில்லை, மற்றவர்கள் நீந்துவதை பார்த்து நானும் கைகால்களை வேகமாக அசைத்தேன், என் இடதுபுறம் நீந்திக் கொண்டிருந்த என் தந்தை திடீரென மாயமானதை உணர்ந்ததும்,வலதுபுறம் இருக்கும் என் தாயின் கைகளை இறுகப் பற்றி நீச்சலை தொடர்ந்தேன் அப்பொழுது ஒரு சிறிய அழகிய மீன் எங்கள் பயணத்தில் இணைந்தது, அச்சமயம் அலைகளின் வேகத்தால் தடுமாறி என் தாயும் கையை விட்டு மறைந்து போனார், சரி எப்படியானாலும் இந்த சிறிய மீனை மறுகரை சேர்த்தே ஆகவேண்டும் என்று முன்னேறியபொழுது ஒரு தனிமையை உணர்ந்தேன், தனிமை மிகவும் அழகானது சமயத்தில் ஆபத்தானதும் கூட தான்.

தனியே நீந்துகிறாள் பொரி வைத்தால் என்ன பொல்லாங்கு வலைவீசி அவளை திசை குலைய செய்தால் தான் என்ன என்று பல மீன்கள் வட்டமிட்டன, ஒரு நிமிடம் மூச்சு முட்டியது, யாருக்காக இந்த போராட்டம் நாமும் மூழ்கிவிடலாம் என்று எண்ணிய நொடி அந்த சிறிய மீன் அழகாய் நீந்தி இன்னும் என்னை இறுகப் பற்றியது, நெஞ்சில் நெறுஞ்சி முள் தைத்தது. என்ன ஒரு முட்டாள்தனமான முடிவு.
நான் ஏன் வாழக்கூடாது என் வாழ்வியல் நியதி மிகவும் எளிமையானது, எனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ்கிறேன், அடுத்தவர்களை பார்த்து பொறாமை குணம் கொண்டதும் இல்லை, என்னை பார்த்து மற்றவர் என்ன நினைப்பார் என்று நினைத்து அஞ்சியதுமில்லை.நன்றியையும் மன்னிப்பையும் மனம் விட்டு கூறுகிறேன் எப்பொழுதுமே. சரியோ தவறோ நீச்சல் நானாகவே கற்றுக்கொண்டேன் நீச்சலின் போது பல நேரங்களில் நீர் அடுத்தவர்களின் மீது பீச்சி அடிக்கப்பட்டதை உணர்ந்தேன் மனதால் வருந்திக்கொண்டேன்.
என்னைச் சுற்றி மூழ்கும் வரை காத்திருந்து, நான் அப்போதே நினைத்தேன் என்று கூறுபவர்களிடம் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்கிறேன் மாறாய், அடியை பார்த்து வை என்று முன்னெச்சரிக்கை செய்பவர்களை மதிக்கிறேன்.
வெளியில் சிரிக்கும் என்னை நோக்கி இந்த சமூகம் வைக்கும் ஒரு கருத்து, அவளுக்கெல்லாம் என்ன பிரச்சினை இருக்கக்கூடும், யார் கேட்கப் போகிறார்கள் என்று நண்பர்களே! யாரும் என்ன என்று கேட்க கூட இல்லாததன் வலியை அனுபவித்ததுண்டா ?தூக்கமில்லாமல் குழந்தையை தூங்க வைத்த பின் கண்ணீரால் தலையணையை நினைத்த நாட்கள் ஏராளம். அன்பிற்காக ஏங்கி வாழ்க்கையில் வெறுமையுணர்வது கொடுமை யன்றோ? என்னால் முடிந்தவரை அனைவரையும் புன்னகைக்கச்செய்வேன் இல்லையா புண்படுத்தாமலும், புண்படாமலும் விலகி என் வேலையை தொடர்வேன்.
இதை அகந்தை, ஆணவம் என்கிறார்கள் இதற்கெல்லாம் பதில் கூறி முடித்து எப்போது நான் நீந்தி கரை சேர்வது? ஆகவே இழந்ததை எண்ணி இதயத்தை பலவீனமாக்காமல் இருப்பதை பலமாய் கொண்டு நீந்துகிறேன் இன்னும் கரைசேர மிகத் தொலைவு செல்ல வேண்டும் ஆனால் எதிர்நீச்சல் நன்றாக போடக் கற்றுக் கொண்டேன். பின்புறத்திலிருந்து ஒரு பிஞ்சுக் கை என்னை அசைத்து அம்மா என்றது, என்ன வாழ்க்கை என்ற யோசனைக்கு பதிலாய் இதுதானே வாழ்க்கை என்றுணர்ந்து அவனை அள்ளி அணைத்துக்கொண்டேன்.
எத்தனையோ சூழ்நிலைகளில் நம் வாழ்க்கையை கைவிட நினைத்த போதெல்லாம் இந்த வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் அர்த்தமாகவும் இருக்கும் நமது பிள்ளைகள் வாழ்வின் அறிய மீன்கள் தானே அவர்களுக்கு பாசத்திற்கு இணையாக சுயமரியாதையும் தனிமனித ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டியது நமது கடமை மட்டும் இல்லை அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றும் தான்

நான்,
பிரியதர்ஷினி கோபிகிருஷ்ணன்