ஒரு கோப்பை தாய்மை

0
218
Flat design mothers day concept
அசைய கூட நேரமில்லாத அலுவலகப் பரபரப்பு.. நிமிர்ந்து பார்த்த போது மணி நாலரையை நெருங்கி விட்டிருந்தது. சீட்டிலிருந்து எழுந்து லேசாக கழுத்து முதுகெல்லாம் அசைந்து கொடுத்தபடி சுசீலாவிடம் போய் “கீழ போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். பல நிறுவனங்கள் இயங்குகிற அந்த வளாகத்தின் கேட்  அருகில் ஒரு காப்பிக் கடை இருக்கிறது. அந்தக் கடைக்குப்   போனபோது தான் அவளைக் கவனித்தேன். கஞ்சி, இஸ்திரி எல்லாம் பார்த்தே இராத ப்ரௌன் நிறப் புடவையில் மஞ்சள் பூக்கள் வெளிரியிருந்தன.. கையில் ஒரு வயர் கூடை. காலில் ஒரு ரப்பர் செருப்பு.. புடவை கொஞ்சம் சுருங்கி மேலே ஏறியிருந்தது. தலையில் எண்ணெய் வைத்து வழுவழுவென்று வாரி கொண்டை போட்டிருந்தாள். அவளது பளபளத்த கருப்பு நிறம்  நவாப்பழத்தை நினைவுபடுத்தியது. அவள் “யண்ணே.. ஒரு காப்பி” என்ற போது அழைத்தது அந்த கைபேசி.. எடுத்த நொடியில் “யம்மா எங்கருக்க?” என்ற பிஞ்சுக் குரல் கைபேசி தாண்டியும் ஒலித்தது.. “ஏட்டி.. வந்துட்டியளா ரெண்டு பேரும்.. சித்தப்பா வீட்ல சாவி இருக்கு .. வீட்ல இருங்க வந்துருதேன்” என்றவள் சட்டென்று திரும்பி.. “யண்ணே.. காப்பி வேண்டாம்.. அதுக்கு பதிலா ரெண்டு வட எடுத்துகிடுதேன்” என்றாள்.. “காப்பி போட்டாச்சும்மா” என்று சலிப்போடு ஒலித்த உரத்த குரலுக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியாமல் பர்சில் இருந்த 20 ரூபாயை பரிதாபமாய் பார்த்தபடி அவள் நின்றிருந்தாள். பேருந்துக்கோ இல்லை வேறு எந்தச் செலவுக்கோ எடுத்து வைத்ததாய் இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. ஆயாசமான அவள் முகத்தைப் பார்த்தபடியே, “அந்தக் காபியை நா வாங்கிக்கறேன்” என்றேன்.. அவள் முகத்தில் பரவிய நிம்மதிக்கு இன்னொரு பெயர் தாய்மையும் தான்.. காப்பியை நான் கைகளில் வாங்கிய போது வடையை எடுத்துக் கொண்டு நகரத் துவங்கியவளை பிடித்து நிறுத்தினேன்.. காபியை அவளிடம் நீட்டினேன் “எம்பொண்ணும் ஸ்கூல் விட்டு வந்துருப்பா” என்றபடி..
கிருத்திகா கணேஷ்