பெற்ற தாய் இருக்கிறாள்
ஆனால், அவளை விடவும் அதிகமாய் நான் நேசித்துக் கிடந்தது தேசத்தை. பெற்ற தந்தை இருந்தாலும் நெஞ்சில் சுமப்பதென் வேலையை. மனைவி ஒருத்தி இருக்கிறாள். ஆனால் அவளைக் காதலிக்க நேரமில்லாததால் என் படைப் பிரிவையே காதலிக்கிறேன். பெற்றெடுத்த பிள்ளைகளை கையிலெடுத்து கொஞ்சவும் காலமில்லை. உரிய வழி காட்டிடவும் வாய்த்ததில்லை. புதிதாய் படையில் சேரும் இளைஞர்களைக் கண்டு ஆசுவாசம் கொள்கிறேன். இறுதியில் என் தாய் நாட்டிற்காகவே பதியப்பட்ட உயிராய் காற்றோடு கலந்து வீரனாய் உயிர் நீத்த தியாகியாய் போற்றப்படுவேன்.
பெற்றெடுத்தவர்கள் அடுத்தொரு பிள்ளை இருந்தாலும் ஆர்மிக்கே கொடுப்போமென பேட்டி கொடுக்கத்தான் முடியும். கட்டிய மனையாளும் தன் ரணங்கள் மறைத்து பெருமை கொள்ளவே இயலும். எப்போதாவது வந்து எம்முடனே வாழ்வார் தந்தை என்றெண்ணிய பிள்ளைகள் தமது நிராசையை மூடி மண் போட்டு மண்ணுக்காக உயிர் கொடுக்க சித்தமென சபதம் செய்ய மட்டுமே இயலும்.
உயிரென்பது வெறும் எண்ணிக்கையாகலாம் போர்களில். சார்ந்தோர்க்கு மட்டுமே இழப்பின் வலி புரியும்.
இந்நாட்டின் எல்லை காக்க உயிர் நீத்த பெரும் வீரர்களுக்கு வணக்கமும் நன்றியும் சொல்வதைத் தவிர நம்மால் செய்ய இயன்றது ஏதுமில்லை.
எழுத்து
ராஜலட்சுமி நாராயணசாமி