நான் வரைந்த தூரிகை 2

10
216

Group of kids friends arm around sitting together Free Photo

அந்த ரூமின் ஒரு பக்கம் சின்சானும், டோராவும் தலை கீழாக தொங்கிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் டாமும் ஜெர்ரியும் கை வேறு, கால் வேறாக விழி பிதுங்கி நிற்க, ரூம் முழுக்க கிரயான்சும், பேப்பரும் இறைந்து கிடக்க,சுவர்களில் வரைந்திருந்த வண்ண சித்திரங்கள் அனைத்தும் சிரித்துக் கொண்டிருக்க, தலையணையில் இருந்த பஞ்சு அனைத்தையும் பறக்க விட்டு கட்டிலில் குதித்துக் கொண்டிருந்தாள் அதிதி.

“ஏய்!குட்டி பிசாசு! இறங்கு கீழ, இறங்குன்னு சொல்றேன்ல…..நிப்பாட்டு…..ஏய்….குரங்கு….இப்ப நிப்பாட்ட போறியா இல்லியா?இப்ப நீ நிறுத்தல, நான் உங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன்”

“சொல்லிக்கோங்க.எனக்கு என்ன?வெவ்வெவேவே……”அழகு காட்டிவிட்டு மேலும் பஞ்சுகளை பிய்த்து வீசினாள் அதிதி.

“ஏய்!உன்னை….” அந்த கேர் டேக்கர் பல்லைக் கடித்துக் கொண்டு திரும்பி, ஹாலுக்கு ஓடி வந்து,”சார்…சார்…”என்று கத்தினாள்.

சத்தம் கேட்டு மேலிருந்து படிகளில் விரைந்து வந்தான் ஆதர்ஷ்.

ஆதர்ஷ் – தன் முப்பதுகளை நெருங்கிக் கொண்டிருக்கும், கம்பீரமான,திறமையான தொழிலதிபர். அதிதியின் தந்தை.சில சமயங்களில் பெயர் ஒரு மனிதனை தீர்மானிக்கிறது என்பதை நிரூபிப்பது போல், ஆதர்ஷ் என்ற அவன் பெயரில் இருக்கும் நேர்த்தி,சீர்மை அவன் செயல்களிலும் பிரதிபலிக்கும்.

மகள் என்று வந்துவிட்டால், தந்தையே தாயாக மாறுவான், தாயாகிய சேய் அவளை சுமப்பதற்கு. மற்றவர்களிடத்தில் திருக்குறள் போல நறுக்கென்று இரு வரிகளோ,இரு வார்த்தைகளோ தான் பேசுவான்.ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.

“என்னாச்சு?எதுக்கு இந்த சத்தம்?”

“உங்க பொண்ணு என்ன பண்றா தெரியுமா?சொன்ன பேச்சை கேக்கவே மாட்டிக்கிறா?”

“ஏன்?என்ன பண்ணினா?”

“நீங்களே உள்ளே போய் பாருங்க, அந்த அட்டகாசத்தை”

ஆதர்ஷ் உள்ளே சென்று பார்க்கும்போது அதிதி திரும்பி நின்றுக் கொண்டு ஃபேன்,கப்போர்ட் எல்லாவற்றுக்கும் பஞ்சுகளை பரிசாக வழங்கிக் கொண்டிருந்தாள்.

“அம்மு”

அவள் ஒரு நிமிடம் நின்றுவிட்டு மறுபடியும் பரிசை வழங்க ஆரம்பித்தாள்.

“அம்மு.ஸ்டாச்சுயு”

அவள் அப்படியே உறைந்து நின்று விட்டாள்.அவன் மெதுவாக அறையில் சிதறிக் கிடந்த பொருட்களை ஒழுங்குப்படுத்த ஆரம்பித்துவிட்டான்.

“பாப்ஸ்.என்னை ரிலீஸ் பண்ணு”

“நோ….நோ….நீ பண்ணுன தப்புக்கு உனக்கு பனிஷ்மெண்ட்.அப்படியே நில்லு”

“சாரி பாப்ஸ்.அம்மு பாவம் தானே, ரிலீஸ் பண்ணு.ப்ளீஸ்….ப்ளீஸ்….”

வழக்கம்போல அவள் ப்ளீஸில் கரைந்தவன்,”ரிலீஸ்”என்றான்.

அவள் உடனே குதித்துக் கொண்டு வந்து அவன் கழுத்தைக் கட்டி கொண்டு,”குட் மார்னிங் பாப்ஸ்! என் செல்ல அப்பா!என் புஜ்ஜு அப்பா!”

“இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம். ஒழுங்கா சொல்லு, எதுக்கு ரூமை இப்படி குப்பையாக்கி வச்சிருக்கிற?”

“அதை நீ அந்த ஆன்டி கிட்டே கேளு பாப்ஸ். நீ என்ன சொல்லிருக்கிற பாப்ஸ்?எனக்கு எப்ப வரையணும்னு தோணுனாலும் வரையலாம்,எங்கே வேணும்னாலும் வரையலாம்னு சொன்னியா இல்லியா பாப்ஸ்?”

