என் ப்ரியமானவளே

0
268

Indian Ladies paintings

இன்னும் அவள்

என்னோடு இருக்கின்றாள்..

 

இறை தந்த வரமாய்

என் கரம் பற்றி

அன்பின் பேரொளியாய்

என் இல் வந்தவள்

என்னுள் வந்தவள்…

 

சிற்றின்பத்தை

  பேரின்பமாய் உணர்ந்த

தருணங்களில்

என்னுணர்வுகளை  தன்னுடலில் பூசிக்கொண்டவள்

 

என்னுயிரை

தன்னுயிரில் வாங்கி

உரு தந்து

உலகிற்கு தந்தவள்

இருப்பினும்

எனையே தன்  முதல் மகவாய்

ஏற்றுக் கொண்டவள்..

 

தன் கனவுகளை

  புலம் பெயர்த்து

என் கடமைகளில்

களிப்புற்றவள்..

பேணி வளர்த்த

பிள்ளைகள்

பெருவானில் சிறகடிக்க

தன் இறகுகள்

உதிர்ந்து நின்றவள்..

 

மகவுகள் ஈன்ற

மகவுகளில்

என் முகம் பார்த்தே

நிறைந்து நின்றவள்..

 

காலப்பெருவெள்ளம்

விதியின் அலைகளால்

தனை இழுத்தபோது

ஒரு விடியல் பொழுதில்

விடியா வானை

எனக்குத் தந்து

இமைக்கா விழிகளோடு

உறங்கிப் போனவள்..

 

முதுமையும்  தனிமையும்

எனை தகிக்க

தடுமாறும்  வேளையில்

அருவமாய் நிறைந்து

தழுவிக் கொள்கிறாள்..

 

தோட்டத்து பூக்களின்

அழகிலும்

கூவும் குயிலின்

குரலிலும்

எனை சுற்றி

ரீங்கரிக்கும்

கொலுசொலியிலும்

அவளே நிறைந்திருக்கிறாள்

 

இனியும் யார்

சொல்லக்கூடும்

நான் தனியாக

இருக்கிறேன் என்று..

 

இன்னும் அவள்

என்னோடு இருக்கின்றாள்..

- ப்ரியா பிரபு