பதினைந்து வயதுப் பெண் குளித்ததை வீடியோ எடுத்தவர்கள் மிரட்டியதால் அவள் தற்கொலை செய்து கொண்டாள் – செய்தி.
நமக்கு அப்பெண்ணின் ஊர், பெயர் ,குலம், கோத்திரம் தேவையில்லை . ஏனெனில் அவள் பெண் என்னும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவள் அவ்வளவுதான். இந்த உலகில் பெண்கள் அனைவருமே தாழ்த்தப்பட்டவர்தானே …நிற்க .
இங்குப் பலரும் ஆலோசனை என்றும் அறிவுரை என்றும் கோபமாகப் பெண் உடல் அரசியல் பற்றிப் பேசி, அப்பெண்ணைப் போன்ற பிரச்சினை எதிர்கொள்ளும் அனைவரையும் துணிந்து நிற்கவும் எதிர்த்து நிற்கவும் கூறுகின்றனர். சரி அப்படியே அப்பெண் தற்கொலை செய்து கொள்ளாமல் எதிர்த்து நிற்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் கயவர்கள் அப்பெண்ணின் வீடியோவை வெளியிடுவார்கள். எத்தனைப் பேருக்கு சம்மந்தப்பட்டவரின் அனுமதியின்றி எடுக்கப்படும் பாலியல் காணொளிகளைக் காணக் கூடாது என்னும் எண்ணம் இருக்கிறது?
“மாப்பிள்ள போர்வ்ர்ட் பண்ணுடா* அதுதானே? ஒரு பதினைந்து வயதுச் சிறுமியின் காணொளி அவளது அனுமதியின்றி எடுக்கப்படு இருக்கிறது என்பதை உணர்ந்த நொடி அந்தக் காணொளியை அழித்து விடுவார்களா? அடுத்தவருக்கு அனுப்பாதே என்று சக நண்பர்களிடத்துச் சொல்வார்களா?
அடுத்து, அப்பெண்ணின் சுற்றம். சுற்றம் என்பது படித்த, படிக்காத, ரத்த உறவு ,பழகிய உறவு, அக்கம் பக்கம் என அனைத்தையும் கவனத்தில் கொள்வோம்.
” இவளுக்குத் தெரியாம இருக்குமா?
“அவனுங்க எப்படி அறிமுகம் ஆனானுங்க?”
” வரச் சோல்லியிருப்பா”
” நிஜமாவே உனக்கு அவங்க படம் எடுத்தது தெரியாதா?”
” நானா இருந்தா ஒருத்தன் குறுகுறுனு பாத்தாலே தெரியும். அந்த சுரணைக் கூட இல்லாம எப்படி?..அப்ப தெரிஞ்சிருக்கும். காட்டிட்டு இருந்திருப்பா”
” பாத்தா தெரியாம எடுத்த மாறி தெரியலியே”
” இப்பல்லாம் இப்படி எடுத்துக்குறது வழக்கமாப் போச்சி “
போன்ற அறிவிலி வசனங்கள் இல்லாமலிருக்குமா?
இத்தனையும் கடந்து வந்தாலும் அந்தப் பொண்ணு வருகையில் கண் ஜாடை காட்டப்படும். படனும். இல்லையா?
கட்டினப் புருஷனே ஆனாலும் அவள் அனுமதி இல்லாமல் அவள் உடல் மேல் உரிமை எடுப்பது தவறு என்று சட்டம் சொல்கிறது. சட்டம் மட்டும்தான் சொல்கிறது. சமுதாயம்தான் முழு உரிமையும் கொள்கிறது இப்படி நட, அப்படி உட்கார், இந்த வயசுக்கு இப்படி இரு. போதும் போதாதற்கு போன் உபயோகப் படுத்தாத, போட்டோ எடுக்காதே, அதை வலைத்தளங்களில் பதியாதே, தனித்து முடிவெடுக்காதே, என்னும் அத்து மீறல்கள் நல்வழிப் படுத்தல் என்னும் திராபையான திறமையோடு நடந்து கொண்டு இருக்கிறது, இன்னும் “செத்துப் போ” என்று மட்டும்தான் கூறவில்லை.
இத்தனை அத்து மீறல்களுக்கு அடிமையாதலுக்கு செத்துப் போகலாம் என்பதை நோக்கித் தள்ளி விடுகிறார்கள் மிக எளிதாக. பிறகு நம் கோபமெல்லாம் வீடியோ எடுத்த கயவர்கள் மீது ஆக்ரோஷமாகத் திரும்பி, திட்டியப் பிறகு அடுத்த சில நொடிகளில் நகைச்சுவைத் காட்சிகள் பார்த்து ஆசுவாசமடைந்து போகிறது. ‘வினுப்ரியா’விற்கும் இதுதானே நடந்தது. எல்லாமும் தான் பழக்கமாகி விடுகிறதே!
தெரிந்தே எடுக்கப்பட்டாலும் தெரியாமல் எடுக்கப்பட்டாலும் அது அவளது உடல், அவள் விருப்பம் என்னும் தர்க்கம் எல்லாம் அடிமைப் படுத்த நினையும் உலகிற்குப் புரியாது .
அவள் அனுமதியின்றி தாலிக் கட்டினால் அவனுக்கு அடிமை மனைவி .
நான்கு பேர் எதையாவது மனம் வருந்தப் பேசினால், சூடு சுரணையுள்ளவள் இறக்க வேண்டும். குளிப்பதைப் பார்த்து விட்டால், நிர்வாண உடல் பார்த்து விட்டால் இறக்க வேண்டும்.
தாலிக் கட்டி விட்டால் கணவன் அவள் உடல் மீது எடுக்கும் வன்முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
குடித்து விட்டு அடித்து விட்டாலும் கடவுளாகியக் கணவனே என்று அவன் பசி அறிந்து ருசியாக சமைத்துப் போட வேண்டும்…. இப்படி எத்தனை எத்தனையோ சினிமாவும் மீடியாக்களும் புராண இத்யாதிகளும் முட்டாள்தனமாகப் போதித்துக் கொண்டே இருக்கின்றன . மாற்றம் எங்கிருந்து எதிலிருந்து என்பதை உணர்ந்து ஆரம்பித்தால் உலகம் வாழும் . இல்லையெனில் நாசமாகும்!
பெண் உறுதியான மனமும் வைராக்கியமும் கொண்டவள் அவளுக்கு இது போன்றவற்றை எதிர் கொள்ள முடியும் அதற்கான சக்தி இருக்கிறது அவளே சக்திதானே ! அதற்கான சமூகச் சூழல் இருக்கிறதா? எப்போதும் நான் உன்னுடன் இருக்கிறேன். இப்யடி அனுமதியின்றி செயல்படுத்தலில் உன் தவறு இல்லை. நீ என் தோழி, என் காதலி ,என் மகள், என் சகோதரி ,என் மனைவி என்னும் குரல் உண்டா உலகில்?? அப்படிக் குரல்களை ஒலிக்கச் செய்துப் பாருங்கள். … பெண் இதற்காகவெல்லாம் அஞ்ச மாட்டாள் .இறக்க மாட்டாள். ‘இந்த வீடியோவை இன்னும் தெளிவாக எடுத்திருக்கலாம் ‘என்று புன்னகைத்துக் கடந்து செல்வாள் .
அகராதி