“ஆமாங்க மேடம். அதுக்கு என்ன இப்போ?”

“எனக்கு இன்னிக்கு திடீருன்னு ஒரு ஐடியா. என்ன தெரியுமா?அது…..ஒரு பிக்  ஹவுஸ் இருக்கு,அதுக்கு பக்கத்துல ஒரு நாய்க்குட்டி, அது அம்மாவோட விளையாடுது.இதை சுவருல அப்படியே வரைஞ்சிட்டு இருந்தேனா,அப்போ அந்த ஆன்டி வந்து,சுவருல வரையாதே,ஸ்கூலுக்கு லேட் ஆயிருச்சுன்னு ஒரே கத்து.எனக்கு கோவம் வந்துச்சா. அதான் இப்படி பண்ணினேன்”

“ஹ்ம்ம்….குட்டி பாப்பாவுக்கெல்லாம் கோபம் வரக் கூடாதே?!”

“அப்போ நேத்து மட்டும் நீ பெரிய பொன்னாயிட்டே, அதனால பெட்ல உச்சு போகக் கூடாதுன்னு சொன்ன?இப்ப மறுபடியும் நான் குட்டி பாப்பா ஆயிட்டேனா?”

“அம்மா தாயே….பட்டுக்குட்டி, உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது.ஸ்கூலுக்கு லேட் ஆகுது.இன்னைக்காவது கரெக்ட் டைம் நாம ஸ்கூலுக்கு போறோம். டீல்லா நோ டீல்லா?”

“டீல்” என்று அவள் கிளம்ப தயாரானாள்.

ஆதர்ஸ் அவளை குளிப்பாட்டி விட்டு ஹாலுக்கு வரவும், அந்த கேர் டேக்கர் ஒரு பையை தூக்கிக் கொண்டு வந்து நின்றாள்.

“என்னாச்சு?”

“சாரி சார்.என்னால உங்க பொன்னை பாத்துக்க முடியாது”

“ஏன்?”

“சரியான ரெட்டை வாலு சார். என்னால சமாளிக்க முடியல. நீங்களும் எதையுமே கண்டுக்க மாட்டிக்கிறீங்க”

“குழந்தைங்கனா அப்படி தான் இருப்பாங்க. நாம தான் அனுசரிச்சு போகணும்”

“குழந்தையா இருந்தா அனுசரிச்சு போகலாம், ஆனா குரங்கை….”

“ஸ்டாப்! நீங்க கிளம்பலாம்.உங்களோட இந்த மாச சம்பளம் உங்க அக்கௌன்ட்டுக்கு வந்துடும். அவுட்”

அவள் சென்றதும், கோபத்தில் அங்கிருந்த மேஜையை ஒரு குத்து குத்தியவன், உடனே போனை எடுத்து தன் உயிர் நண்பன் மித்ரனை அழைத்தான்.

மறுமுனையில் போனை எடுத்த பார்த்த மித்ரன் மனதிற்குள்ளேயே,’ஆஹா….என்ன இவன் காலையிலேயே கூப்பிட்டுருக்கான்?ரைட்டு! நம்மள ஏதோ வச்சி செய்ய போறான்” என்று பயந்துக்கொண்டே பேசினான்.

“நண்பா….சொல்லு டா”

“என்ன சொல்லு டா?உன் கிட்ட நான் என்ன சொன்னேன்?என் குழந்தைய, அவங்க குழந்தை மாதிரி பாத்துக்கிற ஒரு கேர் டேக்கர் கூட்டிட்டு வானு சொன்னேன்.நீ கூட்டிட்டு வந்தியே, அந்த அம்மா என்ன செஞ்சுச்சு தெரியுமா?”

“சொன்னா தானே டா தெரியும்?”

“என் முன்னாடியே என் அம்முவை குரங்குனு சொல்லுது அந்த அம்மா.இது தான் நீ கேர் டேக்கர் பாக்குற லட்சணமா?”அவன் பல்லைக் கடித்தான்.

“டேய்!உன் அருமை மகளை பாத்துக்கிறதுக்கு ஏதாவது தேவதை தான் வானத்திலேருந்து குதிச்சி வரணும்.சரியான ரெட்டை வாலு!”

“மித்ரா….”

“சரி, சரி கோபப்படாதே! வேற ஏதாவது ஏற்பாடு பண்ணுவோம்.சரி என் டார்லிங் கிட்ட போனை குடு”

“அம்முகுட்டி,மித்ரன் உன் கிட்ட பேசணுமாம்”

அதிதி ஓடி வந்து போனை வாங்கினாள்.

“ஜில்லு”

“போங்க மாமா. நான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கேன்”

“என்னது?என் ஜில்லுக்கு என் மேல கோவமா?ஏன்டி செல்லகுட்டி?”

“நேத்து நீங்க என்னை பாக்க வரேன்னு சொல்லிட்டு வரவே இல்லேல. அதான் கோவம்”

“சாரிடி ஜில்லு. ஒரு முக்கியமான வேலை வந்திடுச்சு அதான். இன்னிக்கு கண்டிப்பா வரேன். ஓகே வா?”

