விலைமகள்

0
936

வேறு வழி இல்லை
வெறுத்து போன வாழ்க்கையில்,

தினமும் வெந்து சாகிறேன்
என் சமயலறையில் அல்ல
என் மெத்தை அறையில்..!

கணவனுக்காய் கனவு கண்டுவைத்த
அதே மலர் மெத்தையில்
மலடாகிக்கொண்டிருக்கிறது
என் உடலும் உள்ளமும்…!

மானம் காத்து சம்பாதித்த
சிலநூறு ரூபாயில்…
நிறைந்தது என் ஒரு வயிறு மட்டுமே…

குடும்ப வயிறை நிறைக்க
குறுக்கு வழியே  சிறந்ததென்று..
தோளில் தோல் பை மாட்டி…
தோள்களை பின்னிழுத்து..
மார்பை முன்னிறுத்தி..
மானம்கெட்டு நான் நடந்த
அந்த நாளில்…
நான் செத்து போனேன்
என் குடும்பம் வாழ..!

சிறகடித்து பறக்க எண்ணியவள்
சிப்பிக்குள் முத்தாய்,
பொத்தி வைத்த
என் தேகத்தை விற்க துவங்கினேன்..
வற்றாத என் தேகம்
இன்று வரிப்புலியாக..!

வியப்பானதுதான் நம் நாடு
மானம் காத்தால் சிலநூறு
மானம் விற்றால் பல ஆயிரம்..!

மார்பை மறைத்த..
என் முந்தானியில்
விந்துக்கறை இருந்தாலும்..
என்ன இது என்று கேட்க்கும்
துணிவில்லை என் அம்மாவிற்கு..!

மகளின் மானம் போனால் என்ன..?
மது இருந்தால் போதும்
என் தந்தைக்கு..!

ஒவ்வொரு மாதமும்
அந்த மூன்று நாள் மட்டுமே
விடுமுறை எனக்கு…

என்னை போன்ற
பிறவிகளுக்காகதான் பாவம் பார்த்து
கடவுள் கொடுத்திருக்கிறான்
இந்த மூன்று நாட்களை..
எங்கள் பிறப்புறுப்பு  ஓய்வெடுக்க…!

மனம் திறந்து பேசினாலும்
மார்பை பார்க்கும்  இந்த
மன்மதன்கள்…
மனைவியில் இல்லாத
எதை கண்டுவிட்டார்கள்..என்னிடம்..??

என் தொடை இடுக்கில்
தொலைந்துபோன எந்த
ஆண்மகனுக்கும்
தெரியவில்லை…
மனைவியை தவிர்த்து
வேறு மெத்தை
ஏறுபவன்..
” ஆண் ” அல்ல என்பது..!!!

– இளையபாரதி

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments