உரிமையுடையோரின் சொல்

0
208

Happy friends holding each other

ஏசல் , வைதல் , கடிநது கொள்ளுதல் , சுடு சொல் கூறல்  எல்லாமும் திட்டுவதைக் குறிக்கும் என்பதை அறிந்த மனம் , திட்டுவாதற்கு மட்டும் உரிமை உடையோரைத் தேடும்,  இடம் கொடுக்கும்  . திட்டுவது அறிமுகமாற்றவர் எனில் ஒரு மனநிலையும் நெருக்கமானவர் எனில் ஒரு மனநிலையும் வாய்க்கும் . போலவே கொஞ்சுதலும் .. எந்த சொல் என்றாலும்  நமது ஏற்பும் இயல்பும் நமக்கு நெருக்கமானவரித்து உரிமைக் கொண்டு செயல்படும் . இதற்கான பயன்பாட்டுச் சொற்கள் அவ்வப்போது புதிதாய்ப் பிறக்கும் . கொஞ்சுவதும்  திட்டுவதும் மிகையாகிப் போகையில் சொற்களைத் தேடித் தேடி உச்சரிக்கத் தொடங்குகிறோம் . உரிமையுடையோர் உயரத்தியோ கொஞ்சியோ கூறும் சொற்களில் மனம் மகிழும் இல்லையா ?

லூசு என்பது விவிலியத்தில் வரும் இரு இடங்களின்  பெயர். பெத்தேலுடன் தொடர்புடைய  அரச நகரம் லூஸ், லூசு. இந்த லூசும் பெத்தேலும் ஒன்றுதானா என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டாவது லூசு நகரம்

கோலான் ஹெய்டில் உள்ள பானியாஸின் வடமேற்கில் நான்கு மைல் தூரத்திலுள்ள லாசீஸ் அல்லது வஸ்ஸானியால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

எண்பது தொன்னூறுகளில்  ஒடுங்கிய மெல்லிய தேகத்துடன் இடுங்கியக் கண்களை அடிக்கடி ச்சிமிட்டியப் படி சென்னை மொழி பேசிய  அந்த  உருவத்தை தமிழ்த் திரையுலகம் மறந்து இருக்காது. மனம் தடுமாறியவர் போன்ற இவரது உடல்மொழியின் நடிப்பிற்காக, மோகன் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்  இருக்க ,தனித்த  அடையாளம் என  ஆறுமுகம் மோகனசுந்தரம் என்னும் மோகன் லூசு மோகனானார். பரவலாக அறியப்பட்ட லூசு என்னும் சொல் இப்படியாகவும் மக்களைச் சென்றடைந்தது. ஆனால் திரையில்  லைலா ‘லூசாப்பா நீ  ‘ என  அப்பாவித்தனத்தின் அதிகாரமாகக் கேட்பதற்கு முன்னரே சக உறவுகளிடையே நாம் லூசாகி லூசென்று கூறி சகஜமாயிருந்தோம். கூடுதலாக இயக்குநர் பாலாவின் மொழியையும் மகிழ்வாக உச்சரித்தோம் லூசாடா நீ , லூசாடி நீ,  லூசாப்பா நீ என்று .

பூங்காவில் காதல் மொழிந்து மணித்துளிகளை நொடிகளாக்கியப் பிறகு அவ்விடம் அகல எத்தனிக்கும் ஆண் , பைக் கீ எங்கே என்கிறான்.  லூசு உன் கையில்தான் இருக்கு பார்டா என்கிறாள் பெண். இருவரும் சிரிக்கின்றனர் அவர்களுக்குள் அந்த வார்த்தை  எவ்வித சலனத்தையும் மனக்குறைபாட்டையும் உருவாக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அந்த வார்த்தை இயல் வாழ்வின் இயல்பான  ஒன்று. அதே நேரத்தில் வேறொரு சமயத்தில்  அன்பு மொழிகளில் ஒன்று. ஆம்  லூசு என்பது  நம் வாழ்வின் ஆகச்சிறந்த அன்பு மொழிகளில் ஒன்றாகி வருடங்களாகி விட்டது.

பாடலில் லூசுப்பெண்ணே என்று காதலியை லூசுப்பையனாக  அழைக்க வைத்து நம்மை முனகவும் வைத்தது இந்த அன்பு எனும் பைத்தியம் பிடித்தல்தான் .

‘பைத்தியம் ஏன் இப்படிப் பேசற ‘ என்பது கடுமையான மொழியாகவும் ‘லூசு ஏன் இப்படிப் பேசற ‘ என்பது இயல்பாகவ அன்பு மொழியாகவும் மாறிப்போயிற்று

ஆங்கிலத்தில் லூஸ் என்றால் தளர்வாக என்றும் பொருள் உண்டு  எனபது வேறு விடயம். நாம் கூறுவது பைத்தியம் என்னும் பொருளில் அதை அப்படிப் பொருளில் நாம் உச்சரித்தாலும் கண்ணே மணியே என்பது போல் தங்கா முத்தா அஜ்ஜிமா புஜ்ஜிமா எருமை நாயோடு லூசும் கொஞ்சல் மொழியில் ஒன்றாகவெல்லாம் ஆகிப் போகுமென்று  யார்தான் நினைத்திருப்போம் !

குறிப்பு :

உங்கள் நேசத்திற்குரிய லூசுகளுக்கு இந்த எழுத்து சமர்ப்பணம்.

எழுத்து – அகராதி