ஒருவழியாக சமாதானம் ஆகி போனை வைத்துவிட்டு, மணியை பார்த்த அதிதி,”அய்யயோ!பாப்ஸ், டைம் பாத்தியா? சின்ன முள் 9 ல இருக்கு.பெரிய முள் 12 ல இருக்கு.அப்ப டைம் 9 தானே.போச்சு போச்சு!இன்னைக்கும் நான் ஸ்கூலுக்கு லேட் தானா?”

ஆதர்ஷ் ஓடி வந்தான்,“இந்தா இப்ப கிளம்பிடலாம். வா வா சாப்பிடலாம். முத்து அண்ணா, இன்னைக்கு என்ன டிபன்? சீக்கிரம் கொண்டு வாங்க. பாப்பாவுக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகுது”

முத்து அண்ணன் இட்லியை எடுத்து வரவும் அதை பார்த்த அதிதி,”இன்னைக்கும் இட்லியா?நோ பாப்ஸ்!என்னால சாப்பிட முடியாது”

முத்து அண்ணன் அவளிடம்,”பாப்பா!எனக்கு இது தான் பாப்பா செய்ய தெரியும். நான் அந்த காலத்து ஆளு பாப்பா. நீ சொல்ற சாப்பாடெல்லாம் நான் கேள்வி பட்டது கூட இல்லை பாப்பா”

“சரி விடுங்க அண்ணன். நான் பேசிக்கிறேன்”

“அம்மு! இன்னைக்கு ஒரு நாள் இதை சாப்பிடுவியாம்.நாளைக்கு அப்பா யூடியூப் பார்த்து உனக்கு பிட்சா செஞ்சு தரேன். டீல்லா நோ டீல்லா?”

“ஹேய்! ஜாலி! டீல்”

கஷ்டப்பட்டு இரண்டு இட்லியை ஊட்டிவிட்டு காரில் சென்றால் நேரமாகும் என்று பைக் சாவியை எடுத்தவன், அவன் செல்ல மகளின் ,”பாப்ஸ்” என்ற அலறலினால் ஓடி வந்து என்னவென்று கேட்டான்.

“பாப்ஸ்!என் சாக்ஸை துவைக்கவே இல்லையா?”

“ஓ,ச்சே!சாரி அம்மு.மறந்துட்டேன் டா.இன்னைக்கு ஒரு நாள் போட்டுட்டு போயேன்.ப்ளீஸ்,ப்ளீஸ்”

சினுங்கிக்கொண்டே அந்த சாக்ஸை அணிய போனவள்,”பாப்ஸ்! பேட் ஸ்மெல் அடிக்குது பாப்ஸ்” என்று முகத்தை சுளிக்கவும்.

“சரி,விடுறி செல்லம். பேசாம சென்ட் அடிச்சிடுவோமா?” என்று கேக்கவும்,அதிதி இடுப்பில் கை வைத்து, அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

ஒருவழியாக இருவரும் கிளம்பி ஸ்கூலை சென்று அடையும்போது மணி 9.45.

ஸ்கூல் வாட்ச்மேன் அவர்களை பார்த்ததும்,”சார்! உங்களை ஹச்.எம் மேடம் வந்து பாக்க சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு போனார்.

“போச்சு,போச்சு!பாப்ஸ்.எனக்கு பயமா இருக்கு. என்னை அடிக்க போறாங்க.”

“ச்சு.அம்மு! அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் பேசிக்கிறேன். பயப்படாம வா”

“போ பாப்ஸ்!உனக்கு ஒன்னும் தெரியாது.நேத்து நம்ம மழைல ஆடிட்டு இருக்கும்போது ஒரு மிஸ்ஸை காமிச்சேனே! அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் தெரியுமா?போன வாரமே, ஏன் டெய்லி லேட்டா வரேன்னு கேட்டாங்க. இன்னைக்கு கண்டிப்பா என்னை அடிப்பாங்க, இல்லேனா நீல்டவுன் பண்ண சொல்ல போறாங்க”

“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க அம்மு”

அவளை சமாதனபடுத்திவிட்டு ஹச்.எம் ரூம் அருகில் சென்றனர். அப்பொழுது மற்றொரு பக்கதிலிருந்து வந்துக் கொண்டிருந்த, சித்ரித்தாவை பார்த்து அதிதியின் முகம் பயத்தில் வெளிறியது…..

சித்திரம் பேசும்


சக்தி பாலா
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
10 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
மகி

😂 சித்ரிதா ரொம்ப strict போல…

சக்தி பாலா

ஆமாங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ர் 😛😛

Mahalakshmi

அதிதியின் அம்மா எங்கே?
அதிதி ஏன் சித்ரித்தாவை பார்த்து பயப்படுகிறாள்?? அடுக்கடுக்காக பல கேள்விகள்…. அடுத்த அத்தியாத்தில் சொல்லி விடுங்கள் 😀…. Nice narration 👌👌

சக்தி பாலா

நன்றி

சக்தி பாலா

நன்றி

Revs

Very nice

சக்தி பாலா

நன்றி

gomathy

Nice 👏

Ambul

அதிதி யின் சேட்டை அழகாக உள்ளது 😃

சக்தி பாலா

நன்றி