கடும் நோயின் அச்சுறுத்தல் இல்லை
மரண எண்ணிக்கை அலைப்புறுதல் இல்லை
வாகனசோதனைகள் இல்லை
மருத்துவ சோதனைகளும் இல்லை
நோய்ப்பரிசோதனை இல்லை
அலட்டலோ பயமோ துளியும் இல்லை
வேப்பமரத்துக் காற்றும்
வேடிக்கைப் பேச்சும்
துளசி தேத்தண்ணியும்
உளுந்தங் கஞ்சியுமாக
பயமின்றி கடக்கும்
தற்சார்பு கிராமத்தானுக்கு
நோயும் பெரிதில்லை
நோய் ஒழிப்பும் பொருட்டில்லை
பட்டினத்தான் பயந்து
பட்டிக்காட்டுப் பக்கம்
ஒதுங்காத வரை.
இப்போதோ,,
ஒட்டுவாரொட்டி ஒட்டிக் கொள்ளுமோ
இல்லை ஒட்டிக் கொல்லுமோ
என வேதனைப் பட்டு
காடுகரை போட்டு வைக்க
கதியும் இல்லை.
ஆனது ஆகடுமென
வேப்பஞ்சாறும் இஞ்சிச்சாறும்
காக்குமென
துண்டுதறி தோளிலிட்டு
வேலைக்கு விரைகிறார்கள்
பெருந்தொற்றை அலட்சியம் செய்தபடி.
-ராஜலக்ஷ்மி